

டாக்டர்... நான் கொஞ்சம் கருப்பு... என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஃபேர்னஸ் கிரீம்களை பூசுனா சிவப்பாயிடுவேன்னு சொல்றாங்க. வாங்கி பயன்படுத்தலாமா என்று, ஒரு பிரபல நிறுவனத்தின் விலையுயர்ந்த கிரீமை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருக்கிறாள் ஒன்பதாம் வகுப்பு சுனிதா.
சிவப்பழகு கிரீம் நம்மை எப்படி சிவப்பாக்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன், நமது சருமத்தைப் பற்றி படித்ததைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம் சுனிதா. பொதுவாக மனிதனின் தோல் உடலுக்குள் இருக்கும் தசைகள், எலும்புகள், தசைநார்கள், உள்ளுறுப்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன், வெளியிலிருக்கும் கிருமிகளில் இருந்துஉடலை காத்து, வெளிப்புற தட்பவெப்பத்திற்குத் தகுந்தவாறு உடலின் வெப்பத்தை சமச்சீராக வைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தோல் மூன்று அடுக்குகளாலான உணர்ச்சியுடன் கூடிய உறுப்பாகும்.
இதில், வெப்பம் மற்றும் கிருமிகளிலிருந்து காக்கும் மேற்புறத் தோலை எபிடெர்மிஸ் என்றும், அதற்குக் கீழே அமைந்துள்ள இரண்டாம் அடுக்கை டெர்மிஸ் என்றும், எலும்பு, தசை, போன்றவற்றை தோலுடன் இணைக்கும் மூன்றாம் அடுக்கை ஹைப்போடெர்மிஸ் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். கருவிலேயே உருவாகும் இந்தத் தோலின் மேற்பகுதிதான் நாம் கருப்பா, சிவப்பா என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால் அந்த நிறத்தை தீர்மானிப்பது இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் பகுதியிலிருக்கும் மெலனோசைட்ஸ் எனும் செல்களிலிருந்து உற்பத்தியாகும் மெலனின் எனும் நிறமி. இதுதான் நமது சருமத்தின், முடியின், கண்களின் நிறத்தையெல்லாம் தீர்மானிக்கிறது.
உண்மையில், நமது நிறம் என்பது மரபணு சார்ந்தது என்றாலும் மெலனோசைட்ஸ் அதிக மெலனினை சுரக்கும்போது சருமம் கருமையாகவும், குறைந்தளவு சுரக்கும்போது வெண்மையாகவும், என ஒவ்வொருவரின் நிறமும் மெலனின் காரணமாக மாறுபடுகிறது. அதிலும், இந்த மெலனின் நிறமிகளில், மூளை மற்றும் உள் உறுப்புகளுக்கு ஒருவித நிறம் தருபவற்றை நியூரோமெலனின் என்கிறார்கள். உதடுகள், ஈறுகள்ஆகியவற்றுக்கு மற்றொரு நிறம் சேர்க்கும்போது அவற்றை ஃபியோமெலனின் என்கிறார்கள். சருமத்தையும், கேசத்தையும், கண்களையும் கருமையாக்கும் மெலனினை யூமெலனின் என்று குறிப்பிடுகிறார்கள்.
யூமெலனின்தான் சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களால் (UV A, UV B) நமது சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. அதன் காரணமாக தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவி, அத்துடன் வைட்டமின் டி சுரப்பதையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஊக்கப்படுத்தி, ஆரோக்கியத்தை சீராக்கவும் பெரிதும் உதவுகிறது. இப்படிப்பட்ட மெலனினை சுரக்காமல் வைக்கவும், அல்லது சுரந்த மெலனினை வெளியேற்றவும்தான் சந்தையில் விற்கப்படும் ஃபேர்னஸ் கிரீம்கள் போட்டி போடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த கிரீம்களால் கூட, வெறும் 20 சதவீதம்வரை மட்டுமே தோலை வெளுக்கச் செய்ய முடியும். ஆனால், இந்த 20 சதவீத வெண்மைக்கு நாம் கொடுக்கும் விலை மிகமிக அதிகம். அது மட்டுமின்றி இதனால் நிகழும் பக்கவிளைவுகள் இன்னும் அதிகம் என்று கூறுகிறார்கள் தோல்நோய் நிபுணர்கள். காலை எழுந்ததும் முகம் கழுவ ஒரு கிரீம், கழுவிய முகத்துக்கு தடவிக் கொள்ள ஒரு கிரீம், குளிக்க ஒரு சோப், முகத்துக்கு வேறு ஒரு பேக், குளித்த பிறகு கை, கால் அழகைப் பாதுக்காக்க ஒரு லோஷன் என்று தினந்தோறும் இந்த சிவப்பு அழகுக்காக நாம் ரசாயன அமிலங்களில்தான் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
(சிக்கப்பழகு குறித்த ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com