ஈசியா நுழையலாம்! - 9: வித்தியாசமான வடிவமைப்பு உயர்கல்விக்கு - NID DAT தேர்வு
வடிவமைப்பு தொடர்பான நுழைவுத் தேர்வுகளில் ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பு, தோல்பொருள் வடிவமைப்பு ஆகியவற்றை பார்த்துள்ளோம். இவற்றுடன் செராமிக், மரப்பொருள், உள்ளலங்காரம், அனிமேஷன், கிராஃபிக்ஸ் போன்றவற்றிலும் வடிவமைப்பு தொடர்பான உயர்கல்வி படிப்புகள் தனியாக உள்ளன.
இந்த படிப்புகளை அகமதாபாத், காந்தி நகர், பெங்களூர் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவமைப்பு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனங்களிலும் இதன் வளாக கல்வி நிலையங்களிலும் சேர்ந்து பலவிதமான வடிவமைப்பு பட்டம் (Bachelor of Design) மற்றும் பட்டதாரி நிலையிலான பட்டயப் படிப்பு (Graduate Diploma Program in Design) ஆகியவற்றை படிக்கலாம். இதற்கு தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் NID-DAT (National Institute of Design – Design Aptitude Test) என்ற நுழைவுத் தேர்வினை எழுதி உரிய கட்-ஆஃப் மதிப்பெண்களை பெற வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை இதர முன்னணி தனியார் கல்லூரிகளும் தங்கள் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்கின்றன.
விண்ணப்பிக்க தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியடைந்தோர் மட்டுமன்றி நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கான வயது உச்ச வரம்பு 20 ஆகும். இதில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.
தேசிய அளவிலான இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பிறந்தநாள், இமெயில், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் முறையான விண்ணப்ப நடைமுறைகளை தொடங்கலாம். விண்ணப்ப தளத்தில் கேட்கப்படும் தனிப்பட்ட மற்றும் கல்வி விபரங்களை பதிவிட்ட பின்னர், மதிப்பெண் சான்றிதழ், கையெழுத்து மாதிரி, புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை தரவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்தையும் ஆன்லைன் வாயிலாகவே செலுத்த வேண்டும்.
தேர்வு நடைமுறைகள்: பிரிலிம்ஸ், மெயின் என 2 நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். முதல் நிலையில் தேர்வானவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு நிலையிலான தேர்வுகளும், 100 மதிப்பெண்களுக்கான 3 மணி நேர தேர்வுகளாக அமைந்திருக்கும். தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. தேர்வு முடிவுகளை இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.
உடனே விண்ணப்பிக்கவும்: ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகள் அக்டோபர் 21 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன விண்ணப்பிக்க கடைசி நாள் 2023, டிசம்பர் 16 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500.
2023, ஜன.8 ஞாயிறு அன்று தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை மார்ச் 30 அன்று மாலை ஆன்லைன் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம். பதிவு, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களுக்கு அணுக வேண்டிய இணையதள முகவரி: admissions.nid.edu/NIDA2023/Default.aspx
மிகவும் குறைவான இடங்கள், செறிவான பாடத்திட்டம், மாறுபட்ட உயர்கல்வி என பெரும்பாலானோர் தவறவிடக்கூடிய அரிதான வாய்ப்புகளை வழங்குகிறது NID DAT தேர்வு. உயர்கல்வியில் போட்டி அதிகரித்து வரும் சூழலில், தரமான கல்வி நிறுவனங்களில் தனித்துவமான படிப்புகளை மேற்கொள்ள விரும்புவோர் இவற்றை பரிசீலிக்கலாம். - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
