

எப்படியாவது வெளுப்பாகிட வேண்டும் என்கிற ஆசையில் காலை எழுந்ததும் முகம் கழுவ ஒரு கிரீம், கழுவிய முகத்துக்கு தடவிக் கொள்ள ஒரு கிரீம், குளிக்க ஒரு சோப், முகத்துக்கு வேறு ஒரு பேக், குளித்த பிறகு கை, கால் அழகைப் பாதுக்காக்க ஒரு லோஷன் என்று தினந்தோறும் நம்மில் பலர் பலவற்றை பூசுகிறோம். கிட்டத்தட்ட சிவப்பு அழகுக்காக நாம் ரசாயன அமிலங்களில்தான் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை என்று சொன்னதுடன் கடந்த வாரம் முடித்தோம்.
ஆனால், சுனிதா கேட்ட கேள்விக்கு மேலும் சில விளங்கங்களை சொல்ல வேண்டி இருக்கிறது. ஆம் சுனிதா, இந்த சிவப்பழகு கிரீம்களில் உள்ள ஹைட்ரோ-க்வினோன் எனும் ரசாயனம், ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்ட் போலவே செயல்படுகிறது. இதனால் உங்கள் சருமத்தின் நிறம் வெளுப்பாகும்போதே தோலில் அழற்சியையும் அது ஏற்படுத்துகிறது. இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கிரீம்களில் காணப்படும் நிக்கல், க்ரோமியம், மெர்க்குரி ஆகிய தடைசெய்யப்பட்ட ரசாயன பொருட்களால் தோல் புற்றுநோய் வரை வரும் அபாயம் உள்ளது என்று தோல்நோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இத்தகைய சிவப்பழகு கிரீம்களில் பலவற்றில் உள்ள ஸ்டீராய்டுகளால் தோல் மிருதுவாகி, அதனுடன் முகப்பருக்கள், கருந்திட்டுகள், அலர்ஜி மற்றும் எளிதில் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.
நிறைய நீர் பருகுங்கள்: அப்படியென்றால் எந்தவொரு கிரீமையும் உபயோகப்படுத்தக் கூடாதா டாக்டர் என்றால், கற்றாழை, மஞ்சள், சந்தனம் போன்ற இயற்கைப் பொருட்கள் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தலாம் அல்லது அவற்றை நேரடியாகவும் உபயோகிக்கலாம். ஆனால், நிச்சயமாக ரசாயனப் பொருட்கள் நிறைந்த சிவப்பழகு கிரீம்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இவை அத்தனைக்கும் மேலாக, சுத்தமான நீரில் அடிக்கடி முகத்தைக் கழுவுவது, ஒருநாளில் எட்டு முதல் பத்து டம்ளர்வரை தண்ணீர் பருகுவது, வைட்டமின் சி நிறைந்த பழங்களையும், கீரை காய்களையும் அதிகம் உட்கொள்வது, வெயிலில் வெளியே செல்லும்போது குடை உபயோகிப்பது போன்ற எளிய முறைகள் சருமத்தை வெளுப்பாக்கா விட்டாலும், ஆரோக்கியத்துடனும் பொலிவுடனும் இருக்க வழி செய்யும் என்பதே உண்மை.
ஆக சுனிதா, ஆண்களோ, பெண்களோ தொடர்ந்து மனிதர்களின் நிறம் மட்டுமே அழகு என்று கூறி வரும் விளம்பரங்களையும் பேச்சுக்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வோம். உண்மையில் எந்த நிறமாய் இருந்தாலும் இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்தத் தோல்தான், நமது மிகச் சிறந்த ஆபரணம் என்பதை நாம் உணர்ந்து நடப்போம். மேலும், அழகு என்பது சிந்தனை மற்றும் செயலில்தான் உள்ளதே தவிர, நிறத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொள்வோம். நம் சருமத்தைக் காப்போம். - (ஆலோசனைகள் தொடரும்) கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com