

தொடர்ந்து சமூக ஊடகங்களை கவனித்து வரும் மாணவரா நீங்கள்? அப்படியானால் ஒன்றினை நீங்கள் நிச்சயம் கவனித்து இருக்க வேண்டும். ஜி.பி.முத்து முதல் அனைத்து சமூக ஊடக பிரபலங்களும் சமீபகாலமாக அவர்களுக்கு வருகிற கடிதங்களை வாசிப்பது போன்ற உள்ளடக்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வடிவத்திற்கு முன்னோடி வானொலியே.
ஒரு காலத்தில் வானொலி நிலையங்களுக்குக் கடிதங்கள் எழுதிவிட்டு, நமது கடிதங்கள் அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்படாதா என்று ஏங்கியது ஒரு காலம். இன்று லைக்ஸ், கமெண்ட்ஸ் வராதா என்பதாக அது மாறிவிட்டது. அவ்வளவுதான்.
இங்கு கடிதம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அன்றும், இன்றும் கடிதங்களை எழுதுவதும், வரும் கடிதத்தை ஆர்வத்தோடு பிரித்து படிப்பதிலுல் உள்ள சுவாரஸ்யம் அலாதியானது. நமக்கே நமக்காக எங்கோ ஒரு இடத்திலிருந்து நேரம் ஒதுக்கி கடிதத்தினையும் அஞ்சல் தலையையும் வாங்கி ஒட்டி எழுதுவதோடு, அதனைத் திரும்ப கொண்டு சென்று அஞ்சலில் சேர்ப்பது வரை, அதில் உள்ள இடர்பாடுகள் அதிகம். அத்தனையும் தாங்கி வருவதுதான் கடிதம்.
உணர்வை தாங்கி வரும் கடிதம்: அதனால்தான் இன்றும் கடிதத்திற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. பயணிக்கும் ஒவ்வொரு கடிதமும் ஒரு உணர்வை தாங்கி வருகிறது. சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக்சுக்கும், கமெண்ட்சுக்கும் உணர்வு இல்லை. அது மாய உலகம். நமக்கு வரும் கடிதத்தினை, நாம் தொட்டு உணரலாம். எப்போதெல்லாம் எழுதியவரின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம், அந்த கடிதத்திற்கு இருக்கும் மதிப்பே தனிதான்.
இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களில் எத்தனை பேர் கடிதம் எழுதுகிறார்கள்? ஒரு காலத்தில் கடித இலக்கியங்களே இருந்தன. ஒருவர் கடிதத்திலேயே ஒரு பத்திரிகையை நடத்தினார். சமீப காலம்வரை கடிதங்கள் ஊடாகவே மாணவர்களின் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வந்தன. இன்று அதனையும் கைப்பேசி அபகரித்துக் கொண்டது. இன்றும் ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் இந்த நடைமுறை உள்ளது.
மாணவர்கள் கடிதம் எழுதுவது அவசியமான ஒன்று. அதற்கு நமது இந்திய அஞ்சல் துறையும் எளிதான வழியை வகுத்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அஞ்சலட்டை, இந்தியாவில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 50 பைசா மட்டுமே. விளம்பரத்துடன் கூடிய மேகதூத் அஞ்சலட்டைகள் 25 பைசா மட்டுமே. கடிதம் எழுதுவதால் என்ன பயன்? கடிதம் உங்களின் எண்ணத்தை சீர்படுத்தும். கையெழுத்தை அழகுபடுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அழகான படங்களை வரையச் சொல்லும். கவிதைகள், கதைகளை எழுதத் தூண்டும். இப்படி இன்னும் பல பல.
கடிதம் எழுத நாங்கள் தயார், ஆனால் யாருக்கு எழுதுவது? எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்கும் மாணவர்களுக்கு ஒரு தகவல். உங்கள் முதல் கடிதத்தை உங்களின் உற்ற நண்பர்களுக்கு எழுதுங்கள், அவர்களையும் கடிதம் வழியாகவே பதில் தரச் சொல்லுங்கள். அதன் பின் பாருங்கள், அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தம் என்னவென்று. அந்த மகிழ்ச்சியைச் சொல்வதற்கு வாக்கியம் இல்லை. அந்தளவிற்குச் சந்தோஷத்தினைக் கொடுக்கவல்லது கடிதங்கள்.
அந்த காலத்தில் பேனா நண்பர்கள் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இன்றைய குழந்தைகளுக்கு அது என்னவென்று கூடத் தெரியாது. இன்றும் அது போன்ற பேனா நண்பர்கள் உலகம் முழுவதும் விரவியுள்ளனர். என்ன? உண்மைதான். அதன் பெயர்தான் மாறிவிட்டது. அவர்களை இன்று ‘போஸ்ட்கிராசர்ஸ்’ (www.postcrossing.com) என்று அழைக்கிறார்கள். இதற்கும் பேனா நட்புக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஆனால், இரண்டுமே கடித வழித் தொடர்புதான்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com