

தகவல்தொடர்பில் உள்ள மொழிச் சிக்கலைப் புரிந்து கொண்டோம். அடுத்த சிக்கலைப் பற்றிக் கூறுகிறீர்களா என்று வேண்டினான் காதர். அடுத்தது உள்ளடக்கச் சிக்கல் என்றார் எழில். அதாவது எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதா என்று வினவினாள் கயல்விழி. எதைப் பற்றி எப்படிப் பேசுகிறோம் என்பது என்ற எழில், எதைப் பற்றிப் பேசப் போகிறோம் என்பது நமக்கே தெளிவின்றி இருப்பதில் தொடங்குகிறது இச்சிக்கல் என்றார்.
அப்படியானால் தெளிவு பெறுவதற்காகக் கூட பேசக் கூடாதா என்று வினவினான் சாமுவேல். தகவல் தொடர்பின் நோக்கம் தனது எண்ணத்தைத் தெரிவிப்பது மட்டுமன்று; தனக்குக் குழப்பமாக உள்ளவற்றை பற்றி உரியவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவதும், தெரியாதனவற்றைக் கேட்டு அறிவதும் தேவையான அறிவுரைகளைக் கோருவதும் கூட தகவல்தொடர்பின் நோக்கங்களே. எனவே, தெளிவு பெறவும் பேசலாம்.
அப்படியானால், எனக்குக் குழப்பமாக இருக்கிறது. எனவே தெளிவுபடுத்திக் கொள்ளவே கேட்கிறேன் என்று கூறிப் பேச்சைத் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்கள் அதனை முறையாகவும் எளிதாகவும் தெளிவுபடுத்த முடியும் என்று எழில் விளக்கினார். புரிந்தது என்றான் சாமுவேல்.
எதைப் பற்றிப் பேச வேண்டும் என நமக்குத் தெளிவில்லை என்றால் என்ன நடக்கும் என்று வினவினாள் மதி. நமது பேச்சில் தெளிவு இருக்காது. அதனால் தொடர்ச்சியாகப் பேச முடியாது என்றார் எழில். அது வந்து… நான் என்ன சொல்றேன்னா... என்று இடையிடையே சொல்வோமே அப்படியா? என்று வினவினான் முகில். ஆம். அத்தோடு முன்னுக்குப் பின் தொடர்பின்றிக் கூறுவோம் என்றார் எழில்.
தொடர்பில்லாமல் பேசலாமா? - புரியவில்லை என்றான் முகில். நான் சொல்கிறேன் என்று குறுக்கிட்ட இளவேனில், நாங்கள் குடும்பமாகப் பொருட்காட்சிக்குப் போனோம். அப்பொழுது எனக்கும் என் தம்பிக்கும் ஆளுக்கு ஐம்பது ரூபாயை அம்மா கைச்செலவுக்குக் கொடுத்து வீட்டிற்குத் திரும்பியதும் அப்பணத்திற்குக் கணக்குச் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். நானும் தம்பியும் அவரவர் விருப்பப்படி செலவுசெய்தோம். வீட்டிற்குத் திரும்பியதும் நான் செலவுசெய்த முப்பது ரூபாய்க்கு கணக்குச் சொல்லி மீதமிருந்த இருபது ரூபாயை அம்மாவிடம் கொடுத்து விட்டேன். என் தம்பியிடம் பணம் மீதமில்லை.
முப்பத்தைந்து ரூபாய்க்குத் தெளிவாகக் கணக்குச் சொன்னான். மீதமுள்ள பதினைந்து ரூபாயை எதற்குச் செலவிட்டான் என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிவில்லை. எனவே, ஒரு கடையில் நான் மிட்டாய் வாங்கும்பொழுது அக்கா கூப்பிட்டாள். அதனால் நான் அங்கு மீதம் வாங்காமல் வந்தேன். அப்புறம் ஒரு கடையில் இந்த பென்சில் வாங்கினேன். அப்பொழுதுதான் ஒருவர் கோமாளி வேடத்தில் வந்து விளையாட்டுக் காட்டினார். இல்லை… இல்லை… அவர் அங்கே வரவில்லை…ம்… ம்…. ம்… அப்புறம்… இன்னொரு கடையில் இந்த பொம்மை வாங்கினேன்.
அப்பொழுதுதான் முதற்கடையில் மீதம் வாங்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. அதை வாங்கலாம் எனப் போகும்பொழுதுதான் அப்பா கூப்பிட்டார்…இல்லை… அப்பா அப்போ கூப்பிடவில்லை… என்று கூறிக் கொண்டிருந்தானே தவிர கணக்கைத் தெளிவாகச் சொல்லவில்லை என்று தனது அனுபவத்தை எடுத்துரைத்தாள். நானும் கூட கடந்த வாரம் நடந்த பேச்சுப்போட்டியில் இப்படித்தான் முன்னுக்குப்பின் தொடர்பில்லாமல் பேசினேன் என்றான் தேவநேயன். புரிகிறது என்றான் முகில்.
இவற்றை போலவே கேட்பவருக்குத் தொடர்பில்லாதவற்றைப் பேசுவதும் சிக்கலை உருவாக்கும் என்றார் எழில். அப்படியென்றால் என இழுத்தாள் மணிமேகலை. நான் இலக்கியத்தில் படித்த ‘இருண்மையியல்’ கோட்பாட்டை அப்படியே இப்பொழுது உங்களிடம் பேசினால் என்று எழில் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, ஐயோ…மண்டை காய்ந்துவிடும் என்றாள் அருட்செல்வி. சிரிப்பால் நிறைந்தது வகுப்பறை. - (தொடரும்) கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர் தொடர்புக்கு: ariaravelan@gmail.com