

வருடங்கள் கடந்து வயது முதிர்வதால் அம்மாடி...அப்பாடி..... என்று உட்காரும் போதும் எழும்போதும் தாளம் இசைக்கிறார் தாத்தா. அவருக்கு இரு பேத்திகள். கதிர்ஒளி, கனல் மொழி. இருவரும் தாத்தாவிடம் வகுப்புக் கதைகளை பேசியும், வாக்கிங் செல்லும்போது கூட நடந்தும், சீட்டு விளையாடச் சொல்லித்தந்தும் அவரை நல்ல கூட்டாளியாக பாவிக்கிறார்கள். தாத்தா -பேத்திகள் உரையாடலில் தாத்தா அவ்வப்போது பல்பு வாங்குகிறார். சிலநேரத்தில் பேத்திகள் பாடம் கற்கிறார்கள். பல நேரங்களில் தாத்தா தன் தவறை சிந்திக்கிறார்.
பேத்திகளிடம் புதுப்பாடம்: கடைவீதியில் காசுவேண்டி கையேந்தும் பெண்ணிடம், கணக்கு பார்க்காம கொடு தாத்தா என்று புதுப்பாடம் கற்பிக் கிறார்கள். Ass சீட்டு விளையாட்டில் தாத்தாவை தோற்கடித்துவிட்டு, தாத்தா கழுதையாகிட்டாரு என்று பேத்திகள் தரும் பட்டத்தை, அரசு அதிகாரியாக இருந்தபோது பணிக்காலத்தில் எந்த விருதும் பெறாது ஓய்வு பெற்றுவிட்ட தாத்தா பெருமிதமாய் ஏற்றுக்கொள்கிறார். அதற்காகவே அடிக்கடி விளையாட்டில் கழுதையும் ஆகிறார். பேத்திகளின் அன்றாடச் செயல்களை உற்றுக் கவனிக்கிறார் தாத்தா, பள்ளிகள் செலுத்தும் அதிகாரத்தில் கனல்மொழி சிக்கவில்லை. ரேங்க் பற்றி கவலையில்லை I don't care என்கிறாள். அதிகாரத்தை எதிர்க்கும் சீற்றம் தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்குமே.
புதுவெளிச்சம்: தாத்தாவுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். புன்னைவனம் என்ற ஒரு ஆட்டோ டிரைவரும் நண்பர்தான். கரோனாவில் புன்னைவனம் இறந்துபோகிறார். தன் உடன்பிறந்தவர், நண்பர்கள் என்று கேள்விப்படும் இறப்புகளை அசைபோட வைக்கிறது இரவுகள். தூக்கம் இல்லாததால் அசதியாய் தென்படும் தாத்தாவை ஏன் தாத்தா தூங்கவில்லை? என்கின்றனர் பேத்திகள். ஏதோ கனவு என சமாளிக்கிறார் தாத்தா. பேத்திகளோடு பேசிக்கொள்ளும் வகுப்பறை உரையாடலின்போதெல்லாம் தாத்தாவுக்கு புது வெளிச்சம் கிடைக்கிறது. தாத்தா சொல்லும் கதைகளில் தற்காலத்துக்கேற்ற மாற்றம்சொல்கிறார்கள் பேத்திகள். கதைகளின்நீதி சொல்ல தாத்தா முற்படும்போது, அவ்வப்போது ஆசிரிய முகம் வெளிப்பட்டுவிடும் தாத்தாவை, பேத்திகள்தாத்தாவாக இருக்க வைக்கிறார்கள். தான் பழைய தாத்தாவா என்று தன்னையே கேட்டுக்கொள்ளும் தாத்தா,பிறகு பேத்திகளோடு புதிய தாத்தாவாக தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
வாசிப்பில் ஆர்வம்: தாத்தாவுக்கு படிப்பதில் எப்போதுமே ஆர் வம். செய்தித்தாளில் படிப்பதை பகிர்ந்துகொள்ள, பூங்காவுக்கு நண்பர்களைத் தேடிச் செல்வார். கரோனாக்கு பிறகு ஆசிரியர் மாணவர் இடையே நிகழும் வகுப்பறை முரண்பாடுகளைப் பற்றி பேசுகிறார். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து நடக்க வேண்டியவர்கள். காலத்தால் பொறுமை இழந்த மாணவர்கள் நிச்சயம் ஒருநாள் நிதானத்துக்கு திரும்புவர். அதுவரை ஆசிரியர் நிதானமாக மாணவர்களுடன் சேர்ந்து நடப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். தாத்தாவை புரிந்துகொள்ளாத நண்பர் கள் அப்பார்ட்மெண்டில் பஜனைக் குழுவிற்கு வருமாறு அழைக்கின்றனர். கூட்டத்தோட கோவிந்தா போட நான் வரமாட்டேன். தனித்து நடப்பதில் பயமில்லை. கையில் புத்தகம் இருந்தால் போதும். அதுதான் நம்பகமான துணை என்கிறார் இந்த சூப்பர் ஸ்டார் தாத்தா.
