நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 16: கிராமத்து அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்த ஐஐஎஸ்

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 16: கிராமத்து அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்த ஐஐஎஸ்
Updated on
3 min read

கிராமத்து அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்ற ராஜதுரை பன்னீர்செல்வம், குடிமைப்பணி தேர்வில் இந்திய தகவல் பணி(ஐஐஎஸ்) பெற்றுள்ளார். 2017-ல் யூபிஎஸ்சி-யில் வெற்றி பெற்றவர், அகில இந்திய வானொலியின் டெல்லி தலைமையகத்தில் துணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இந்த இளம் அதிகாரி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் விவசாயக் கிராமமான கருவாக்குறிச்சியை சேர்ந்தவர். துரை பன்னீர்செல்வம், மல்லிகா தம்பதிகளின் இளைய மகன். சிறுகுறு நில விவசாயி என்பதால் அதற்கு நீர் பாய்ச்சவே மற்றவர்களை நம்பும் சூழல். இதனால், தன் கிராமத்தில் ஒரு சிறிய உணவு விடுதியையும் பின்னர் மளிகை கடையையும் ராஜதுரையின் தந்தை நடத்தியுள்ளார். இத்தகைய பொருளாதார சூழலில், குடிமைப்பணி தேர்வு எழுதியவருக்கு ஏழாவது முயற்சியில் ஐஐஎஸ் கிடைத்துள்ளது.

தாமதமான வெற்றி: அரசு மேல்நிலைப்பள்ளி, கருவாக்குறிச்சியில் பிளஸ்2 (உயிரியல்) வரை தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்றார் ராஜதுரை. முதல் வகுப்பு முதல், முதலாவது மதிப்பெண் பெற்று வந்ததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளையாகவும் இருந்துள்ளார். 10-ம் வகுப்பிலும், பிளஸ்2விலும் பள்ளியின் முதல் மாணவரானார். இதன்பின், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையாகிவிட்ட, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழிருந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.இ.எலக்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2010-ல்முடித்தார். முதன்முறையாக இளங்கலையில் ஆங்கிலத்தில் படிப்பது கிராமத்து மாணவரான ராஜதுரைக்கு பெரும் சவாலானது. இதையும் சமாளித்தவர், மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வு எழுத முடிவு செய்தார். 2010, 2011-ஆண்டுகளில் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளிலும் முதல்நிலையான பிரிலிம்ஸில்கூட வெல்ல முடியவில்லை. எனினும், மூன்று முதல் ஆறு வரையிலான முயற்சிகளில் மெயின்ஸிலும் வென்று நேர்முகத்தேர்வு வரை சென்றும் பலனில்லை. இதுபோல், தொடர்ந்து மூன்றுமுறை நேர்முகத்தேர்வு வரை செல்வதே குடிமைப்பணி தேர்வாளர்கள் இடையே சாதனையாகக் கருதப்படுகிறது. இதில், எந்த பணியும் கிடைக்காவிட்டாலும் மனம் தளராது ஏழாவது முயற்சியில் அவருக்கு கிடைத்தது ஐஐஎஸ்.

