மகத்தான மருத்துவர்கள் - 17: இசை கேட்டு காந்தியடிகளிடம் இருந்து வந்த அழைப்பு!

மகத்தான மருத்துவர்கள் - 17: இசை கேட்டு காந்தியடிகளிடம் இருந்து வந்த அழைப்பு!
Updated on
2 min read

ஒரு நல்ல பாடல் உங்கள் மெல்லிய உணர்வுகளைத் தொட்டு அசைக்கிறது. ஆனால், அதே பாடல் பாரதியோ, பாரதிதாசனோ, பட்டுக்கோட்டையோ எழுதும்போது அதில் நெருப்பு பற்றிக் கொள்கிறது. அப்படித்தான் வானொலியில் பாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர், மகாத்மாவின் அழைப்புக்குப் பின் மருத்துவராகி, பின்பு இந்திய வான்படையில் மகத்தான பங்காற்றியுள்ளார். அவர்தான் டாக்டர் விஜயலட்சுமி ரமணன்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் நாராயணய்யர் மற்றும் அனந்தலட்சுமி தம்பதிக்கு, 1924-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம்தேதி பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்ததே ஒரு இசைக் குடும்பம். தாத்தா டி.ஏ.துரைசாமியின் பாடல்கள் என்றால் சுவாமி விவேகானந்தருக்கு அவ்வளவு பிரியமாம். தாத்தாவிவேகானந்தரின் இசை நண்பர் என்றால்,கொள்ளுப்பாட்டனார் அப்பு பாகவதரோ கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ பாகவதரின் முக்கிய சீடராகவும் திருவிதாங்கூர் அரசவையின் இசை வித்வானாகவும் விளங்கியவர். அதையும் தாண்டி இவரின் தந்தை நாராயணய்யர் மட்டும் இசையைத் தவிரவும் கல்வியையும் கற்று, மிகப்பெரிய வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தவர்.

விடுதலைக்காக இசை: விஜயலட்சுமியின் பள்ளிப்பருவத்தில் முதலாம் உலகப்போர் காரணமாக அவரதுதந்தை சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆகவே விஜயலட்சுமி படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அப்படி, பள்ளிப்பருவத்தில் அவரது 15 வயதில் வானொலியில் பாடும் வாய்ப்புக் கிடைக்க படிப்புடன் ஆகாசவாணியிலும் தொடர்ந்து பாடிவந்தார் விஜயலட்சுமி. பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி பயிலும்போது, தானே கீர்த்தனைகளை எழுதி, அவற்றைப் பாடியும் வந்தார். அவரது பாடல்களைக் கேட்டு பிரமித்தார் சரோஜினி நாயுடு அம்மையார். மகாத்மாவிடம் இவரைப் பற்றி சரோஜினி நாயுடு எடுத்துரைக்க மகாத்மா விஜயலட்சுமியை தமிழ் மக்களின் விடுதலை உணர்வை அதிகரிக்க உதவும் தேசப்பற்று பாடல்களைப் பாடும்படி அழைப்புவிடுத்தார். சுதந்திரப் பாடல்களை பாட, மகாத்மா விஜயலட்சுமியை அழைக்கிறார் என்று சரோஜினி நாயுடு சொன்னபோது விஜயலட்சுமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்படி அவர் தொடர்ந்து தேசபக்திப் பாடல்களைப் பாடியும் வந்தார். பாடலில் எவ்வளவு சிறந்து விளங்கினாரோ படிப்பிலும் அதே அளவு சுட்டியாகத்தான் இருந்துள்ளார் விஜயலட்சுமி. இளம்வயது முதலே மருத்துவம் பயில ஆர்வமாக இருந்த அவரை அவர் தந்தையும் தாயும் ஊக்குவித்தனர்.

ஒரே பெண்: பெண்கள் மருத்துவம் கற்பதே அரிதாக இருந்த அந்தக் காலத்தில், 1943-ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில், விஜயலட்சுமி மருத்துவம் பயிலச் சென்றபோது அவரது வகுப்பில் அவர் ஒருவர் மட்டும்தான் பெண் என்றால் நம்மால் அந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா!? தன்னைத் தவிர அனைவருமே ஆணாக இருந்த போதிலும் தனியொருத்தியாக மருத்துவம் பயின்றதுமட்டுமல்லாமல், அதில் சிறந்து விளங்கியதற்காக அன்றைய மருத்துவப் படிப்பிற்கென வழங்கப்படும் மதிப்பிற்குரிய பால்ஃபோர் மெமோரியல் விருதையும் பெற்று, இளநிலை மருத்துவத்தில் தேர்ந்தார்விஜயலட்சுமி. மருத்துவப் படிப்பை முடித்தவுடன் எழும்பூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார். பிறகு அந்த மருத்துவமனையிலேயே பணியில் சேர்ந்தார் டாக்டர் விஜயலட்சுமி.

ஜோடியாக ராணுவத்தில்: சென்னை மாகாணத்தின் சுகாதார இயக்குனராகப் பணியாற்றி வந்த மூத்த மருத்துவரான டாக்டர் விஸ்வநாதனின் மகன் டாக்டர் ரமணனைக் கைப்பிடித்தார் விஜயலட்சுமி. தான் என்னதான் மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்தாலும் மகாத்மா சொன்னபடி சுதந்திரப் போரில் முழுமையாகப் பங்கேற்காதது தனது மனதில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது என்று சுதந்திரத்திற்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் கணவர் அனுமதித்தால் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய தான் விரும்புவதாகக் கணவரிடம் கூறியுள்ளார். அன்புக்கணவர் ரமணனும் மனைவியின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, தானும் உடன்வருவதாகச் சொல்ல.

இருவரும் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கு 1955-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தனர். டாக்டர் ரமணன் மற்றும் டாக்டர் விஜயலட்சுமிக்கு, தம்பதியினராக பணிபுரியுமாறு Indian Army Medical Corps அனுமதி வழங்கியபோது, இந்தியாவிலேயே முதன்முறையாக தம்பதியினராக ராணுவப் பொறுப்பை ஏற்ற பெருமையைப் பெற்றனர் விஜயலட்சுமி தம்பதியினர். விஜயலட்சுமி ஒரு பெண் என்பதைவிட, அவர் ஒரு மருத்துவர் என்பதால் ராணுவ வீரர்களுடன் அவர்களின் குடும்பங்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்த அவரது சேவையின் தேவையைக் கருதி, அவருக்கு அதீத பயிற்சிகளிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டது. அத்துடன் விதிகளுக்கேற்ப அவர் உடுத்தும் ராணுவ உடையை வடிவமைக்கும் உரிமையும் அவருக்கே கொடுத்தது இந்திய வான்படை. அதன்படி முதன்முறையாக, நீல நிறப் புடவையும், காக்கி நிறச் சட்டையும் அணிந்தபடி, வான்படையின் முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்போடு அந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் சிகிச்சை அளித்து வந்தார் டாக்டர் விஜயலட்சுமி. - (டாக்டர் விஜயலட்சுமி மகிமை தொடரும்) கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in