

"பீரியட்ஸ் வரும்போது எல்லாம் பிசாசு மாதிரி கோபப்படறா டாக்டர். தட்டு டம்ளர்லாம் தூக்கி எறியறா. ஸ்கூல்லயும் ஏதோ பண்ணிருப்பா போல. கிளாஸ் டீச்சர்தான் எதுக்கும் ஒரு நல்ல டாக்டரை பாருங்கனு சொன்னாங்க. கவுன்சலிங் எதுவும் தேவைப்படுமா டாக்டர்?"
பிளஸ் 1 பயிலும் அனு அம்மாவின் கவலை தோய்ந்த கேள்வி இது. மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடலில் நடக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் அனுவைப் போன்ற பதின்பருவப் பெண்கள் பலருக்கும் சட்டென மாறும் "மூட் ஸ்விங்" எனப்படும் குணநல மாற்றங்களை ‘பிஎம்எஸ்' (Pre Menstrual Syndrome) என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோபம் மட்டுமல்ல, விரும்பிச் சாப்பிட உட்கார்ந்த உணவு பிடிக்காமல் போவது, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் என ஸ்விட்ச் போட்டாற்போல மாறும் "ஆன்-ஆஃப் மூட்"களுடன் அழுகை, பதற்றம், ஞாபகமறதி, கவனமின்மை போன்ற மனரீதியான அறிகுறிகளும், அதிக சோர்வு, தலைவலி, படபடப்பு, தலைச்சுற்றல், தசை மற்றும் மூட்டுவலி, மார்பகங்களில் கனம் அல்லது வலி, பிறப்புறுப்புகளில் வலி, வயிற்றுப்போக்கு, பாத வீக்கம், முகப்பருக்கள் போன்ற பல உடல் உபாதைகளும் பிஎம்எஸ்ஸின் அறிகுறிகளாக இருக்கலாம்.
பொதுவாக பதின்பருவப் பெண்களின் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன் அளவுகளின் ஏற்ற இறக்கங்களே இதற்குக் காரணம். மாதவிலக்கைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்டிரான் ஹார்மோன்கள், மாதவிலக்கு தொடங்க ஒருவாரம் இருக்கும்போதே தனது உற்பத்தி அளவைக் குறைத்துக் கொள்வதாலும், அதன் காரணமாக மூளையின் உற்சாகத்திற்கு காரணமாய் இருக்கும் செரட்டோனின் அளவு பாதிக்கப்படுவதாலும் உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது.
பெண்களில் 85-90 சதவீதம் பேருக்கு பிஎம்எஸ்ஸின் அறிகுறிகள் காணப்படுகிறது என்றாலும், கிட்டத்தட்ட 60 சதவீத பெண்கள் ஓரிரு நாட்கள் முன்பு மட்டுமே இந்த அறிகுறிகளை உணர்கிறார்கள். மாதவிலக்கு தொடங்கியதுமே இயல்பாகி, மூட் ஸ்விங்கை வெகு எளிதாகக் கடந்தும் விடுகிறார்கள். இவர்களில் 40சதவீதத்தினர் அறிகுறிகளை அதிக நாட்கள் உணர்கிறார்கள். இதனால் இவர்கள் அச்சமயத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவலை தரும் விஷயமாகும். (மூட் ஸ்விங் குறித்த ஆலோசனைகள் தொடரும்) கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com