

மணமாகி மூன்று வருடங்களுக்குப் பின் குடும்ப வாழ்க்கையை கவனித்தபடி படித்து வென்று ஐஏஎஸ் பெற்றுள்ளார் ம.அருண்மொழி. இவர், உத்தரப்பிரதேசத்தின் உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விறகு விற்று பிழைத்த விவசாயி ரா.மலைச்சாமி. இவரது மூன்று குழந்தைகளில் ஒருவர் அருண்மொழி. பரமக்குடியின் டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 6-ம் வகுப்பு வரையும், 7 முதல் 9-ம் வகுப்பு வரை ஆரியவைசியர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளார்.
தொடர்ந்து வகுப்பின் முதல் மாணவியாக இருந்துள்ளார். குடும்ப சூழலால், கோயம்புத்தூரில் உள்ள தன் சித்தி வீட்டில் தங்கியவர், பிவிபி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1,2 முடித்துள்ளார். கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக்., 2010-ல் முடித்தார்.
குடும்பத்தார் தந்த ஊக்கம்: கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் ஐ.டி. நிறுவனப் பணி அருண்மொழிக்கு கிடைத்தது. ஆனால், அதேநாளில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் வேலையில் சேராமல் மணமுடித்தார். கணவர் பணியால் இரண்டாண்டுகள் வரை சிங்கப்பூரில் வசித்தார். பின்னர் பிரசவத்துக்காக பரமக்குடி திரும்பினார். அருண்மொழியின் மகன் கவுதமை பார்க்க வந்த உறவினரான ஏ.தினேஷ்குமார் அதே வருடம் ஐஏஎஸ் வென்றிருந்தார். இதனால், ஆந்திரா மாநிலப் பிரிவின் 2013 பேட்ச் ஐஏஎஸ் தினேஷ்குமார் அளித்த யோசனையும், விவரமும் அரு
ண்மொழிக்கு உத்வேகம் ஊட்டியது.
இது குறித்து உபி அதிகாரி அருண்மொழி கூறும்போது, “பள்ளிக்காலத்தில் நான் எப்போதுமே முதல் ரேங்க் மாணவி. 4-ம் வகுப்பில் இருந்து தமிழ் நாளேடுகளை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டேன். இதனால் பொது அறிவை வளார்த்துக் கொள்ளும் ஆர்வம் கூடியது. கல்லூரிக்காலத்தில் ஆங்கில நாளேட்டிற்கு மாறியது அம்மொழியில் திறன் பெற உதவியது. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் பெண்களை அதிகம் படிக்க வைக்காமல் குறைந்த வயதில் மணமுடித்து விடுவார்கள். இதில் நானும் சிக்கினாலும் பிறகு கணவர் மு.கருணாநிதி, அங்கன்வாடி ஊழியரான மாமியார் லஷ்மி, அத்தான் செந்தில்குமார் மற்றும் என் தாய் மல்லிகா ஆகியோரின் ஒத்துழைப்பால் குடிமைப்பணி தேர்வு எழுதி ஐஏஎஸ் வெல்ல முடிந்தது” எனத் தெரிவித்தார்.
தொடக்கத்தில் குடிமைப்பணி தேர்வு எழுத அஞ்சிய அருண்மொழி, 2013-ல் டிஎன்பிஎஸ்சி தேர்வை முதன்முறை எழுதியுள்ளார். ஆனால் தமிழ் மொழி திறனில் சற்றே பின்தங்கி இருந்ததால் அந்த தேர்வை அவரால் வெல்ல முடியவில்லை. பிறகு தம் குடும்பத்தார் அளித்த உத்வேகத்தால் 2015-ல் குடிமைப்பணி தேர்வை முதன்முறையாக எழுதியுள்ளார். விருப்பப் பாடமாக பொது நிர்வாகத்தை தேர்வு செய்தார். எந்த பயிற்சியும் இன்றி முதல் முயற்சியிலேயே நேர்முகத்தேர்வு வரை சென்றார். ஆனால், 17 மதிப்பெண்கள் குறைந்ததால் எந்த பணியும் கிடைக்கவில்லை. இதற்கு காரணமான பொது நிர்வாகப் பாடத்தில் பயிற்சி பெற சென்னையில் ஒரு தனியார் அகாடமியில் இணைந்துள்ளார். 2016-ல் இரண்டாவது முயற்சியில் பிரிலிம்ஸிலும் தேறாமல் போனவருக்கு 2017-ல் மூன்றாவதில் ஐஏஎஸ் கிடைத்துள்ளது.
