

தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துவிட்டால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே முகிலனுக்குத் தெரியாது. இன்றைக்கும் அப்படித்தான். மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ஓடினதை பார்த்துக் கொண்டே இருந்தான். அதில், “இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 370-ன்படி சுரண்டும் நோக்கத்துடன் தன் வலிமையைக் காட்டி, வற்புறுத்தி, பொய்சொல்லி, மோசடி செய்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி, தூண்டுதலாக விளங்கி, பணம் கொடுத்தோ வாங்கியோ அல்லது வேறுவிதமான பலன்களைக் காட்டியோ பெற்றோரிடமிருந்து அல்லது பொறுப்பாளரிடமிருந்து ஆட்களைச் சேர்ப்பது, அழைத்துச் செல்வது, அடைக்கலம் கொடுப்பது, இடம் மாற்றுவது, ஒரு நபர் அல்லது நபர்களைப் பெறுவது அனைத்தும் ஆட்கடத்தலே” என்ற குறிப்புடன் அனயோரா பற்றிய குறும்படம் ஒளிபரப்பானது.
கடத்தலும் மீட்டலும்: மேற்கு வங்கத்தில் அனயோரா கட்டூன் 1996-ல் பிறந்தார். 7-ம் வகுப்பு படித்தபோது தந்தையை இழந்தார். தொடர்ந்துபள்ளிக்குச் செல்ல வறுமை இடம் கொடுக்கவில்லை. உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். “கொல்கத்தாவில் வீட்டு வேலைக்கு அனயோராவை அனுப்பு. உணவு கொடுத்து படிக்கவும் வைப்பார்கள்” என்று அம்மாவிடம் சொன்னார். அம்மா சம்மதித்தார்.
வயிறார உண்ணலாம், படிக்கலாம் என்கிற கனவுடன் உறவினரோடு தொடர்வண்டியில் ஏறினார் அனயோரா. அது, கொல்கத்தா செல்லும் தொடர்வண்டி அல்ல, டில்லிக்கு செல்வது. தான்கடத்தப்பட்டுள்ளது அச்சிறுமிக்குத் தெரியாது. தன்னை விலைக்கு வாங்கிய வீட்டில் நாள்முழுவதும் வேலை செய்தார். குடும்பத் தினரைத் தொடர்புகொள்ள அனுமதியில்லை. கொடும் பட்டினியை, கொடுமைகளை பல மாதங்கள் அனுபவித்தார். குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் Save the Children தன்னார்வ அமைப்பு அனயோராவை மீட்டு, அவரது ஊருக்கு அனுப்பியது.
வீட்டுக்குத் திரும்பியதும் கோபமும், சோகமும் அனயோராவின் மனதை வருத்தின. அப்போது, தொண்டு நிறுவனத்தால் மீட்கப்பட்ட மற்ற மாணவிகளின் துயரத்தைக் கேட்டார். குழந்தைத் திருமணங்களை, சிறுவர் சிறுமிகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், சுரண்டல் மற்றும் பாலியல் சீண்டலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் முடிவு செய்தார். மாணவர்களை ஒன்று சேர்த்து 40 குழுக்களை அமைத்தார். கிராமத்துக்குள் சந்தேகப்படும்படி யாராவது வருகிறார்களா என அவர்கள் கண்காணித்தார்கள்.
உதாரணமாக, 2009-ல், 15 வயது சிறுமியை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள். ஆனாலும், சில நாட்கள் கழித்து மறுபடியும் வந்து சிறுமியைக் கடத்திவிட்டார்கள். கிராமத்து பெரியவர்கள் சிலரின் உதவியுடன் கடத்தல்காரர்களை அனயோரா விரட்டிச் சென்றார். வரப்பு, நீர்நிலை என எல்லா பக்கமும் ஓடி காப்பாற்றினார். இதுமற்ற குழந்தைகளுக்கும் உத்வேகம் கொடுத்தது. குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனிடையே, உறவினர்களும் கிராமத்தினரும் அனயோராவையும் அவரது குடும்பத்தையும் தவறாகப் பேசினார்கள். குழந்தைகளைத் தவறாக வழிநடத்துவதாக அனயோராவைக் குற்றம்சுமத்தினார்கள். அவருடன் சேரக் கூடாது, பேசக்கூடாது என்று மாணவிகளைத் தடுத்தார்கள்.
யாரையும் கண்டுகொள்ளாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமா என்றுகூட அனயோரா யோசித்தார். ஆனால், Save the Children அமைப்பினர் தன்னம்பிக்கை அளித்தார்கள். அனயோரா தொடர்ந்து செயல்படத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே கடத்தப்பட்ட 180 குழந்தைகளையும், 85 குழந்தைத் தொழிலாளர்களையும் மீட்டார். 36 குழந்தை திருமணங்களைத் தடுத்தார். 400 குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார். பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களுக்கு இந்திய அரசு, பெண் சக்தி விருது (Nari Shakti Puraskar) விருது வழங்குகிறது. இவ்விருது 2017-ல் அனயோராவுக்குக் கிடைத்தது. - கட்டுரையாளர்: எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர், 'காயம் போற்றும் காவியம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்பு: sumajeyaseelan@gmail.com