எப்போதும் உற்சாகம்: கண் அறுவை செய்துகொண்ட தாத்தாவை. நீ எப்படி படிக்காம இருப்ப தாத்தா? என்கின்றனர் பேத்திகள். எப்போதும் புத்தகம் படிக்கும் தாத்தா, நீங்களே ஒரு புத்தகம்தானே, ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் என மனிதர்களையெல்லாம் புத்தகமாகவே பார்க்கிறார்.மனிதர்களுக்கு அவர்கள் திறமைகளை அடையாளம் காட்டி, அங்கீகாரம் தரும் தாத்தா, பேத்திகளின் கிறுக்கல் களையெல்லாம் ஓவியமாக்கி பேத்திகளை எப்போதும் பாராட்டும், உற்சாகம் நிரம்பிய தாத்தாவாக மிளிர்கிறார். கூடவே முடிவு எடுக்கும் திறனும்இருக்கவேண்டும் என்று உதாரணங் களோடு அனுபவங்களைப் பகிர்கிறார். பேத்திகளின் உரையாடலில் வகுப்பறை உரையாடலை உற்றுக் கவனிக்கும் தாத்தாவுக்கு, புதிய செயல்பாடுகளை செய்யும் ஆசிரியர்கள் பற்றி பேத்திகள் கூறும்போது, சமுதாயம் மீது புது நம்பிக்கை கிடைத்துவிடுகிறது.
நல்ல சமுதாயம்: நின்ற இடத்தில் நிற்பதல்ல வாழ்க்கை. இயங்குவதுதான் வாழ்க்கை. பேத்திகள் இருவரும் தாத்தாவுக்கு தரும் புதுவெளிச்சத்தை, புத்தகமாக்கி நம்மோடு பகிர்ந்துகொள்ளும் இந்தத் தாத்தா, ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் கொடுக்கவேண்டிய அன்பைஆறுதலை, ஊக்கத்தை, உற்சாகத்தை, பாராட்டை தான் வாழ்ந்து காண்பித்து உணர்த்துகிறார். நல்ல சமுதாயம் நல்ல வீட்டிலிருந்து தொடங்குகிறது. நல்ல வீடு பெரியவர் களின் வழிகாட்டுதலில் அடங்கியுள்ளது. தாத்தா பேத்தி இடையே நடைபெறும் செழுமை நிரம்பிய உரையாடல் தாத்தா பேத்தி உரையாடல் இலக்கிய வடிவம் என்ற புது இலக்கிய வகையை அறிமுகப் படுத்தியுள்ளார் இந்தத் தாத்தா. பேராசிரி யர் ச.மாடசாமி எழுதியுள்ள "அம்மாடி அப்பாடி" நூலை வாசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கட்டுரையாளர்:
குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com