

ஒருவர் பேசும்பொழுது அதனை மறுக்கும் மனதோடு கேட்கக் கூடாது. பேச்சில் இடையே குறுக்கிடக் கூடாது என்பவற்றைப் போல உரையாடலில் பின்பற்றக் கூடாதவை என வேறு எவையேனும் உள்ளனவா? என்று வினவினாள் மதி. நிறைய இருக்கின்றன. அவற்றைத் தகவல்தொடர்புத் தடைகள் என்பர் என்றார் எழில்.
என்னென்ன தடைகள்? என்று இருக்கையின் நுனிக்கு வந்து ஆர்வத்தோடு கேட்டான் அருளினியன். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் என்ற எழில், முதலில் மொழிச்சிக்கல்கள் என்றார். வெவ்வேறு மொழிகள் மட்டுமே தெரிந்தவர்கள் உரையாடினால் சிக்கல் வரத்தானே செய்யும்! என்று சொல்லிப் புன்னகைத்தாள் தங்கம். தகவல் தொடர்பில் மொழி என்றால் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகியன போன்ற பேசுமொழிகளும் (Verbal language) அவற்றில் பயன்படுத்தப்படும் தொனி, அழுத்தம், ஒலியளவு ஆகியன மட்டுமல்ல. அது பேசாமொழிகளையும் (Non-verbal langauge) குறிக்கும் என்றார் எழில்.
குறுக்க பேசாதே! - பேசாமொழிகளா? என்றான் முகில். முகபாவனை, கண்ணசைவு, கண்பார்வை, முகபாவனைகள், கைகால் அசைவுகள், தோற்றம், தோரணை, நெருக்கம், தொடுதல் ஆகிய உடல்மொழியையும் (Body language) அமைதியையும் பேசாமொழிகள் என்பர். இவை ஒருவரின் எண்ணத்தை, உணர்வை ஒலியாக வெளிப்படுத்துவதில்லை செயல்களால் வெளிப்படுத்துகின்றன என்று விளக்கினார் எழில். எப்படி? என்றாள் பாத்திமா. இனியன், மாறன் கதையில் மாறன் தனது தவறை உணர்ந்து தலைகுனிந்து அமைதியாய் நிற்பதைப்போல என்று குறுக்கிட்டுச் சொன்னான் ராஜா.
குறுக்க பேசாதே! என்று தனது தலையைத் திருப்பி அவனது கண்களைப் பார்த்துக் கூறினாள் பாத்திமா. நான் குறுக்கே பேசவில்லை. நீ பேசி முடித்த பின்னர்தான் சொன்னேன் என்று வாடிய முகத்தோடு அடிபட்ட குரலில் அவளைப் பார்த்துக் கூறியராஜா சட்டென்று வேறு பக்கம் தனது தலையைத் திருப்பிக் கொண்டான். இப்பொழுது பாத்திமா தனது தலையைத் திருப்பியதும் ராஜாவின் கண்களைப் பார்த்து முறைத்ததும் பேசாமொழியா? என்று வினவினாள் இளவேனில். கண்மணியின் முகம் வாடியதும் அவன் தலையைத் திருப்பிக் கொண்டதுங்கூட பேசாமொழிதானே? என்று வினவினான் காதர்.
ஆம் என்ற எழில், அவர்களின் உடல்மொழிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கண்டுபிடித்தீர்களா? என்று கூறியவாறு ராஜாவை நெருங்கி நின்று அவனது முதுகில் தட்டிக் கொடுத்தார். பாத்திமாவின் தலையசைவில் அவளது எரிச்சல் வெளிப்பட்டது என்றாள் மணிமேகலை. ராஜாவின் தலையசைவில் வருத்தம் வெளிப்பட்டது என்றான் சாமுவேல். நீங்கள் ராஜாவிடம் நெருங்கி நின்று தட்டிக் கொடுப்பதில் அவன் மீது உங்களுக்குள்ள பாசம் வெளிப்படுகிறது என்றான் தேவநேயன். இப்பொழுது ராஜா ஆறுதலாய் உணர்கிறான் என்பது அவனது முகத்தில் தெரிகிறது என்றான் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த அழகன். சும்மா இருடா…என்று தனக்குள் பொங்கிய வெக்கச்சிரிப்பை அடக்கிக் கொண்டு அழகின் தோளைப் பிடித்துத் தள்ளினான் ராஜா.
புரியாதபடி பேசுவதும் சிக்கல்: அருமை. பேசாமொழிகளையும் அவை உணர்த்தும் பொருள்களையும் சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள் என்று பாராட்டிய எழில், “இன்று ஏல்லெழுத்தகாலை என்றன் உள்ளத்தே பூத்ததை இக்கண் புகன்றேன்..” என்று கூறத் தொடங்கியதும் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்தனர். “புரியவில்லை” என்றாள் இரண்டு கைகளையும் தூக்கி அசைத்தாள் கயல்விழி. அதைக்கண்டு வாய்விட்டுச் சிரித்த எழில், கேட்பவருக்குப் புரியாத சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதும் மொழிச்சிக்கல்தான் என்றார். புதிய சொற்களைப் பேச்சில் பயன்படுத்தவே கூடாதா? என்று வினவினாள் தங்கம். முதன்முறை பயன்படுத்தும் பொழுது அதன் பொருளையும் கூற வேண்டும் என்ற எழில், குழப்பமாகச் சொல்வது, சரியான சொற்கள் தெரியாமல் இருப்பது ஆகியன எல்லாம் தகவல் தொடர்பில் மொழிச்சிக்கலை உருவாக்குகின்றன என்று கூறி அன்றைய வகுப்பை நிறைவுசெய்தார்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன்
கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும்
பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com