

வகுப்பறையில் வானதி மட்டும் எப்போதும் தனிமையில் இருப்பாள். யார் வந்து பேசினாலும் தலையசைப்பாள் அல்லது புன்னகை மட்டும் செய்வாள். எல்லா மாணவர்களும் வானதியிடம் நெருங்குவதை தவிர்த்து விட்டனர். மான்விழி மட்டும் தொடர்ந்து வானதியிடம் பேசிக் கொண்டே இருந்தாள்.
எறும்பு ஊர கல்லும் தேயும் இல்லையா? அதுபோல வானதி மனதிலும் மான்விழி இடம் பெற்று விட்டாள். பள்ளியில் நடப்பதை எப்போதும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளும் வானதி அன்று மான்விழி பற்றி சொன்னாள். அதற்கு அம்மா வானதியிடம் எல்லோர் மீதும் அன்பு செலுத்த விருப்பத்தை தருவது அன்பு மட்டுமே. அதனால் எல்லோரிடமும் சகஜமாக பழகு என்று சொல்லிவிட்டு கடைக்குச் சென்றாள்.
இரவு முழுக்க தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்தாள். நமக்கு நட்பினால் என்ன கிடைக்க போகுது என்று யோசித்து விட்டு அம்மாவுக்காக பழகு வோம் என்று நினைத்து உறங்கி போனாள். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற வானதியிடம் மான்விழி எங்கள் வீட்டருகே உள்ள பூங்காவில் விளையாட்டுப் போட்டி நடத்துகிறார்கள் நீயும் பங்கேற்கனும் என்று சொன்னாள். நான் அம்மாவிடம் கேட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒப்புதல் கிடைத்ததால் போட்டியில் பங்கேற்றாள்.
வீடு, பள்ளி, என்று இருந்த வானதி தோழியின் வீட்டிற்கு செல்வதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். பூங்காவில் கூடியிருந்த பிள்ளைகளைப் பார்த்து பரவசம் அடைந்தாள். எல்லோ ரிடமும் ஆசை ஆசையாய் பழகினாள். தொடர்பே இல்லாதவர்கள் இவ்வளவு அன்பை பொழிகிறார்களே என்றுநினைத்து அன்பு மழையில் நனைந்தாள். இதுவரை அப்பா, அம்மா மட்டுமே உலகம் என்று இருந்ததை நினைத்துவிட்டோமே, அந்த அன்பு தான் மற்றவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன்.
மான்விழியை நோக்கி சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கூச்ச சுபாவமாக இருந்த என்னை எல்லோரோடும் பழகுவதற்கு தொடர்பை ஏற்படுத்தி தந்ததற்கு மிக்க நன்றி என்று கையை அழுத்தி பிடிக்கும் போது அன்பு வெளிப்பட்டதை உணர முடிந்தது. - இதை தான் வள்ளுவர், அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு என்கிறார். கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்