இது குறித்து அதிகாரி ராஜதுரை பன்னீர்செல்வம் பேசும்போது, “நாங்க நல்ல நிலைக்கு உயர்ந்து, குடும்பத்துக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கனும் என்பதுதான் அப்பாவுடைய ஆதங்கமா இருந்தது.இதற்காக அவரும், அம்மாவும், அண்ணன்ராஜாவும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துனாங்க. அதிலும் எங்க அண்ணன் ராஜா பட்டம் பெற்று பணியாற்றி குடும்பச் செலவை சமாளித்ததும் என்னை குடிமைப்பணி அதிகாரியாக்கியது. எனினும், எனக்குமுறையான வழிகாட்டுதல் கிடைக்காதமையால், தாமத வெற்றியாக ஐஐஎஸ் பெற்றேன்” என நெகிழ்ந்தார். ராஜதுரை முயன்ற சமயத்தில் குடிமைப்பணியில் 24 வகையான பணிகள் இருப்பதன் விழிப்புணர்வு அதிகம் இல்லை. இதில் ஐஏஎஸ் மட்டும் இருப்பதாக எண்ணுபவர்கள் உண்டு. இதனால், தான் முதல்முறையாக 2012-ல் நேர்முகத்தேர்வுக்கு சென்றதினாலேயே அவருக்கு ஐஏஎஸ் கிடைத்துவிட்டதாக, வீட்டில் தவறாக புரிந்து கொண்டு மகிழ்ந்தனர். இந்த அப்பாவி செயல் ராஜதுரைக்கு, இத்தேர்வில் எப்படியும் வெல்வது என உறுதி கொள்ள செய்தது. ஐஐஎஸ் வெற்றிக்கு பிறகும் ஐஏஎஸ் பெற தன் கடைசி வாய்ப்பை பயன்படுத்தியவருக்கு அது கிடைக்கவில்லை. இதற்கு காரணம் 2010 முதல் 2017 வரை மத்திய அரசு குடிமைப்பணி தேர்வில் சி-சாட் கொண்டுவந்ததுதான். இதனால் ராஜதுரைக்கு கடினமான சூழலை உருவாக்கியது. ஐஐஎஸ் பணியிலும் பொதுமக்களுக்கு சமூகப்பணி ஆற்ற இயலும் என்பதை புரிந்துகொண்டு திறமையாகப் பணியாற்றுகிறார் ராஜதுரை.

தபால் நிலையத்தில் கிடைத்த விண்ணப்பம்: இது குறித்து அகில இந்திய வானொலி நிலையத்தின் துணை இயக்குநரான ராஜதுரை கூறும்போது, “எனது நண்பருடன் தபால் நிலையம் சென்றபோது ஏதேச்சையாக அங்கு யூபிஎஸ்சி விண்ணப்பம் கிடைப்பது அறிந்து வாங்கினேன். இதுதான் எனக்கு யூபிஎஸ்சி மீதான முதல் அறிமுகம். சென்னை அண்ணாநகரில் தமிழக அரசின் குடிமைப்பணி பயிற்சியில் இலவசமாக தங்கிப் பயிலும் வாய்ப்பும் கிடைத்தது. சிறுவயது முதல் எங்கள் சிற்றுண்டி விடுதிக்கும் வந்த தமிழ் நாளேட்டை பாதுகாத்து வைத்து படித்து முடிப்பேன். இதன் மூலம் வளர்த்துக் கொண்ட பொது அறிவு மற்றும் தமிழ் மொழி அறிவினால் யூபிஎஸ்சியின் அனைத்து முயற்சிகளிலும் தமிழ் இலக்கியமே என் முக்கிய விருப்பப்பாடமானது. நான் தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளையும் எழுதினேன்” என நினைவுகூர்ந்தார்.

இதன் பலனால், 2012-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 எழுதி வணிகவரித்துறை உதவி அலுவலராக சென்னை எழிலகத்தில் பணியாற்றி உள்ளார் ராஜதுரை. குடிமைப்பணியில் முழுமையாக மூழ்கி படிக்க வேண்டி, இப்பணியை ஆறு மாதங்களில் ராஜினாமா செய்துவிட்டார். இதேவருடம் எழுதிய வங்கித் தேர்விலும் இந்தியன் வங்கியில் கிடைத்த எழுத்தர் பணியையும் அவர் ஏற்கவில்லை. 2016-ல் மத்திய உளவுத்துறை தேர்வு எழுதி உதவி உளவுத்துறை அதிகாரியாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் ஒரு வருடம் பணியாற்றினார். அதே வருடம் அவர் விரும்பி எழுதிய குடிமைப்பணி தேர்வில் ஐஐஎஸ் கிடைக்கவே அதில் இணைந்தார். ஐஐஎஸ் பணியில் டெல்லியின் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்கள், லண்டனின் தாம்ஸன் பவுண்டேஷன் ஆகிய பலவற்றின் பயிற்சிக்கு பின் ராஜதுரை, அகில இந்திய வானொலியின் செய்திகள் பிரிவின் துணை இயக்குநராக உள்ளார். தான் விரும்பிய குடிமைப்பணியில் கிராமவாசி ராஜதுரை பெற்ற வெற்றி அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் முன்னுதாரணமாகிவிட்டது. - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in