

‘நீ என்ன கணக்குப்புலியா’ என்று அடிக்கடி கேட்டிருக்கலாம். ஆனால் புலிக்கு கணக்கு வருமா? புலிக்கு முக்கியமாக என்ன கணக்கு தெரியவேண்டும்? மான்களை வேட்டையாடும்போது மானின் வேகத்தைவிட இது வேகமாக ஓட வேண்டும். அப்போதுதான் அதற்கு இரை கிடைக்கும். வேகத்தை விடுவோம், அதற்கும் அடிப்படையான எண்களோ, எண்ணிக்கையோ புலிகளுக்கு தெரியுமா?
காட்டில் இருந்து மனிதன் நிலங்களுக்கு வந்த பின்னர் விலங்குகளைப் பழக்கினான். பின்னர் அதனை மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்றான். அப்போதுதான் எத்தனை விலங்குகளை அழைத்து வந்தோம், எத்தனை விலங்குகளை அழைத்துச் செல்கின்றோம் என்ற எண்ணிக்கை தெரியாமல் குழம்பினான். அப்போதுதான் | | | | | | | | | | என எழுத ஆரம்பித்தான். பின்னர் அதனை எண்ணுவது சிரமமாக இருந்தது. பின்னர் ஐந்து ஐந்தாக எழுத ஆரம்பித்து இருக்க வேண்டும். ஏழு என்பதை ஏழு தொடர் கோடுகளுக்குப் பதில் படத்தில் இருப்பதுபோல எழுத ஆரம்பித்தான். இப்படியே எண்களை ஒவ்வொரு நிலப்பகுதியில் குறிப்பிட ஆரம்பித்து, எண் கணிதம், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், இயற்கணிதம் என கணினி வரை வந்துவிட்டான்.
ஆனால் விலங்குகள்? அவற்றிற்கு எண்ணத் தெரியுமா? எண்ணிக்கை தெரியுமா? இதனை ஒட்டி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. விலங்குகளுக்கு மட்டுமல்ல, சில செடிகளுக்கும் எண்ணிக்கை வரும்.பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் செடிகள், பூச்சிகள் தன் இலை மீது அமர்ந்து சரியாக 30 விநாடியில் ஒரு திரவத்தை சுரந்து மூடிக்கொள்ளும். பூச்சி உள்ளே மாட்டிக்கொண்டு உணவாகி விடும். மத்திய அமெரிக்காவில் தவளைகள் மீது ஆராய்ச்சி நடத்தினர். பெண் தவளைகளை கவர்வதற்கு ஆண் தவளைகள் குதிக்குமாம். எந்த ஆண் தவளை அதிகம் குதிக்கின்றதோ, அதனைப் பெண் தவளைகள் தேர்ந்து எடுக்குமாம். ஆக இரண்டு தவளைகளுக்கும் எண்ணிக்கை தெரிந்திருக்கின்றது.
நியூசிலாந்தில் நடந்த ஆராய்ச்சியில் ராபின் என்ற பறவையின் கூட்டில் சில புழுக்களைப் போட்டுள்ளனர். அது கவனிக்காதபோது ஓரிரு புழுக்களை மறைத்துள்ளனர், அந்தப் பறவைக்கு எண்ணிக்கை தெரிந்திருந்ததால் காணாமல் போன புழுக்களைத் தேடி இருக்கின்றது. குதிரைக்கு கூட்டல் கணக்கு வரும் என்றும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். ஆனால் அதிகப்படியாக ஆறு-ஏழு எண் வரையில்தான். குரங்கிற்கும் மனிதக்குரங்கிற்கும் நிறைய கணக்கு வரும் என்கின்றார்கள்.
நியூசிலாந்தில் உள்ள ஒடோகோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில், புறாக்களுக்கு 0-9 வரை எண்ணத் தெரியும் எனக்கண்டுபிடித்துள்ளனர். அதே போல 0-9 வரையிலான எண்ணிக்கையில் உள்ள பொருட்களையும் வரிசையாக அடுக்கவும் தெரிந்திருக்கின்றது. பத்திற்கு மேல் என்ன செய்யும் என்றுகண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் இருக்கும் சுறாக்களுக்கு தன் இரையைப் பார்த்ததும் அதன் வேகத்தைக் கணக்கிட்டு மிக விரைவாகச் சென்றடையும் பாதையைக் கணக்கிட்டு இரையைப் பிடிக்கும் கணக்கு இயல்பாகவே இருக்கின்றதாம்.
எறும்புகளிடம் ஒரு பிரத்யேக குணம் உண்டு.அதன் கால்களில் இயற்கையாக ஒரு அடியீடுமானி உள்ளது. ஆங்கிலத்தில் Pedometer என்று குறிப்பிடுவார்கள். எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதைக் கணக்கிடும் ஒரு கருவி. நடைபழகும் பலரிடமும் இது கிடைக்கும். எறும்புகள் உணவு தேடிச் செல்லும்போது தன்வசிப்பிடத்தில் இருந்து எவ்வளவு அடியெடுத்துச் சென்றுள்ளது எனத் துல்லியமாகக் கணக்கு வைத்திருக்கும். திரும்பவும் உணவினை எடுத்துக்கொண்டு திரும்பும்போது அதே அடிகள் எடுத்து வைத்து தன் வசிப்பிடத்தை அடையும். வீட்டிற்கு வந்ததும் இந்த அடியீடுமானியை மீட்டமைக்கும். திரும்பவும் நடக்கும்போது பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும். கணக்கில் புலி என்று சொல்வதைவிட, நீ என்ன கணக்கில் எறும்பா என்று கேட்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்.
தொடர்புக்கு: umanaths@gmail.com