

ஒருநாள், காட்டுக்குள் எடை இயந்திரம் ஒன்று தோன்றியது. அதன் பயன்பாட்டை, அருங்காட்சியகத்தில் இருந்து தப்பித்து வந்த கிளி சொல்லும்வரை அனைத்து விலங்குகளும் சற்று நேரம் அதை வைத்து விளையாடின. பிறகு விலங்குகள் அனைத்தும் முறை வைத்து தங்கள் எடையைப் பார்த்தன. தொடக்கத்தில் இது பெரிய விளையாட்டாக இருந்தது; ஒவ்வொரு நாளும் எவ்வளவு எடை கூடியுள்ளது அல்லது குறைந்துள்ளது என்று ஒவ்வொரு விலங்கும் பார்த்தது.
இருந்தபோதும், தங்களுடைய எடை குறித்து விரைவிலேயே கவலைப்படத் தொடங்கின. தினந்தோறும் அவைகள் செய்த முதல் செயல், ஓடிச் சென்று தங்கள் எடையைப் பார்த்ததுதான். பிறகு நாள் முழுக்க தங்கள் முகத்தில் எரிச்சலைக் காட்டிக் கொண்டே இருந்தன. இதற்கு காரணம், எடை இயந்திரம் என்ன காட்டினாலும், விலங்குகள் ஒரே அளவில் இருந்தன. வேறு வார்த்தையில் சொல்வதென்றால், “தாங்கள் விரும்பியதைவிட எடை அதிகமாக இருந்தன.”
சில மாதங்கள் கடந்த நிலையில் எடை இயந்திரத்தை விலங்குகள் நிராகரித்தன, உதைத்தன அல்லது, கொன்றுவிடுவதுபோல பார்த்தன. ஒருநாள், நாளை காலை முதல் எல்லாம் மாற வேண்டும் என எடை இயந்திரம் முடிவெடுத்தது. அந்த காலையில், எடை பார்க்க முதலில் வரிக்குதிரை ஓடி வந்தது. எடை இயந்திரத்தின் மேல் வரிக்குதிரை ஏறி நின்றவுடன், அதன் குளம்புகளில், இயந்திரம் கிச்சுகிச்சு மூட்டத் தொடங்கியது.
விரைவிலேயே மிகச் சரியான இடத்தை கண்டுபிடித்ததால் வரிக்குதிரையால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. வரிக்குதிரைக்கு இது மிகவும் கொண்டாட்டமாக இருந்ததால், அதன் பிறகு தன் உடல் எடை குறித்து கவலைப்படவே இல்லை. பிறகு, வாழ்க்கையிலேயே முதல்முறையாக மகிழ்ச்சியாக காலை உணவு சாப்பிடச் சென்றது. அந்த நாளில் எடை பார்க்கச் சென்ற எல்லாருக்கும் அதுவே நடந்தது.
விரைவிலேயே, ஒரு விலங்குகூட அதன் எடை குறித்து ஒருபோதும் கவலைபடவில்லை. மாறாக, இயந்திரமும் அதன் கிச்சுகிச்சும் எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது என்பது குறித்து தங்களுக்குள் பேசின. மாதங்களும் வருடங்களும் கடந்த பிறகு, எடை சொல்வதை இயந்திரம் நிறுத்தியது. அதற்குப் பதிலாக, விலங்குகள் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் இருக்கின்றன என்பதை அளவிட்டு சொன்னது.
இவ்வாறு, ஒருவரின் அழகையும் மதிப்பையும் குறித்துக் காட்டுவதற்கு மகிழ்ச்சியும், நேர்மறையான எண்ணமும்தான் சரியான அளவீடு என்பதை விரைவிலேயே மகிழ்ச்சியோடு விலங்குகள் கண்டுபிடித்தன. இறுதியில், காட்டில் உள்ள ஒவ்வொரு விலங்கும் மிகப் பழமையான மற்றும் பழங்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கிலோ எனப்படும் அளவு முறையையே மறந்துவிட்டன.
தமிழில்: சூ.ம.ஜெயசீலன்
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com