

ஊடகத்துறை மூலமாக ஜொலிக்க வேண்டுமானால் யாரும் செய்யாத ஒரு பணியை தேர்ந்தெடுங்கள், அதில் முழுமையாக ஈடுபடுங்கள், பிறகு பாருங்கள், நிச்சயம் அதில் வெற்றி பெற்று இருப்பீர்கள். இன்றைய சமூக ஊடகங்கள் அதற்கான வாய்ப்பினை நம் வரவேற்பறைக்கே கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன. நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் கேள்வி. பலமுறை வகுப்பில் மாணவர்களோடு பகிர்ந்து கொண்ட இன்னொரு தகவல், இலக்கிய நிகழ்வுகளை மட்டுமே ஆவணப்படுத்தி வரும் ஷ்ருதி டி.வி. கபிலனைப் பற்றியது. தொடக்கக் காலத்தில் சென்னையில் மட்டுமே நடந்த இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்திய கபிலன், இன்று தமிழகம் முழுவதும் சென்று அனைத்து இலக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தி வருகிறார்.
இன்று பலரும், நேரடியாக நடக்கும் அந்த இலக்கிய நிகழ்ச்சிக்குப் போகாமல், எப்படியும் ஷ்ருதி டி.வி.யில் கபிலன் பதிவேற்றிவிடுவார், அங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். நிகழ்ச்சியும் உடனுக்குடன் பதிவேற்றப்பட்டு விடுகிறது. அந்த அளவிற்குஅனைத்து நிகழ்வுகளையும் ஆவணப்படுத்துவதன் ஊடாக இலக்கிய உலகில் கவனம் பெற்றுவிட்டது அந்த யூடியூப் சேனல். ஒரு சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட, ஷ்ருதி டி.வி. வந்தால்தான் நான் பேசுவேன் என்று கூறும் அளவிற்கு இன்று இவரது சேனல் புகழ்பெற்றுள்ளது. காட்சி வடிவத்தில் உள்ளதை, நான் மாணவர்களிடம் ஒலி வடிவத்தில், அதாவது போட்காஸ்ட் அல்லது இணைய வானொலி வடிவத்தில் ஒலிபரப்ப ஏன் நீங்கள் முயற்சி செய்யக்கூடாது என்று கூறினேன்.
அனைவராலும் காட்சி வடிவத்தில் வருவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது, வேலை செய்து கொண்டே கேட்பதற்கு உகந்தது வானொலி வடிவம். 24 மணி நேரமும் இலக்கியம் மட்டுமே பேசும் ஒரு போட்காஸ்ட் வானொலி இருந்தால் எப்படியிருக்கும்? சிந்தியுங்கள், அடுத்த வாரம் இன்னும் ஒரு சுவாரஸ்யமான ஊடகத்தோடு சந்திப்போம். நெதர்லாந்தின் தேசிய வானொலியான ‘ரேடியோ நெதர்லாந்து’ ஊடக பயிற்சியைவளரும் நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் இலவசமாகவே வழங்கி வருகிறது. ரேடியோ நெதர்லாந்து பயிற்சி மையத்தின் (https://rntc.com/) ஊடாகவே இந்த படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் இணையதளத்தில் ஊடக படிப்பினை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏராளமான கையேடுகள், பயிற்சிப் பாடங்களைப் பதிவேற்றியுள்ளனர்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.comw