

தமிழக அரசு கடந்த மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு சட்டப்படி தடை விதித்தது. மிகவும் மகிழ்ச்சியான விஷயம். காரணம் ஆன்லைன் ரம்மி பலரின் வாழ்க்கையைச் சூறையாடியது. குறிப்பாக மாணவர்கள். மாணவப் பருவம் என்பதுதங்களுக்கான ஒரு அடையாளத்தைத் தேடும் பருவம். இத்தகைய பருவத்தில் அதிகப் பணம், விலையுயர்ந்த பொருட்கள், ஆடம்பரமான ஆடைகள், அதிநவீன ஸ்மார்ட்போன், பகட்டான வண்டி போன்றவை தம்மிடம் இருந்தால்தான் தன்னுடைய அந்தஸ்து உயரும் என மாணவர்களை விளம்பரங்கள் நம்ப வைக்கின்றன.
ஆனால், இவ்வளவு பொருட்களை வாங்க மாணவர்களிடம் பணம் எங்கிருந்து வரும்? அந்த பணத்தைத் தேடும் படலத்தில்தான் பல மாணவர்கள் சைபர் கிரைமில் சிக்குகிறார்கள். அதிலும் சூதாட்டம் இதில் முக்கிய வலை. விளையாட்டில் எப்போதுமே ஆர்வமாக இருக்கும் மானவர்களைப் பண ஆசை காட்டியும், திறன் மேம்பாடு என்று ஏமாற்றியும் பல சூதாட்ட விளையாட்டுகள் ஆன்லைன் உலகினில் உலாவிக் கொண்டிருக்கின்றன.
இதுவும் சைபர் குற்றமே: வெளியே திறன் மேம்பாடு என்று சொன்னாலும், உங்களைப் பணம் கட்டி ஆடச் சொல்வதும், நன்றாக விளையாடி வென்றால் உங்களுக்குப் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டுவதும் ஒருவித சைபர் குற்றம்தான். இளையோர் அதிகம் புழங்கும் சமூகவலைத்தளங்கள், போலியான இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் விளம்பரங்கள் செய்து பலமாணவர்களை இந்த விஷ விளையாட்டுகளுக்குள் இழுத்து விடுகிறார்கள். விளைவு பணம் இழப்பது, அந்த பணத்திற்காகப் பொய் சொல்லுவது, அதே வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது. மறுபுறம் மனநல பாதிப்புக்குள்ளாகி வெறிபிடித்துத் தொடர்ந்து விளையாடுவது, பசி, உறக்கம் கெடுத்துக் கொண்டு விளையாடுவது, அதே விளையாட்டிற்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைப்பதுவரை சென்றுவிடுவது.
பணம் கட்டி விளையாடாதே: மாணவர்கள் எதிர்காலத்தின் தூண் என்கிறோம். ஆனால், அந்த மாணவர்கள் இப்படி விளையாட்டின் மூலம் சூதாட்டத்துக்கு அடிமையாவது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல. இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு:
1. ஒருபோதும் பணம் கட்டி விளையாடுவது திறனை மேம்படுத்தாது.
2. பொழுதுபோக்காக ஆன்லைன் கேம் விளையாடலாம். ஆனால், அதில் பணம் சம்பாதிக்கலாம் என்கிற தகவலை கண்டாலே விளையாட வேண்டாம். உங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து அவர்கள் உங்களிடமிருந்து பல ஆயிரம் ரூபாய்களைத் திருடி விடுவார்கள்.
3. நண்பர்கள் வற்புறுத்தினாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.
4. ஒருவேளை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு அதனால் உறக்கம் வராமல் போனால், உடலும் மனமும் சோர்வாக தோன்றினால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்களிடம் கூறி தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். (தொடர்ந்து பேசுவோம்) - கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர், தொடர்புக்கு: write2vinod11@gmail.com