

நாம் இதுவரை மின்அழுத்தம் (வோல்டேஜ், V), மின்ஓட்டம் (கரண்ட், I), மின்தடை (ரெஸிஸ்டன்ஸ், R) மற்றும் மின்சக்தி (பவர், P) பற்றியும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை இரண்டு சூத்திரங்கள் வாயிலாகவும் பார்த்தோம்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் எல்லா மின்சாதனங்களும் ஒரு வித மின்தடைதான் உள்ளது. ஆனால்,சாதாரண மக்களுக்கு மின்தடை பற்றி தெரியாது. ஆகவேதான் மின்சாதன உற்பத்தியாளர்கள் மின்சாதனங்களை மின்சக்தி கொண்டு குறிப்பிடுகிறார்கள். அதாவது 5W, 20W, 40W, 60W, 100W, 1000W என்று வாட் அலகால் (Unit) குறிப்பிடுகிறார்கள். ஆனால், இவை எல்லாம் மின்தடையே. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் 230W மின்சாதனத்தை உற்பத்தி செய்கிறார் என்றால், அவர் அதனை 230W@230V என்றுதான் குறிப்பிடுவார். அதாவது அந்த மின்சாதானத்திற்கு 230V கொடுத்தால் மட்டுமே அது 230W மின்சக்தியை செலவழித்து அதற்கு ஈடான மற்ற சக்தியைத் தரும். அதுவே 230W-ற்கு பதிலாக 200V கொடுத்தால் அந்த மின்சாதனம் 230W மின்சக்தியை விட குறைந்த மின்சக்தியை செலவழித்து அதற்கு ஈடான மற்ற சக்தியைத் தரும். அதனால்தான் வீடுகளில் மின்சாதானத்திற்கு 230V மின்அழுத்தம் தரவில்லை என்றால் அவை சரியாக வேலை செய்வதில்லை. இப்பொழுது ஒரு மின்சாதனத்தின் மின்தடையைக் கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம்.
P = V x I ; I = P / V
ஆகவே 230W@230V மின்சாதனத்தின் ஊடே செல்லும் மின்ஓட்டம்
I = 230W / 230V = 1A
இப்பொழுது நமக்கு மின்சாதனத்தின் மின்அழுத்தம் மற்றும் அதன் ஊடே செல்லும் மின்ஓட்டம் தெரியும். அதன் மூலம் மின்தடையைக் கண்டறியலாம்.
V = I x R ; R = V / I
ஆகவே மின்தடை R = 230V / 1A = 230.
இதன் மூலம் 230W@230V மின்சாதனத்தின் மின்தடை 230 என்று கண்டறிந்தோம்.
மின்சக்தியை எவ்வாறு மாற்றுவது?
ஒரு மின்சாதனத்தின் மின்தடையை நம்மால் மாற்ற இயலாது. ஆகவே ஒரு மின்சாதானத்திற்கு குறிப்பிட்ட மின்அழுத்தத்தைக் (230V) கொடுத்தால், மின்சாதனம் குறிப்பிட்ட மின்சக்தியை பெற்று அதற்கு ஈடான மற்ற சக்தியை தரும். இது மின்விசிறிக்கும் பொருந்தும். இப்பொழுது ஒரு மின்விசிறியின் மின்சக்தியை எவ்வாறு மாற்றுவது என்று பார்க்கலாம்.
P = V x I ; V = I x R ;
P = I x R x I = I x I x R ;
அதாவது ஒரு மின்விசிறியின் மின்தடை 100 எனவும், அதன் ஊடே செல்லும் மின்ஓட்டத்தின் அளவு 2A ஆகவும் இருந்தால், அந்த மின்விசிறி பெறும் மின்சக்தி
P = 2A x 2A x 100 = 400W
இப்பொழுது மின்விசிறியின் ஊடே செல்லும் மின்ஓட்டத்தின் அளவை 1A ஆக குறைத்தால் அந்த மின்விசிறி பெறும் மின்சக்தி
P = 1A x 1A x 100 = 100W
அதாவது மின்விசிறி பெறும் மின்சக்தி 4 மடங்கு குறைகிறது. ஆகவே மின்விசிறியின் ஊடே செல்லும் மின்ஓட்டத்தின் அளவை மாற்றினால் மின்விசிறி பெறும் சக்தி மாறுகிறது. மின்விசிறியின் மின்தடையை நம்மால் மாற்ற இயலாது. ஆகவே மின்விசிறியின் ஊடே செல்லும் மின்ஓட்டத்தை மட்டுமே மாற்ற இயலும். இதற்குதான் நாம் ரெகுலேட்டரை பயன்படுத்துகிறோம். மின்சப்ளைக்கும் மின்விசிறிக்கும் இடையே ரெகுலேட்டரை பொருத்துகிறோம். இந்த ரெகுலேட்டர் எவ்வாறு மின்விசிறியின் ஊடே செல்லும் மின்ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம். - கட்டுரையாளர்: பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்