

தம் தாய்மொழியான இந்தியில் இளநிலை வரை பயின்று, ஆங்கிலத்தில் யூபிஎஸ்சி தேர்வெழுதி இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) அதிகாரியாகி விட்டார் திவ்யா. தமிழரான இவரது கணவர் என்.சாமுவேல் பால்.ஐஏஎஸ், உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர்நகர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
உபியின் மேற்கு பகுதியில் உள்ள புலந்த்ஷெஹரின் ஷியானா தாலுகாவை சேர்ந்தவர் திவ்யா. இவர், இங்குள்ள விவசாயக் குடும்பத்தின் சீதாராம் அகர்வால், சுமன் அகர்வால் தம்பதியின் ஒரே பெண். இவருடன் பிறந்த கோரவ், தீபக் சகோதரர்கள் பட்டம் பெற்று தனியார் பெருநிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். ஷியானாவின் தயாவதி பப்ளிக் ஸ்கூலில் நான்காம் வகுப்பு வரை பயின்ற திவ்யா, 5 முதல் 10 வரை ஆதர்ஷ் சிவகன்யா உயர்நிலைப்பள்ளியில் முடித்துள்ளார். அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் 2-வை அருகில் உள்ள ஹாபூரின் எஸ்விஐ இண்டர் காலேஜில் பயின்றுள்ளார். பிறகு புலந்த்ஷெஹரின் ஐ.பி. காலேஜில் உயிரியலில் இளங்கலை பட்டம் 2010-ல் பெற்றுள்ளார்.
இளங்கலை பட்டம் பெறும்வரை தமது தாய்மொழியான இந்திவழிக் கல்வியைத்தான் பயின்று வந்திருக்கிறார். அதன் பிறகு லக்னோவில் உள்ள அமிட்டிபல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொண்டார். அப்போதுதான் முதன்முறையாக ஆங்கிலவழி கல்வி மூலம் படித்தார்.இதே பாடப்பிரிவில் பேராசிரியர்களுக்கான நெட் எனும் தேசியத் தகுதி தேர்விலும் வென்ற திவ்யாவிற்கு மத்திய மருந்தியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. இங்கிருந்து 2011-ல் யூபிஎஸ்சி தேர்வுக்கு முதல்முறையாக முயன்றார் திவ்யா. இதற்காக தம் ஆய்வாளர் பணியுடன் சேர்த்து தனியார் நிறுவனத்தில் யூபிஎஸ்சிக்கான பயிற்சியும் பெற்றார். இதன் பலனாக 2012-ல் இரண்டாம் முயற்சியில் ஐஎப்எஸ் பெற்றார் திவ்யா.
அறிவியல் படித்தால் மட்டுமே ஐஎப்எஸ்! - இது குறித்து உபியின் வனப் பணி அதிகாரியான திவ்யா கூறுகையில், “எனக்கு பள்ளிகளில் மிகச்சிறந்த கல்விகிடைக்கவில்லை. எனினும், பாடத்திட்டப்படி தவறாமல் படித்து விடுவேன். இதன் காரணமாக தொடர்ந்து முதல் ரேங்க் பெற்றேன். இளநிலையில் எனக்கு பல்கலை அளவில் ஐந்தாவது ரேங்க் கிடைத்தது. ஆங்கிலவழிக் கல்வி என்பதால் எனக்கு முதுநிலை சவாலானது. இங்கு கிடைத்த சிறந்த முறை கல்வியால் என்னால் ஆங்கிலத்திலும் சாதிக்க முடிந்தது. இதனால்தான் யூபிஎஸ்சியை ஆங்கிலத்தில் எழுதவும் துணிந்தேன்” எனத் தெரிவித்தார்.
2012-ம் ஆண்டு வரை வனப் பணிக்கு மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதிலும் ஆங்கிலவழியில், அறிவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. 2013 முதல், வனப் பணியின் மெயின்ஸ் தேர்வை எழுத யூபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வின் பிரிலிம்ஸ் தேர்விலும் வெல்வது அவசியம் என்று அறிவித்தது. யூபிஎஸ்சியின் குடிமைப்பணிக்கான பிரிலிம்ஸுடன் ஐஎப்எஸ் தேர்வானதும் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது, ஐஎப்எஸ் சேர்த்து தேர்வு செய்த அறிவியல் பாடப்பிரிவினருக்கு தான் அதன் மெயின்ஸ் தேர்வில் தொடர வாய்ப்பளிக்கப்படும். இதிலும் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளிலும் எழுத அனுமதி இல்லை.
இந்நிலையில், 2011, 2012 என இரண்டு முறை பிரிலிம்ஸ் எனும் முதல்நிலைத் தேர்வை திவ்யா எழுதியபோது பலன் கிடைக்கவில்லை. அதேசமயம், ஐஎப்எஸ் முதல் முயற்சியில் நேரடியாக 2011-லேயே மெயின்ஸ் எழுதி நேர்முகத்தேர்வு வரை சென்றார். இருப்பினும் குறைந்த மதிப்பெண் வாங்கவே பணி கிடைக்கவில்லை. இதில் தாம் செய்த தவறுகளை கண்டறிந்து முழுமூச்சுடன் இறங்கியவர், இரண்டாவது முயற்சியில் தேசிய அளவில் 2 -வது ரேங்க் பெற்றார். இதனால், தம் சொந்த மாநிலமான உபி மாநிலப் பிரிவின் 2013 ஆம் பேட்ச் அதிகாரியானார் திவ்யா.
சாதி, மதம் கடந்து... தனது வெற்றி குறித்து நினைவுகூரும் வனப்பணி அதிகாரி திவ்யா, “எங்கள் ஊரை சேர்ந்த சிலர் ஐஏஎஸ் பணி முடித்து ஓய்வு பெற்றிருந்தனர். இவர்களை பார்த்து எனது தந்தை நானும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என பள்ளி வயது முதல் ஊக்கமளித்து வந்தார். இதன் பலனாகவே நான் இன்று வனப் பணி அதிகாரியாக உள்ளேன். முதுநிலையில் ஆங்கில அறிவுபெற அமிட்டியின் பேராசிரியர் பிரஜேஷ் பாண்டே வழிகாட்டியதை மறக்க முடியாது. முதுநிலையில் ஆங்கில பத்திரிகைகள் படித்ததும் பொதுஅறிவை வளர்க்க உதவியது” எனக் குறிப்பிட்டார்.
ஐஎப்எஸ்-கான பயிற்சியை உபியின் பைரைச் மாவட்டத்தின் கத்தன்யா காடுகளில் பெற்றார் திவ்யா. இவர் முதலாவதாக, லக்கிம்பூர்கேரியிலும் பிறகு அலகாபாத்திலும் மாவட்ட வனப் பணி அதிகாரியாக தொடர்ந்தார். அடுத்து லக்னோவின் தலைமை அலுவலகத்திலும், ஆக்ராவிலும் பணியாற்றினார். தற்போது அயோத்யா மாவட்ட வனப் பணி அதிகாரியாக உள்ளார் திவ்யா. இவர் போல் நன்கு படித்து உயர் அதிகாரியாக இருப்பவர்கள் இடையே சாதி, மதப் பாகுபாடுகள் இருப்பதில்லை என்பதற்கு இவர்செய்துகொண்ட திருமணமே சாட்சி. சென்னையின் சாமுவேல் பால், உபி பிரிவு 2013 பேட்ச் அதிகாரியை மணந்து கொண்டதன் மூலம் சிறந்த முன்னுதாரண பெண்ணாகவும் திகழ்கிறார் திவ்யா. - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in