மகன் உறங்கும்போது... குடிமைப்பணி தேர்விற்கு தான் தயாரானது குறித்து துணை ஆட்சியரான அருண்மொழி நினைவுகூருகையில், “வீட்டில் மகன் உறங்கும் நேரத்தில் விடியற்காலை 4.30 முதல் 8.00 வரை எப்படியாவது எழுந்து படிக்கத் தொடங்கினேன். பிறகு சமைத்து உணவூட்டி மகனை பள்ளியில் விட்ட பின் 9.30 முதல் 12.00 மணி வரை படிப்பை தொடர்ந்தேன். மகனை பள்ளியிலிருந்து அழைத்து வந்த பின் மதிய உணவு ஊட்டி, அவனை தூங்க வைத்த பிறகு 2.00 முதல் 4.30 வரை படிப்பேன். எனது பயிற்சிக் காலம் முழுவதிலும் கணவர் சிங்கப்பூரிலேயே இருந்தமையால், குடும்பச்சுமையை பகிர முடியவில்லை. கரோனாவில் தொடங்கிய ‘வொர்க் பிரம் ஹோம்’ தற்போது கணவருக்கு உபியில் தொடர்கிறது” என விவரித்தார்.
இவரது உபி பணிக்கு பின் தனு மித்ரா எனும் பெயரில் 3 வயது மகளும் உள்ளார். ஐஏஎஸ் பயிற்சிக்காக அருண்மொழி, இணையம் மூலம் பழைய வினாத்தாள்கள், வெற்றியாளர்கள் பேட்டி, அவர்கள் படித்த நூல்கள் மற்றும் விதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தேடி கண்டிருக்கிறார். இவற்றை தொகுத்து எழுதி அதில் தனக்கு உகந்த உத்தியை வகுத்துக் கொண்டார். சுடோகு எனும் எண் விளையாட்டுதான், பள்ளி முதல் கல்லூரி வரை அருண்மொழியின் பொழுது போக்கு. திருமணத்திற்கு பிறகு தன் மகனுக்கும் அதில் ஆர்வத்தை தூண்டிவிட்டார் அருண்மொழி. இதை பற்றி நேர்காணலின்போது குறிப்பிடவே பெரும்பாலான கேள்விகள் சுடோகு பற்றியதாக அமைந்தது.
ஐஏஎஸ் பயிற்சி முடித்த அருண்மொழி, உத்தரப்பிரதேசம் ஜான்சியில் உதவி ஆட்சியரானார். அடுத்து ஆக்ராவில் துணை ஆட்சியரானவர், தம் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட 200 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளார். இதில் வந்த கொலை மிரட்டல்களை பொருட்படுத்தாமல், 30 ஏக்கர் நிலத்தின் வளாகச்சுவர் முழுவதையும் தனது தலைமையில் ஜேசிபியால் இடித்து தள்ளியுள்ளார். மற்றொரு ஆக்கிரமிப்பை அகற்றியபோது அதன் 8 ஏக்கரில் சட்ட விரோதமாக விளைவிக்கப்பட்ட கோதுமை பயிரையும் அறுவடை செய்து அரசுடைமையாக்கினார்.
மூன்றாவது பணியாக பரூக்காபாத்தில் தலைமை வளர்ச்சி அதிகாரியாகத் தொடர்கிறார் அருண்மொழி. இங்கும் அவர் ஏழைகளுக்கானத் திட்டங்களை அனைவரும் பலன்பெற ஒரு செயலியை உருவாக்கி உபி தலைமை அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளார். இவ்வாறு ஆண்களுக்கு இணையாக தம் ஆட்சிப்பணியில் பல சாதனைகள் புரியும் அருண்மொழி, குடும்பத் தலைவியான பிறகும் குடிமைப்பணியில் சாதிக்க முடியும் என்பதற்கான உதாரணம். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in