

இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சர்வேயர் ஜெனரல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் நினைவாகத்தான், உலகின் மிக உயரமான மலையில் உள்ள மிக உயரமான சிகரம் ‘எவரெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் உயரம்? கடல் மட்டத்தில் இருந்து 29030 அடி (8800 மீட்டர்). இந்த சிகரம், நேபாள நாட்டு எல்லைக்கு உட்பட்டது. சரி, கே2-ன்னா என்னனு தெரியுமா? எவரெஸ்ட்டுக்கு அடுத்ததாக உள்ள, உலகின் இரண்டாவது உயரமான சிகரம். இதன் உயரம் 28251 அடி (8611 மீ).மேலும் கஞ்சன்ஜங்கா, நங்கபர்வதம், தவளகிரி, நந்திதேவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உயரமான சிகரங்கள் இமயமலையில் உள்ளன.
மத்திய ஆசியாவில் பாமீர் முடிச்சு பகுதியில் சுமார் 2500 கி.மீ. நீளத்துக்கு பரவி நிற்கிறது இமயமலை. இந்திய சமவெளிப் பகுதி திபெத்திய மேட்டு நிலப் பகுதிக்கு இடையே, இந்தியாவின் வடக்கு எல்லையாகத் திகழ்கிறது மூன்று இணையான மலைத் தொடர்களைக் கொண்ட இமயமலை.
வடக்கே திபெத் பீடபூமி, வடமேற்கே காரகோரம் மலைத்தொடர், இந்துகுஷ் மலைகள், தெற்கே சிந்து - கங்கை சமவெளிப் பகுதிகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து கிழக்கு வடகிழக்கு திசை வரை சுமார் 2400 கி.மீ. நீள்கிறது.
கிழக்குப் பகுதியில் 150 கி.மீ அகலம்; மேற்குப் பகுதியில் 400 கி.மீ. அகலம் கொண்ட இதன் மொத்த பரப்பளவு 5,95,000 ச.கி.மீ.
இமயமலையினால் ஏதும் பயனுண்டா? - தென் மேற்குப் பருவமழை காலத்துல, கருமேகங்களைத் தடுக்குது. இதனால, நல்ல மழை பெய்யுது. கோடைக் காலத்துல, தன் மீது படிந்துள்ள பனிக் கட்டிகளை உருக்கி தண்ணீராய் மாற்றி ஜீவ நதிகளுக்கு ‘சப்ளை’ செய்யுது.
கணவாய்னா என்ன? - இரண்டு உயரமான சிகரங்களுக்கு இடையே உள்ள, உயரம் குறைந்த இடம் கணவாய் ஆகும். திபெத் பகுதிக்கு உட்பட்ட மானா கணவாய் உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது. இன்னும், வேறெ என்னெல்லாம் இருக்கு?
பீர்பாஞ்சல் எனும் நீண்ட மலைத் தொடர், குல்மார்க், முசெளரி, நைனிடால் உள்ளிட்ட மலைவாசத் தலங்கள் இமய மண்டலத்துல இருக்கு.
வளர்ந்து வரும் மலை: இமயமலை பற்றிய இரண்டு சுவாரஸ்யமான செய்திகளைப் பார்ப்போமா?
பூமியின் மொத்த நிலப் பரப்பில் 0.5% அளவுக்கு இமயமலை விரிந்து நிற்கிறது.
ஓர் ஆண்டில் 5 மி.மீ வீதம் இமயமலை தொடர்ந்து ‘வளர்ந்து’ வருகிறது.
தொடர்ந்து பார்க்கும் முன்பாக, பூகோள அறிவில் சிறந்து விளங்க, ‘துல்லிய தகவல்’ அத்தனை அவசியம் இல்லை; தோராயமான அறிவே போதுமானது.
உதாரணத்துக்கு சென்னை - கன்னியாகுமரி இடையில் உள்ள தூரம் எவ்வளவு? சுமார் 700 கி.மீ. என்று தெரிந்தால் போதும். மிகச் சரியாக 705.9 கி.மீ. என்று அறிந்து இருக்க வேண்டிய தேவை இல்லை.
காரணம், வானவியல் தொடங்கி ஆழ்கடல் வரையில் நாம் அனைத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கிற போது, இந்தப் புள்ளி விவரங்களின் வேறுபாடு, மிகச் சிறிய புள்ளியாய் கவனத்துக்கு உரியதாக அல்லாமல் போய் விடுகிறது.
ஆனாலும், பள்ளித் தேர்வுகளில் வருகிற வினாக்களுக்கு, சரியான துல்லியமான விடைதான் தர வேண்டும். அதற்குத்தான் மதிப்பெண் கிடைக்கும். காரணம், பள்ளிப் பாடங்கள், அடிப்படை உண்மைகளை, சற்றும் சிதைவு இல்லாமல் மிகத் துல்லியமாக நமது மனதில் ஆழமாகப் பதிய வைப்பதை நோக்கமாகக் கொண்டவை. மறந்து விட வேண்டாம்.
தொடர்ந்து பார்ப்போம்: இமயமலையின் உயரமான பகுதிகளில் அடர்த்தியாய் புற்கள், மலையின் சரிவான பகுதிகளில் மண் அப்பிக் கிடக்கிறது. கீழிறங்கி வர வர, அடர்ந்த காடுகள் நம்மை வரவேற்கின்றன. அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில், ஈரப்பதம் மிகுந்து இருக்குற மண் பிரதேசங்கள்ல, உயர் ரக தேயிலை உற்பத்தி ஆகுது. இது மட்டும் இல்லை.
மூங்கில், ஓக், பைன், கானிஃபர், ஆல்டர், தியோதார் மரங்கள் மற்றும் பல நூறு வகை பூச்செடிகள் உள்ளிட்ட தாவரங்கள், இமயமலைப் பகுதியில் ஏராளமா இருக்கு. இமயமலையில், பனிச் சிறுத்தைகள், ஆசிய கருப்புக் கரடிகள், லங்கூர் குரங்குகள், எருதுகள், மலை ஆடுகள், புள்ளிமான்கள், பல்லிகள், அரிய வகைப் பாம்புகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.
இப்போதைக்கு இது போதும்.
‘இமய நதிகள்’ பக்கம் வருவோமா?
இந்த வாரக் கேள்வி: இமயமலையினால் தென் இந்தியா பெறும் நன்மைகள் என்ன?
(வளரும்)
கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com