

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இந்தியர்தான், இன்று மனிதர்கள் அனைவரும் நீண்டகாலம் வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கினார் என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை என்று 1950-ல் பிரபல வார இதழ் ஒன்றில் எழுதினார் அமெரிக்க எழுத்தாளர் டோரான் ஏண்ட்ரிம். அந்த இந்தியர், டாக்டர் எல்லப்பிரகத சுப்பாராவ்.
ஆந்திராவில் உள்ள பீமவரம் மாவட்டத்தில் 1895-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று, ஜகன்னாதம் வெங்கம்மா தம்பதியினரின் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் சுப்பாராவ். தந்தை அரசுப் பணியில் இருந்தபோதும் ஏழு குழந்தைகளில் ஒருவர் என்பதால் வறுமையுடன் கழிந்தது சுப்பாராவின் பிள்ளைப்பிராயம். பள்ளிப் படிப்பை முடிக்கவே மூன்றுமுறை தடை, பழவியாபாரம் செய்தால் பணம் ஈட்டலாம் எனும் முயற்சி, சந்நியாசியாக வாழலாம் என ராமகிருஷ்ண மடத்தில் சேர பிரயத்தனம் என பற்பல இடையூறுகளைக் கடந்த பிறகே உயர்கல்வி பயிலச்சென்றார் சுப்பாராவ்.
கதராடையால் மறுக்கப்பட்ட பட்டம்: ரத்தசோகை நோய் காரணமாக சகோதரர்கள் இருவரையும் இளமையிலேயே இழந்த சுப்பாராவ், ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கு தனது மெட்ரிக் மற்றும் இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து மருத்துவம் பயில்வதற்கு முயற்சி செய்தார். அப்போது அவரது கல்விக்கு உதவிய உறவினர் சூரியநாராயண மூர்த்தியின் மகளையே பிற்பாடு மணமுடித்தார்.
அதேசமயம் நாடெங்கும் சுதந்திர வேள்வி சூழ்ந்திருக்க, அதில் ஈர்க்கப்பட்ட சுப்பாராவ், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இதன் தாக்கத்தால் கதராடை மற்றும் கதர் கையுறைகளை மட்டுமே அணிந்து கல்லூரிக்குச் செல்ல, அதில் அதிருப்தியடைந்த அப்போதைய மருத்துவப் பேராசிரியர், அனைத்து பாடங்களிலும் நன்கு தேர்ச்சிபெற்ற சுப்பாராவுக்கு எம்பிபிஎஸ்-க்கு பதிலாக எல்எம்எஸ் எனும் குறைவான பட்டத்தை மட்டுமே வழங்கினார்.
இதனால் மனமுடைந்த சுப்பாராவ் மீண்டும் முழுமையான மருத்துவப் பட்டத்தைப் பெற்றிடத் தொடர்ந்து போராடினார். ஒருகட்டத்தில் மருத்துவப் பட்டமும், அரசுப் பணியும் நிராகரிக்கப்படவே, உடற்கூறியல் விரிவுரையாளராக சென்னையின் ஆயுர்வேதக் கல்லூரி ஒன்றில் பணியாற்றத் தொடங்கினார். அதுவே அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாகவும் அமைந்தது.
குறிக்கோளை உணர்ந்த தருணம்: ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் பேரார்வம் கொண்டு மருத்துவ ஆராய்ச்சிகளை அதிலிருந்து தொடங்கினார் சுப்பாராவ். அவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட மாமனார் சூரியநாராயண மூர்த்தி, காக்கிநாடா சத்தியலிங்கம் அறக்கட்டளை மற்றும் ராக்பெல்லர் நிதியுதவி சுப்பாராவுக்கு கிடைக்கச் செய்தார். மேலும் அடுத்த கட்டம் நோக்கி நகர சுப்பாராவை 1922-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், வெப்பமண்டல மருத்துவத்தில் மேற்படிப்பைப் பயின்ற டாக்டர் சுப்பாராவ், கல்வி மற்றும் தன் இதர செலவுகளுக்கு பல பணிகளைச் செய்து சமாளித்தார். பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 1924-ம் ஆண்டு, அதே பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறையில் பேராசிரியர் சைரஸ் ஃபிஸ்கேவின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக பணியில் அமர்ந்தார். அதிலிருந்து மருத்துவ ஆராய்ச்சிதான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணர்ந்தார் சுப்பாராவ்.
பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே ரத்தத்தில் பாஸ்பரஸின் அளவை விரைவாக மதிப்பிடும் முறையை கண்டறிந்தார். ஃபிஸ்கே-சுப்பாராவ் முறை என்று அந்த ஆண்டே அவரது கண்டுபிடிப்பு பாடப் புத்தகங்களில் இடம்பெற்றது. அதுவே உலகெங்கிலும் உள்ள உயிர்வேதியியல் மாணவர்கள் கற்கும் ஓர் அடிப்படை கற்றல் முறையாகவும் இன்றுவரை இருக்கிறது. அதை தொடர்ந்து ஹார்வர்டின் உயரிய முனைவர் பட்டமும் வந்து சேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக உண்ணும் உணவை உடலில் சக்தி வடிவமாக சேமித்து வைப்பதிலும், தேவைப்படும்போது சக்தியாக மாற்றி நம் தசை இயக்கத்திற்கு உதவும் சக்தி வடிவங்களான பாஸ்போகிரியாட்டின் மற்றும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் வேதிப்பொருட்களை கண்டுபிடித்தனர் ஃபிஸ்கே-சுப்பாராவ் ஆய்வுக்குழுவினர். ஆனால், அதுவரையில் கிளைக்கோஜென், லாக்டிக் அமிலமாக மாற்றம் பெறுவதே தசை இயக்கத்திற்கு காரணமாக உள்ளது என்று கருதப்பட்டதுடன் 1922-ம் ஆண்டு அதற்காக கொடுக்கப்பட்ட நோபல் பரிசும் தவறு என்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு சுட்டிக்காட்டும் என்பதால், நோபல் கமிட்டி இப்பெரும் கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்தை ஃபிஸ்கே-சுப்பாராவிற்குத் தர மறுத்துவிட்டது.
ஆனாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது ஆசிரியப் பணியை ஹார்வர்ட்பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த டாக்டர்சுப்பாராவ், உயிர்வேதியியல் மாணவர்களுக்கும், அவர்களது ஆய்வுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அச்சமயத்தில் அவரது ஒரே மகன் 'எரிசிபெலாஸ்' என்ற தொற்றுநோயால் இறக்க, மனமுடைந்த டாக்டர் சுப்பாராவ், இதுபோல இனி யாரும் இறக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், ஆண்டிபயாடிக்குகள் ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் . அதைத் தொடர்ந்து, தனது சகோதரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு, இளம்வயதில் இருவர் மரணத்து இட்டுச்சென்ற பெர்னீசியஸ் அனீமியா எனும் ரத்த சோகைக்கான காரணத்தை அறியவேண்டி, APAF எனும் ஆண்டி பெர்னீசியஸ் அனீமியா ஃபேக்டரை விலங்கு ஈரலிலிருந்து பிரித்தெடுக்க முற்பட்டார். அந்த ஆராய்ச்சியில் ஈரலிலிருந்து வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் B12-ஐ பிரித்தெடுக்க முயன்று, சுப்பாராவ் தோல்வியடைந்தாலும், B12 பிரித்தெடுத்தல் முறையில் அவரது பங்கு முக்கியமானது. ஆனாலும், இன்றுவரை வைட்டமின் B12 கண்டுபிடிப்பில் சுப்பாராவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்படவில்லை என்பதுதான் பெரும் வேதனை.
(சுப்பாராவின் மகிமை தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர்,
சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com