

கேட்பதில் உள்ள இரண்டு வகைகள் என்னென்ன என்று கேட்டு கடந்த வகுப்பின் வினாவை நினைவூட்டினாள் மதி. அன்பரசியும் அருண்மொழியும் முந்தைய நாள் அவர்கள் பார்த்த திரைப்படத்தைப் பற்றி உரையாடினர்.
அன்பரசி ஒரு குறிப்பிட்ட காட்சி நன்றாக இல்லை என்றாள். அதுவோ அருண்மொழிக்குப் பிடித்த காட்சி. எனவே, அன்பரசி பேசும்பொழுது, அவரது கருத்தை எப்படி மறுக்கலாம் என்று சிந்தித்தவாறே அருண்மொழி கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வாறு அருண்மொழி சிந்தித்தது சரியா? என்று வினவினார் எழில்.
ஏன் தவறு? - சரிதான் என்றாள் கண்மணி. இல்லை. தவறு என்றாள் நன்மொழி. ஏன் சரி என்று கண்மணியிடம் வினவினாள் தங்கம். பிறர் பேசுவதைக் கேட்கும்பொழுதே அதற்கான மறுப்பைச் சிந்தித்தால்தானே, அவர்கள் பேசி முடித்ததும் அதனை மறுக்க முடியும் என்று விடையளித்தாள் கண்மணி. ஒருவேளை அவர்கள் கூறுவது உண்மையாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ இருந்தால்? என்று வினவினாள் நன்மொழி. கண்மணி குழப்பமாய்ப் பார்த்தாள். ஏன் தவறு? என்றுநன்மொழியை வினவினான் அழகன். பிறர் பேசும்பொழுது அதற்கான மறுப்பைச் சிந்தித்தால், அப்பேச்சில் உள்ள நியாயங்களைக் கவனிக்கத் தவறிவிடுவோம் என்றாள்நன்மொழி. அருமை என்று அவளைப் பாராட்டினார் எழில். அப்படியானால் எப்படிக் கேட்க வேண்டும்? என்று வினவினான் சுடர். அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்டு, அவர்களின் கருத்தைப் புரிந்துகொள்ள முயல்வேண்டும் என்றாள் நன்மொழி. புரியவில்லை என்றான் சுடர்.
கேட்பதில் இரு வகை: எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் குறிப்பிட்ட அந்தக் காட்சி ஏன் நன்றாக இல்லை என்பதற்கு அன்பரசி கூறும் காரணத்தைப் புரிந்து கொள்வதற்காக கவனமாகக் கேட்க வேண்டும். புரிந்து கொண்ட பின்னர் மாற்றுக் கருத்து இருந்தால் அதனைத் தெரிவிக்க வேண்டும். மாறாக, அவர் கூறும் கருத்தை எப்படி மறுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டு கேட்கக் கூடாது என்று விளக்கினாள் நன்மொழி. நன்மொழி கூறுவது சரி. ஒருவர் பேசும் பொழுது அவர் கூறுவதைப் புரிந்து கொள்ள திறந்த மனதோடு கேட்க வேண்டும்; மறுக்கும் மனதோடு கேட்கக் கூடாது. இவைதான் கேட்டலில் உள்ள இரண்டு வகைகள் என்றார் எழில். மேலும் ஒருவர் பேசும் பொழுது அதில் குறுக்கிடக் கூடாது. அவர் முழுமையாகப் பேசி முடித்த பின்னரே, அவர் கூறியதை ஆதரித்தோ, அதற்கு வலுச் சேர்த்தோ, அதனை மறுத்தோ பேச வேண்டும் என்றார்எழில். குறுக்கே பேசினால் அவர்கள் பேச்சுத்தடைபட்டுவிடுமா? என்று வினவினாள் பாத்திமா. ஆம். சிந்தனை தடைப்படும். அதனால் பேச்சுத் தடைப்படும். அதன் விளைவாக பேச்சு வேறுதிசைக்குத் திரும்பி, எதனைப் பேச வேண்டுமோ, அது பேசப்படாமலே போய்விடும் என்று விரித்துரைத்தார் எழில். அதாவது... என்று இழுத்தான் தேவநேயன். பள்ளி இலக்கிய மன்றத்திற்குத் தலைவர் உலகப்பன், செயலாளர் மணிசேகரன். அவர்கள் இருவரும் மன்றத்தின் சார்பில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலக்கியக் கூட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுஅங்கு வந்த பால்வண்ணன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு, நீங்கள் இருவரும்கடந்த வாரம் சென்றுவந்த சுற்றுலா எப்படிஇருந்தது? என்று வினவினார். அவர்கள் அதுபற்றி உற்சாகமாகப் பேசினர். இப்பொழுதுஅவர்களது கலந்துரையாடல் என்னவானது?என்று எழில் வினவ, இடையிலேயே நின்றது என்றான் சாமுவேல். குறுக்கே ஏன் பேசக்கூடாது என்பதும் புரிந்தது என்றான் தேவநேயன்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்.
தொடர்புக்கு: ariaravelan@gmail.com