

மக்களின் நலம் பேணும் மருத்துவராக பணியாற்றுவது உயர்ந்த உன்னதமான சேவை. அதிலும் நாடு காக்கும் ராணுவ வீரர்களின் உயிர் காக்கும் ராணுவ மருத்துவராவது உச்சபட்ச சேவை.
கடற்படை, விமானப்படை, தரைப்படை போன்றவற்றில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதிலும் ராணுவ மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பு மிக மிக அரிது. இலவச மருத்துவக் கல்வியோடு ராணுவத்தில் மருத்துவ அதிகாரியாகும் வாய்ப்பு இந்தியாவில் உண்டு. எப்படி இந்த வாய்ப்பைப் பெறுவது?
மஹராஷ்ட்ரா மாநிலத்தின் பூனே நகரிலுள்ள பாதுகாப்புப்படை மருத்துவக் கல்லூரி (Armed Forces Medical College), முப்படைகளில் பணியாற்றும் மருத்துவர்களை உருவாக்கும் கல்லூரியாகும். இது ஆசியாவிலேயே முதல் ராணுவ மருத்துவக் கல்லூரி என்பது கூடுதல் சிறப்பு. இக்கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்படும் மாணவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. மருத்துவப் படிப்பை முடித்த பின்பு முப்படைகளில் ஒன்றில் மருத்துவ அதிகாரியாக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும்.
இக்கல்லூரியில் சேருவது எப்படி? - கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இளம் அறிவியல் (B.Sc.,) பட்டம் பெற்றவர்களும் தகுதியானவர்கள். இளநிலை மருத்துவ நீட் (NEET UG) நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது கட்டாயம். வயது வரம்பு: 17 ஆண்டுகள் முதல் 24 ஆண்டுகள் வரை.
தேர்வு முறை: பாதுகாப்புப்படை மருத்துக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில், ஆங்கில அறிவு, சிந்தனை ஆற்றல் ஆகியவற்றை சோதிக்கும் Test of English Language, Comprehension, Logic and Reasoning (ToELR) என்ற தேர்வும், உளவியல் மதிப்பீட்டு தேர்வும் (Psychological Assessment Test) உண்டு. நீட் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மருத்துவப்படிப்பை முடித்தவர்கள், குறுகிய கால பணிக்கு (Short Service Commission) தேர்ந்தெடுக்கப்பட்டால் 7 ஆண்டுகளும், நிரந்தர பணிக்கு (Permanent Commission) தேர்ந்தெடுக்கப்பட்டால் பணி ஓய்வுபெறும் வரையில் முப்படைகளுள் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள், மாணவியர் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் சேரும்போது ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து பெற்றோரின் கையொப்பத்துடன் பிணை பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம் தவிர செவிலியர் மற்றும்துணை மருத்துவ படிப்புகளும் இக்கல்லூரியில் உண்டு. மேலும் விவரங்களுக்கு afmc.nic.in என்ற வலைதளத்தை பார்வையிடவும். ஈரமும் வீரமும் சம விகிதத்தில் நிறைந்த ராணுவ மருத்துவராகி தேச சேவையாற்ற வாழ்த்துகள்!(தொடரும்) - கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: dilli.drdo@gmail.com