

முந்தைய அத்தியாயத்தில் குழந்தைகளுக்கு உண்டியலில் பணத்தை எவ்வாறு சேமிக்கக் கற்றுக் கொடுப்பது என்பது குறித்து பார்த்தோம். குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் தொடக்க நிலையில் எளிய முறையில் சேமிப்பதற்கு உண்டியல் முறை உதவும். ஆனால், நீண்ட கால சேமிப்பு திட்டத்துக்கு அது பயன் தராது. ஏனெனில் உண்டியலில் 10 ரூபாய் போட்டால் 10 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த 10 ரூபாய் அப்படியே இருக்கும். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பணத்தின் மதிப்பை விட தற்போது அந்த பணத்தின் மதிப்பும் நடைமுறையில் மிகவும் குறைந்திருக்கும். அது பற்றிய விழிப்புணர்வை நாமும் பெற வேண்டும். குழந்தைகளுக்கும் உணர்த்த வேண்டும்.
சிறார் வங்கிக்கணக்கு: வங்கிகள் பலவற்றிலும் குழந்தைகளுக்கும் சேமிப்புக் கணக்கு தொடங்கி செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. நிறைய சிறப்பு திட்டங்களும் கூட அதில் செயல்படுகின்றன. ஆகையால் குழந்தைகள் பெயரிலேயே வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்குங்கள். அதில் எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் என்பது பற்றி அவர்கள் கற்றுக் கொள்வதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள். அதன் மூலம் அவர்கள் நிதியை எவ்விதம் கையாள்கின்றனர் என்பதை கவனியுங்கள். உதாரணத்துக்கு ஹெச்டிஎஃப்சி வங்கியில் குழந்தைகள் சேமிப்புக் கணக்குக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன. குறிப்பாக டெபிட்கார்டு, கல்விக் காப்பீடு, மணி மேக்ஸிமைஸர் மற்றும் இலவச இணையதள வங்கி சேவை உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது.
இதில் ரூ.1 லட்சம் வரையிலான தொகை கல்வி காப்பீடாக அளிக்கப்படுகிறது. இந்த தொகையானது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ திடீரென உயிரிழந்தால் குழந்தைகளுக்குக் கிடைக்கும். இதுவே மணி மேக்ஸிமைஸர் திட்டத்தில் குழந்தையின் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை ரூ.35,000-த்துக்கும் அதிகமானால் அதில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் உள்ள தொகை நிரந்தர வைப்புக் கணக்கில் ஓராண்டுக்கு வைக்கப்படும். இதேபோல கனரா வங்கியின் ஜூனியர் சேமிப்புக் கணக்கு திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி சிறுவர், சிறுமியர்களிடம் சேமிக்கும் வழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தபால் துறையால் தொடங்கப்பட்டதுதான் சஞ்சாயிகா சிறுசேமிப்புத் திட்டமாகும்.
வங்கி செயல்பாடு பயில்க: உங்கள் பிள்ளைக்கு 6 அல்லது 7 வயதாக இருக்கும்போதே, வங்கிக் குறிப்புகள், காசோலைகள், பாஸ் புத்தகம் மற்றும் அடிப்படை கணக்கு அறிக்கை ஆகியவற்றிலிருந்து தொடங்கி பணம் சேமிப்பு பற்றிய அடிப்படைகளை அவர்களுக்குக் கற்பிக்கலாம். பள்ளி விடுமுறை நாட்களில் வங்கி, ஏடிஎம், தபால் அலுவலகம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுவதன் மூலமாகவும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க முடியும்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பாபாசாகேப் அம்பேத்கரையே சொல்லலாம். மிகச்சிறந்த பொருளாதார மேதையாகத் திகழ்ந்த அம்பேத்கர் லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதும் கடிதமொன்றில், நம்முடைய குழந்தைக்கு பணத்தை சேமிப்பது குறித்த முக்கியத்துவத்தைக் கற்றுத் தர வேண்டும். ஆகையால் ஓய்வாக இருக்கும் நேரங்களில் குழந்தையை வங்கிக்கு அழைத்துச் சென்று, வங்கிகளின் நடைமுறைகளையும் வங்கி கணக்கு தொடங்குவது, பணம் போடுவது, எடுப்பது உள்ளிட்ட நடைமுறைகளைக் கற்றுக் கொடு என்று எழுதினார். பணம் குறித்தான சிந்தனையும் ஒழுங்குமுறையும் தன்னுடைய குழந்தைக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வளர வேண்டும் என்பதே அம்பேத்கரின் விருப்பமாக இருந்தது. அவருடைய இந்த எண்ணம் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எவ்வளவு நல்லது என்பதை நாம் உணர வேண்டும்.
குழந்தைகள் தங்களுக்குப் புரிந்த, தெரிந்த வழிகளில் சிறிய வழியில் பணத்தை சேமிக்கத் தொடங்கினால், அந்த சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அந்த பணத்தை எவ்வாறு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் புரிய வைக்க வேண்டியது நம் கடமை. சேமிப்பு என்பது வெறும் பணம் சார்ந்த விஷயம் மட்டுமே கிடையாது. அது பொறுமை, ஒழுங்குமுறை மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையையும் வளர்க்கும். 'இப்போது சேமித்தால் எதிர்காலத்தில் நிறைய வாங்கலாம்' என்ற கருத்தை பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது மிக முக்கியம். குழந்தைகள் தாங்களே சுயமாக முடிவுகளை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அல்லது நிதிக் கருவிகள் உள்ளனவா என்ற தேடலை இன்றைக்கு தொழில்நுட்பங்கள் பெருமளவில் உருவாக்கித் தந்திருக்கின்றன. இணையத்தில் பல்வேறு சேமிப்பு கால்குலேட்டர்கள் உள்ளன. குழந்தை வளரும்போது சேமிப்பு மற்றும் செலவு அட்டவணைகளை அவர்களே உருவாக்குவதற்கு அவர்களுக்கு பெற்றோர் பயிற்சி கொடுக்கலாம். பண விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in