

பணத்தை சேமிக்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. வங்கியில் பணத்தை சேமித்தால் பாதுகாப்பாக இருப்பதுடன், அதற்கு நல்ல வட்டியும் கிடைக்கிறது. சிறியவர் முதல் முதியவர் வரை வயதுக்கு ஏற்றவாறு சேமிப்பு கணக்குகளை வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இளம்வயதிலே வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவது எதிர்கால வாழ்க்கைக்கு போடப்படும் உறுதியான அஸ்திவாரம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு சேமிக்கும் பணம் மருத்துவ தேவை, உயர் கல்வி, விபத்து, திருமணம் போன்ற தேவைகளுக்கு பயன்படும். குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கிகள் பல்வேறு விதமான சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதுடன், நெருக்கடி காலத்தில் எளிய முறையில் கடன் வழங்கி ஆபத்பாந்தவனாகவும் இருக்கின்றன.
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) குழந்தைகளுக்கு 2 வகையான சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பெஹ்லா கதம் (Pehla Kadam), பஹ்லி உடான் (Pehli Udaan) . இதில் 10 வயதை கடந்த சிறுவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் உடன் இணைந்து ஒரு ரூபாய் கூட வங்கி கணக்கில் வைக்காமல் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். பிற வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை கட்டாயம் பேண வேண்டும். இல்லாவிடில் அபராதம் விதிக்கப்படும். ஆனால், இந்த கணக்குகள் குழந்தைகளின் நிதி ஆதாரத்தை கருத்தில் கொண்டு ஜீரோ பேலன்ஸாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பாஸ்புக், மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், குறுந்தகவல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குழந்தையின் பெயர், ஃபோட்டோ அச்சிடப்பட்ட ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி மாதத்துக்கு 5000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம். மொபைல் பேங்கிங் வாயிலாக ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம். 10 காசோலைகள் அடங்கிய செக் புக் வழங்கப்படுகிறது. இதில் 1 லட்சம் ரூபாய் வரை சேமித்தால் ஆண்டுக்கு 3% முதல் 3.25% வரை வட்டி கிடைக்கும்.
எளிய முறையில் கல்வி கடன்: மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு கனரா வங்கி ஜூனியர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்து கூட்டாக கணக்கு தொடங்கலாம். நகர்ப்புறங்களில் 1000 ரூபாய், கிராமப்புறங்களில் 500 ரூபாய் வரை மாதந்தோறும் சேமிக்கலாம். இதிலும் பாஸ்புக், ஏடிஎம் டெபிட் கார்ட், நெட் பேங்கிங், ஃபோன் பேங்கிங், குறுந்தகவல் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வரை சேமிக்கலாம். ரூ.5 ஆயிரம் வரை ஏடிஎம் டெபிட் கார்ட் மூலம் எடுக்கலாம். கல்வி கட்டணத்தை டிடி, ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் போன்ற சேவைகளின் வாயிலாக செலுத்தலாம். இதற்கு எவ்வித கட்டணமும் விதிக்கப்படாது. இந்த கணக்கை பராமரிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு எளிய முறையில் குறைந்த வட்டியில் கல்வி கடனும் வழங்கப்படுகிறது. இதில் சேமிக்கும் பணத்துக்கு தினசரி 3.20% வரை வட்டி வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் கல்வி காப்பீடு: தனியார் வங்கிகள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு கவர்ச்சி கரமான சேமிப்பு கணக்குகளை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஹெச்டிஎஃப்சி வங்கியில் 10 வயதை கடந்த சிறுவர்கள் பெற்றோர்/காப்பாளர் துணையுடன் குழந்தைகள் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். இதிலும் பாஸ்புக், ஏடிஎம் டெபிட் கார்ட், நெட் பேங்கிங், ஃபோன் பேங்கிங், குறுந்தகவல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் 1000 ரூபாய் வரை சேமிக்கலாம். ஏடிஎம் டெபிட் கார்டில் 2500 ரூபாய் எடுக்கலாம். கடைகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை பயன்படுத்தலாம். இந்த கணக்கில் இணைந்த உடன் ரூ.1 லட்சம் வரை கல்வி காப்பீடாக அளிக்கப்படுகிறது.
பெற்றோர் அல்லது காப்பாளர் விபத்தில் திடீரென உயிரிழந்தால் குழந்தைகளின் கல்வி தேவைக்கு அந்த தொகை வழங்கப்படும். சேமிப்புக் கணக்கில் 35 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் சேமித்து வைத்திருந்தால் அதில் 25 ஆயிரம் ரூபாய் நிரந்தர வைப்புக் கணக்கில் ஓராண்டுக்கு வைக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் தொகைக்கு 3% முதல் 3.5% வரை வட்டி வழங்கப்படும். இதுதவிர வேறு சில வங்கிகளும், அஞ்சலகமும் நல்ல சேமிப்பு கணக்குகளை கொண்டிருக்கின்றன. வீட்டில் குழந்தைகள் உண்டியல் மூலமாக சேமிக்கும் பணத்தை மாதத்துக்கு ஒரு முறையோ, 3 மாதத்துக்கு ஒருமுறையோ வங்கியில் செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இவ்வாறு போடப்படும் சேமிப்பு விதை, 18 வயதுக்கு மேல் அவர்களுக்கு ஏராளமான கனிகளை வழங்கும்! (தொடரும்) - கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in