சிறுகதை: ஜானி என்ற பல்லி

சிறுகதை: ஜானி என்ற பல்லி
Updated on
2 min read

ஊருக்கு வெளியே சில பாறைகளுக்கு நடுவில் ஜானி என்றொரு பல்லி வாழ்ந்தது. மற்ற பல்லிகளைப் போலவே சமதளமான பாறையில் படுத்து அமைதியாக சூரியக் குளியல் போடுவது ஜானிக்கு பிடிக்கும். அவ்வாறு செய்யும்போது களைப்பெல்லாம் போனதுபோல உணரும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அப்படியே தூங்கியதும் உண்டு. ஜானி தன் வாலை இழந்தபோது சரியாக அதுதான் நடந்தது: தூங்கிக் கொண்டிருந்த ஜானியை குழந்தைகள் சிலர் பிடித்தார்கள், வாலை விட்டுவிட்டு தப்பித்து ஓடி மறைவது மட்டுமே அதற்கு இருந்த ஒரே வழி.

உடலில் ஒட்டி இல்லாவிட்டாலும், தொடர்ந்து துடித்துக் கொண்டிருந்த வாலைப் பார்த்து எப்படி குழந்தைகள் சத்தமாக சிரித்தார்கள் என்பதை அதிர்ச்சியோடும் பயத்தோடும் ஜானி கவனித்தது. சிறிது நேரம் கழித்து அவர்கள் வாலை தூக்கி எறிந்தார்கள். குழந்தைகள் அங்கிருந்து சென்ற பிறகு, ஜானி தன் வாலை எல்லா பக்கமும் தேடியது. சரியான இடத்தில் அதை மறுபடியும் ஒட்டி வைக்க நினைத்தது.

ஊருக்கு வெளியில் பரந்த நிலப்பரப்பாக இருந்ததால் எவ்வளவு தேடியும் வால் விழுந்த இடமே தெரியவில்லை. இருப்பினும், அனைத்தையும் விட்டுவிட்டு வாலைத் தேடுவதிலேயே ஜானி தன்னை அர்ப்பணித்தது. தன்னுடைய வீடு, சொத்து, நண்பர்கள் எல்லாவற்றையும் மறந்தது. நாட்களும் மாதங்களும் கடந்தன. ஆனால், ஜானி தொடர்ந்து தேடியது, பார்த்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் தன் வாலைப் பார்த்தார்களா என்று கேட்டது.

ஒருநாள், ஜானி கேட்ட நபர், விசித்திரமாக பதில் சொன்னார், “உனக்கு எதற்கு வால்?” ஜானி பின்னால் திரும்பியபோது, இவ்வளவு நாள் தேடியதில் தனக்கு புதிய வால் முளைத்திருந்ததைக் கவனித்தது. பிறகு என்ன? புதிய வால், பழைய வாலை விட அழகாகவும், வலிமையாகவும் இருந்தது. அதைப் பார்த்த பிறகு, தீர்வே இல்லாத பிரச்சினைக்காக முட்டாள்தனமாக இவ்வளவு நாட்களைச் செலவிட்டதை உணர்ந்த ஜானி திரும்பி தன் வீட்டை நோக்கிச் சென்றது.

வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் தன்னுடைய பழைய வால் கிடப்பதைப் பார்த்தது. அது காய்ந்து தூசி படிந்திருந்தது. உண்மையிலேயே மோசமாக இருந்தது. இருப்பினும், அதைத் தேடி அதிக நாட்களைச் செலவழித்திருந்ததால், தற்போது கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தது. பழைய வாலை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தது. சிறிது நேரத்தில், ஒரு தவளையை சந்தித்தது. ஆச்சர்யப்பட்ட தவளை, ஜானியிடம் கேட்டது, “உன்னிடம் ஏற்கெனவே அழகான வால் இருக்கும்போது, ஏன் அசிங்கமான பழைய வாலை தூக்கிக்கொண்டு போகிறாய்?”

“ஏனென்றால், இதைத் தேடி பல மாதங்களை நான் செலவு செய்திருக்கிறேன்” என்றது ஜானி.

“மிகவும் அழுக்கான, அசிங்கமான ஒன்றைத் தேடியா பல மாதங்களை நீ செலவிட்டாய்?” தவளை கேட்டது.

“இருக்கலாம்! ஆனால் முன்பு இப்போது இருப்பதுபோல அசிங்கமாக இல்லை” என்று சொன்னது ஜானி.

“ஆனால், தற்போது இது அசிங்கமாக இருப்பது உனக்குத் தெரியவில்லையா! என்னே விசித்திரமான பல்லிகள் நீங்கள்” குதித்து தொலைவில் செல்வதற்கு முன் தவளை சொன்னது.

தவளை சொன்னது சரி. முன்பு இருந்த அதே வால்தான் இன்னும் தன்னிடம் இருப்பதாக ஜானி நினைக்கிறது. உண்மை என்னவென்றால், அந்த வால் தற்போது அருவருப்பாக உள்ளது.

இப்போது ஜானிக்கு புரிந்தது. தன் பழைய வாலையும், அதோடு சேர்த்து தன்னுடைய கடந்தகால கவலைகளையும் அங்கேயே விட்டுவிட முடிவு செய்தது. தொடர்ந்த தன் பயணத்தில் எதிர்கால எண்ணங்களை மட்டுமே தன்னுடன் கொண்டு சென்றது. - தமிழில்: சூ.ம.ஜெயசீலன், தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in