

கீரியும் கழுகும் பாம்புடன் சண்டையிடுகின்றன. பாம்பின் விஷம் கீரியையும் கழுகையும் ஒன்றும் செய்யாதா, டிங்கு?
- எம். அருணா, 7-ம் வகுப்பு,அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
நல்ல கேள்வி. கீரியின் தோல் தடிமனானது. அத்துடன் முடியும் இருக்கும். பெரும்பாலும் பாம்பின் கடி படாதபடிதான் தாக்குதலை மேற்கொள்ளும். ஒருவேளை பாம்புகடித்துவிட்டால், கீரியின் உடலிலுள்ள Nicotinic acetylcholine receptors என்ற எதிர்ப்பாற்றல் விஷத்தை முறியடித்துவிடும். அதனால் பாம்புடன் கடுமையாகச் சண்டை போட்டாலும் கீரிக்கு பாதிப்பு இல்லை.
கழுகுக்கு பாம்பின் விஷத்தை முறிக்கக்கூடிய எதிர்ப்பாற்றல் கிடையாது. ஆனாலும் வேகமாகச் செயல்படுவதால் பாம்பின் கடியிலிருந்து தப்பிவிடுகிறது. இமைக்கும் நேரத்தில் பாம்பைத் தூக்கிக்கொண்டு உயரத்துக்குச் சென்றுவிடும். பிறகு திடீரென்று பாம்பைப் பாறை மீது வீசும். இறுதியில் பாம்பைக் கொன்றுவிடும், அருணா.
கருவில் எந்த உறுப்பு முதலில் உருவாகும், டிங்கு?
- ஜெ. ரோஸ்மேரி, 6-ம் வகுப்பு, செயிண்ட் ஆண்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.
கருவில் செயல்படக்கூடிய முதல் உறுப்பாக உருவாவது இதயம்தான். உயிரணுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ரத்தம் மூலம்அளிப்பதும் கழிவுகளை வெளியேற்றுவதும் இதயத்தின் பணியாக இருப்பதால், இதுவே முதலாவதாக உருவாகிறது, ரோஸ்மேரி.