மகத்தான மருத்துவர்கள் - 16: புற்றுநோய்க்கு எதிரான முதல் மருந்து

மகத்தான மருத்துவர்கள் - 16: புற்றுநோய்க்கு எதிரான முதல் மருந்து
Updated on
2 min read

தோல்விகளால் சிறிதும் துவளாத டாக்டர் சுப்பாராவ், 1942-ம் ஆண்டு லெடர்லே ஆய்வகத்தில், குறைந்த சம்பளத்துடன் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்றார். தனது தலைமையில் திறமையான இளைஞர் குழுவை உருவாக்கத் தொடங்கினார். அவரையும் அவர் குழுவினரையும் ‘ஃபோலிக் ஆசிட் பாய்ஸ்' (folic acid boys) என இன்றும் மருத்துவ உலகம் பெருமையுடன் அழைக்கிறது. தனது குழுவின் உதவியுடன் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உலக மனிதர்களை எல்லாம் காக்கும் பல அருமருந்துகளை மருத்துவ உலகிற்கு வழங்கினார் டாக்டர் சுப்பாராவ்.

இன்று நாம் பயன்படுத்தும் டெட்ரா-சைக்ளின் ஆண்டிபயாடிக்கின் முன்னோடியான ஆரியோமைசினை முதலில் டாக்டர்சுப்பாராவ் தான் கண்டறிந்தார். போர்முனையில் உயிர்காக்கும் மருந்தாக இருந்த பென்சிலின் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசினுக்கு ஈடாக அமைந்தது டெட்ரா-சைக்ளின்கள் என்பது பிந்தைய வரலாறு. டாக்டர் சுப்பாராவ் அன்று தொடங்கி வைத்த டெட்ரா-சைக்ளின்களின் பயணம்தான் இன்று சமீபத்திய டாக்சி-சைக்கிளினைத் தந்து, டெங்கு காய்ச்சலை நம்மிடையே கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது.

தலைப்புச் செய்தியானவர்: அதைத் தொடர்ந்து ஆசிய நாடுகளில் போர்புரியும் வீரர்களைத் தாக்கிய யானைக்கால் நோய்க்கான (filariasis) மருந்தான Diethyl Carbamazine எனும் ஹெட்ரசானை 1947-ம் ஆண்டில் கண்டறிந்தார் டாக்டர் சுப்பாராவ். யானைக்கால் நோய் முழுமையாக கட்டுக்குள் வந்திருக்கும் கடந்த சில ஆண்டுகள்வரை, உலகெங்கும் இந்த மருந்துதான் அந்த கொடிய நோய்க்கான மருந்தாகக் கோலோச்சியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆண்டிபயாடிக்குகளில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம், பின்பு ஃபோலிக் அமிலத்தின் பக்கத்தில் சாய, ஃபோலிக் ஆசிட் பாய்ஸ், அந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகைக்கு ஃபோலிக் அமிலத்தை வேதித்தொகுப்பு முறையில் தயாரித்து வெற்றியும் கண்டனர். இதற்கான முயற்சிகளில் நடந்த துணை ஆராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட அமினொப்டெரின் (aminopterin) தான் புற்றுநோய்க்கு எதிரான முதல் மருந்தாகும்.

இதன் துணையுடன் தான் உலகெங்கும் பெரிதாகப் பயன்படும் புற்றுநோய்க்கான மெதோட்ரிக்சேட் (methotrexate) மருந்து தயாரிக்கப்படுகிறது. அச்சமயத்தில், குழந்தைகளுக்கான புற்றுநோய் மையத்தில் இந்த மருந்துகள் முயற்சி செய்யப்பட, அன்றைய 'பாஸ்டன் ஹெரால்ட்' பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக 1948-ம் ஆண்டு வெளிவந்தது சுப்பாராவின் அமினோப்டெரின். ஆக, ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், முத்துப்பிள்ளை, முடக்குவாதம், போன்ற பல்வேறு கொடிய நோய்களுக்குத் தீர்வாக விளங்கும்மெதோட்ரிக்சேட்டின் முன்னோடி கீமோதெரபி மருந்தைக் கண்டறிந்தது அமெரிக்க லெடர்லே ஆய்வகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் சுப்பாராவின் குழுதான்.

தன்னை முன்னிறுத்தாத பெருந்தகை: "அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டிலும் வெற்றி என்பது தனிநபர் சார்ந்ததல்ல அது எப்போதும் ஒரு கூட்டு முயற்சிதான்" என்று தனது ஒவ்வொரு ஆராய்ச்சி வெற்றிக்குப் பின்னும் தனது குழுவை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்த டாக்டர் சுப்பாராவ், அவரது வரிகளை எப்போதும் உண்மையாக்கியும் வந்தார். எந்த ஆராய்ச்சி முடிவின் பின்னும் அவர் தன் பெயரை சேர்த்துக் கொண்டதில்லை. விஞ்ஞான மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்ததில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கூட கொடுத்ததில்லை. தன்னுடன் பணியாற்றிய இணை ஆராய்ச்சியாளர்கள், உதவியாளர்கள் பலருக்கும் பாராட்டும் பரிசுகளும், ஏன் நோபல் பரிசு உள்ளிட்ட பல உயரிய விருதுகள் கிடைத்தபோதும் பெருமகிழ்ச்சியுடன் அந்த விழாக்களில் கலந்துகொண்டாரே ஒழிய, எந்தவொரு விருதுக்காகவும் தன்னை முன்னிறுத்தவில்லை. தனது தலைமையில் இத்தகைய மகத்தான மருந்துகள் கண்டறியப்பட்டபோதும், அதற்கான அங்கீகாரத்தை அவர் கடைசி வரை தேடி அலையவில்லை என்பதே உண்மை.

ஏறக்குறைய 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்த சுப்பாராவ், இறுதிவரை அமெரிக்க குடியுரிமை பெறவும் முயலவில்லை. இந்தியக் குடிமகனாகவே வாழ்ந்து,தான் வாழும் வாழ்க்கை மாலை மரியாதைகளுக்காக இல்லாமல் மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே போதும் என உறுதி பூண்டார். 53 வயதில், 1948-ல்ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று தனது உறக்கத்திலேயே மீளாத்துயில் கொண்டார் டாக்டர் ஒய். சுப்பாராவ் எனும் எல்லப்பிரகத சுப்பாராவ். மருத்துவ அறிவியலின் மூலம் மானுடத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றிய மனிதர்களில் இந்தியாவிலேயே முதன்மையான இவரைப் பற்றி, இன்றைய மாணவர்கள் அறிந்துகொள்வது எவ்வளவு அவசியம் என்பதுடன், இவரைப் போன்ற ஒரு மருத்துவரை இன்னும் சிறப்பாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும். (மகிமை தொடரும்) - கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர்,சமூக ஆர்வலர், தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in