

ஆடை அலங்கார மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டோர் தேசிய அளவில் நடைபெறும் அதற்கான நுழைவுத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம். ‘பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி’(B.FTech) மற்றும் ‘பேச்சுலர் ஆஃப் டிசைன்’(B.Des) என இரண்டு இளநிலை படிப்புகள் இவர்களுக்காக காத்திருக்கின்றன.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இன்று அதிக ஊதியம் தரும் துறையாக ஃபேஷன் டெக்னாலஜியும், ஃபேஷன் டிசைனிங்கும் வளர்ந்து வருகிறது. தகுதி உடையவர்களுக்கு ஆடை அணிகலன்கள் வடிவமைப்பு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றின் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. புதியன கற்றுக்கொள்ளும் ஆர்வமும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் சுயமாகவும் இந்த துறையில் சாதிக்க முடியும். பொறியியல் படிப்புக்கு மாற்றான, இந்த துறையில் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (National Institute of Fashion Technology) வளாக நிறுவனங்கள் சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இந்த கல்வி நிறுவனங்களின் இருக்கைகள் மற்றும் இதற்கு இணையான முன்னணி கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கும் இந்த நுழைவுத் தேர்வு உதவும்.
தேர்வு நடைமுறை: தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுக்க முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். பேச்சுலர் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜிக்கு விண்ணப்பித்தோர் GAT-General Ability Test என்ற தேர்வையும், பேச்சுலர்ஆஃப் டிசைன் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கூடுதலாக CAT–Creative Ability Test என்ற தேர்வையும் எழுத வேண்டி இருக்கும். இந்ததேர்வுகளுக்கு Quantitative ability, Communication ability, English comprehension, Analytical ability, General knowledge andcurrent affairs ஆகிய தலைப்புகளில் தயாராகவேண்டும். அதாவது, எண்கள் சார்ந்த அறிவுத்திறன், ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ள பத்தியை புரிந்து கொண்டு பதிலளித்தல், தொடர்பாற்றல், பொது அறிவு, நடப்பு செய்திகள், பகுப்பாய்வுத் திறன் ஆகிய தலைப்புகளில் இடம்பெறக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக வேண்டும். முழுமையான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவற்றை தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம்.
விண்ணப்ப நடைமுறைகள்: பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டு இறுதித் தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஆகஸ்ட் 1 அன்று 24-க்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி ஆகிய பட்டியலின பிரிவினருக்கு இதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தனி பயனர் கணக்கை உருவாக்கி பதிவு செய்த பிறகு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளை தொடங்கலாம். நவம்பர் 1 அன்று தொடங்கி உள்ள இந்த நடைமுறைகளுக்கு கடைசி தேதி டிசம்பர் 31. நுழைவுத் தேர்வு நாள்: பிப்.5. தேர்வு முடிவுகளை மார்ச் இரண்டாம் வாரத்தில் ஆன்லைன் வாயிலாக அறியலாம். சேர்க்கைக்கான கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். விண்ணப்பிக்கவும், மேலதிக தகவல்களுக்கும் அணுக வேண்டிய இணையதளம்: https://www.nift.ac.in. விண்ணப்பக் கட்டணம் ரூ3000; எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ1500. - கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com