

தென்னம் பூ வயலுன்னு ஒரு கிராமம் இருந்தது. அங்கதான் ஜீவி பாப்பா இருந்தாள். அவளுக்கு ஓவியம் வரையறுதுன்னா அவ்ளோ பிடிக்கும். பார்க்கும் பொருட்கள் அனைத்தையும் ஓவியமாக மாற்றும் திறமை அவளுக்கு இருந்தது. ஜீவிக்கு மரங்கள்னா ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அதிகமா மரங்களை வரைந்தாள்.
ஒரு நாள் பள்ளிக்கூடத்தில உலக சுற்றுச்சூழல் தினத்திற்காக ஓவியப்போட்டி அறிவிச்சாங்க. வீட்டுக்கு வந்ததும் ஓவியம் வரைய காகிதம் தேடுனா, வீட்டில காகிதம் இல்லை. ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டாள். நாட்டுல மரங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் முன்ன மாதிரி பேப்பர் கிடைக்கிறது இல்லை. கடையில் போய் சொன்னாலும் வர பத்து பதினைந்து நாள் ஆகும். பேப்பர் வாங்குற காரணம் முக்கியமானதாக இருந்தா மட்டும்தான் தருவாங்க என்றார் அம்மா.
ஜீவி பிறப்பதற்கு முன்பிருந்தே வீட்டில் மகிழமரம் இருப்பதால் அதை மகிழண்ணா என்று அழைப்பாள். மகிழ மரத்தடியில் சோகமாக உட்கார்ந்திருந்தாள். மகிழமரமும் ஜீவியும் நிறைய நேரம் பேசிட்டிருந்தாங்க. எனக்கு ஓவியம் வரைய பேப்பர் வேணும் என்றாள். இதுதான் உன் பிரச்சனையா? காலைலவா உனக்காக ஒரு பேப்பர் தரேன் என்றது மகிழமரம்.
அடுத்தநாள் மகிழமரத்தில் பேப்பர் பூத்திருந்தது. பள்ளி விழாவில் மாணவர்களுக்குப் பரிசாக மரக்கன்று வழங்குவது போலவும், அடுத்து அதை மாணவர்கள் வீட்டில் வைத்து வளர்ப்பது போலவும், வளர்ந்த மரத்தடியில் அமர்ந்து ஓவியம் வரைவது போல ஒரு ஓவியம் வரைந்து சமர்ப்பித்தாள் ஜீவி. அந்த ஓவயத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. குழந்தைகளிடம் மரம் வளர்ப்பதின் அவசியத்தை எடுத்துரைப்பதாக உமையவன் எழுதிய ‘தங்க அருவி ரகசியம்- சிறார் கதைகள்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கதை இது.
கதை சொல்லும் சேதி: குழந்தைகளுக்கு பேப்பர், பணம் கொடுத்தால் உடனே கிடைத்துவிடும் என்ற மனநிலையை மாற்றி பேப்பருக்கு முன் வெட்டப்படும் மரங்களைக் குறித்தும் அவசியம் பேச வேண்டும். ஓவ்வொரு பிறந்தநாளின் போது குழந்தைகள் ஒரு மரம் நடலாம் என்கிற விதையை குழந்தைகளிடம் விதைக்கலாம். சுற்றுச்சூழலின் அவசியத்தை அவர்களும் உணர்வார்கள்.
இடும்பவனம்: இடும்பவனத்தை ஆட்சிசெய்து வந்த அரசன் இடும்பன். அங்குள்ள மக்கள் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். இடும்பன் மக்களை எப்போதும் பயத்தோடு வைத்திருக்கா விட்டால், அரசனை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து கொடுமைப்படுத்தினான். தினந்தோறும் தனக்கான உணவாக பழங்களையும் கிழங்குளையும் கொண்டு வரச் சொன்னான். முதலில் இடும்பன் சொன்னதைச் செய்கின்றனர். பின்னாளில் பறவைகளும் விலங்களும் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு விடுவதால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே ஊர் மக்கள் அனைவரும் இடும்பவனத்திலிருந்து வேறு கிராமங்களுக்குச் சென்று விடுகின்றனர். இதை அறிந்த இடும்பன் காட்டில் உள்ள விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடச் சொல்கின்றான். அதன் பிறகும் மக்கள் பசியோடு இருக்கின்றனர். வனத்தின் வளமே மரங்கள் மற்றும் செடிகளில்தான். இங்குள்ள பறவைகளையும் விலங்குகளையும் அழித்துவிட்டால் வனம் எப்படி உருவாகும்? காடை, கௌதாரி, காகம், கரிக்குருவி, மயில், குயில், இருவாச்சி, மைனா, தேன்சிட்டு என பல பறவைகளின் எச்சங்களில் இருந்துதான் வனம் உருவாகிறது என்ற உண்மையை அறிந்து மன்னம் மக்களை பறவைகளையும் விலங்குகளையும் வளர்க்க சொல்கின்றான்.
இப்படி பல்வேறு சிறுகதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இந்நூலை வாசிக்கும் சிறுவர்கள், மரங்களின் பெயர்களையும், பறவைகளின்பெயர்களையும், பூச்சிகளின் பெயர்களையும் அவற்றின் தேவைகளையும், கதைகளின் வழியாக அறிந்து கொள்ளலாம். சூழலியல் கதைகளை மிக எளிய நடையில் கதாசிரியர் உமையவன் விளக்கி செல்கிறார். இயல்வாகை வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. மேலும் இந்நூலில் உள்ள 10 கதைகளையும், 10 குழந்தைகள் சொன்ன கதையின் காணொலியை QR CODE வடிவில் நூலில் இணைத்துள்ளார்கள். - கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மாதிரிப்பள்ளி, திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.