

கடந்த இரண்டு அத்தியாயங்களில் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து பார்த்தோம். சேமிப்பு கணக்கு மூலம் சேமிக்கும் பணத்துக்கு குறைந்த அளவிலான வட்டியே கிடைப்பதால் அதனை லாபகரமான முதலீடாக கருத முடியாது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பண வீக்கத்தை (பணவீக்கம் என்பது பொருட்களின் விலை உயர்வால், பணத்தின் மதிப்பு குறைவது ஆகும்) சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் குறைந்த அளவிலான வட்டியைக் கொண்டு சமன் செய்யவும் முடியாது. எனவே பணவீக்கத்தை சமாளிக்கும் வழிமுறைகளில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்.
அஞ்சலகம், வங்கி ஆகியவற்றில் உள்ள தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) திட்டங்கள் நம்முடைய குறுகிய கால சேமிப்புக்கு மிக சிறந்த திட்டங்கள் ஆகும். இதில் சேமிக்கும் பணத்துக்கு சற்று அதிகமான வட்டியுடன் முதிர்வு தொகை கிடைப்பதால் நம்முடைய பெரிய தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த திட்டங்களை சரியாக பயன்படுத்தி சேமித்தால் பள்ளி / கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நேரத்தில் வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியும். முறையாக சேமித்தால் கல்விக் கட்டணம், மடிக்கணினி, இரு சக்கர வாகனம், நகைகள், உடைகள் என தேவையான பொருட்களையும் நாமே வாங்கிக் கொள்ளலாம்.
தொடர் வைப்பு நிதி (Recurring Deposit)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் முதலீடு செய்வதற்கான எளிய வழிமுறை தொடர் வைப்பு நிதி திட்டம் ஆகும். அஞ்சலகம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலும் இந்த திட்டம் உள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான தொகையை முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் கணிசமான தொகை வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் அல்லது 500 ரூபாய் என்ற தவணையில் வங்கிகளுக்கு ஏற்றவாறு முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச தொகை வரையறை எதுவும் இல்லை.
6 மாதங்கள் முதல் 120 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு 4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. அஞ்சலகத்தில் ஆண்டுக்கு 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக அஞ்சலகத்தில் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் முடிவில் 5.8 சதவீத வட்டியுடன் (ரூ.1,20,000 ரூ.19,395) மொத்த முதிர்வு தொகையாக ரூ.1,39,395 கிடைக்கும்.
ஒருவர் எத்தனை தொடர் வைப்பு நிதி கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த திட்டத்தில் இருந்து இடையில் பணம் தேவைப்பட்டால் பாதியில் வெளியேறலாம். ஆனால் அதற்கு ஏற்றவாறு வட்டி விகிதம் குறையும். முதிர்வடையும் காலத்தில் பணம் யாருக்கு சென்று சேர வேண்டும் என்பதை குறிக்கும் நாமினேஷனையும் தேர்வு செய்யலாம். இந்த திட்டம் குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க, சிறந்த வழியாகும். இதன் மூலம் மாதாமாதம் தவறாமல் சேமிக்கும் பழக்கமும் மேம்படும்.
நிரந்தர வைப்பு நிதி: உயர்கல்வி, திருமணம் போன்ற நமது எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதற்கு நிரந்தர வைப்பு நிதி திட்டம் சிறந்த வழி முறையாகும். அஞ்சலகம், பொது மற்றும் தனியார் வங்கிகளில் இந்த திட்டம் உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் முதியவர்கள் வரை இதில் இணையலாம். இதில் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். அதேபோல ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.5 கோடி வரை (60 வயதுக்கும் குறைவானவர்கள்) முதலீடு செய்யலாம். இதற்கு வங்கிகளுக்கு ஏற்றவாறு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
அஞ்சலகத்தில் நிரந்தர வைப்புத் தொகை முதலீட்டுக்கு 5.50 சதவீதம் முதல் 6.70 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. 1 முதல் 3 ஆண்டு கணக்குகளுக்கு 5.50% வட்டியும், 3 முதல் 5 ஆண்டு கணக்குகளுக்கு 6.70% வட்டியும் வழங்கப்படுகிறது. கணக்கு முடியும் காலத்தில் உரிய வட்டி விகிதத்துடன் முதிர்வு தொகை சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். 18 வயதுக்கும் குறைவானவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்து தொடங்கலாம். இதற்கு நாமினியை தேர்வு செய்ய முடியும். 5 வருட வைப்புத் தொகை வைப்பில் முதலீடு செய்யும் தொகைக்கு (ரூ.1.5 லட்சம் வரை) வருமான வரிச் சட்டம் 80சி-ன் கீழ் வரி விலக்கு பெறவும் முடியும். ஆர்.டி. மற்றும் எஃப்.டி மூலமாக பணத்தை சேமித்தால் வட்டி உங்களை தேடி வரும். (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in