

ஒப்பிடுதல் போன்ற கடுப்பான விஷயம் இருக்கவே முடியாது இல்லையா? அவன் ஒரு வயசிலேயே பேசினான், அவள் ஒன்றரை வயதில் திருக்குறள் சொன்னாள் என அப்பொழுது முதலே ஆரம்பித்து விடுவார்கள். பள்ளிக்குள் வந்தது முதல் இந்த ஒப்பீடு இன்னும் அதிகரித்துவிடும். அவளால முடியுது உன்னால ஏன் முடியல, அவன் செஞ்சிட்டான் உன்னால ஏன் முடியல. அவன் சீக்கிரம் எழுதறான், அவன் வேகமா வரையிறான், அவள் தைரியமாக பேசறாள்... யோசித்துப் பார்த்தல் இது பெரிய பட்டியல் இல்ல?
முதலில் ஒன்றினை ஆழமாக நாம புரிந்துகொள்ள வேண்டும். இவ்வுலகில் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள். ஒரு வகுப்பறையில் நாற்பது மாணவர்கள் இருக்கையில் நாற்பது பேரும் பாடத்தை ஒன்று போலவே உள்வாங்க மாட்டார்கள். சிலருக்குச் சொன்னதைத் தாண்டியும் புரிந்திருக்கும், சிலர் மெல்லக் கற்கும் குழந்தைகளாக இருப்பார்கள். அது அவர்களின் இயல்பு. அந்தஇயல்பில் இருந்து திடீரென மாற்ற நினைத்தால் விபரீதமான விளைவுகள் நடக்கும்.
ஆனால், ஒப்பீடு அவசியம். ஆனால், அந்த ஒப்பீடு உங்களை வைத்து இருக்க வேண்டும். உங்களுக்கு கிடைத்த சூழல், வீட்டு நிலைமை, பள்ளிச்சூழல், ஆசிரியர்கள், நண்பர்கள், உடல் நலம் இவை எல்லாம் வைத்து நீங்கள் எப்படி முன்னேறுகிறீர்கள், எப்படித் திறன்களை வெளிக்காட்டுகிறீர்கள் என்ற ஒப்பீடு செய்து கொள்ளலாம். இசைவான வீட்டுச்சூழல் இருக்கிறது, கேட்டது கிடைக்கும் பெற்றோர் இருக்கிறார்கள், அங்கே வளரும் ஒரு குழந்தை பெறும் மதிப்பெண்ணும் சூழல் சரியில்லாத வீட்டில் வளரும் குழந்தை பெறும் மதிப்பெண்ணையும் ஒப்பிடவே முடியாதே! ஆகவே ஒப்பீடு உங்களை வைத்தேதான் இருக்க வேண்டும்.
அதே சமயம் சோர்ந்தும் போய்விடக் கூடாது. திரும்ப உங்களை உங்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளும்போதும் சிக்கல் நிகழும். அய்யோ இவ்வளவு இருந்தும் செய்ய முடியலையே? எனக்கு இவ்வளவுதான் வாய்ச்சிருக்கு அதோட நின்னுக்கறேன் என்ற மனநிலைக்கும் போய்விடக் கூடாது. நேர்மறை எண்ணங்களே பிரதானம். எனக்கு சிக்கல் இருக்கு என்பதை மனதார ஏற்றுக் கொண்டு அங்கிருந்து நகர்வது எப்படி என யோசிக்கவே இந்த பயிற்சி. அந்த சிக்கலை எப்படி எல்லாம் வெல்வது, எப்படி எல்லாம் தகர்த்து எறிவது நீங்களாக யோசிக்க வேண்டும். தேவையெனில் உங்கள் நண்பர்களையோ, ஆசிரியர்களையோ, பெரியவர்களையோ நாடலாம். மெல்ல நகர்வோம். நகரும்போது ஒவ்வொரு கால அளவிலும் மீண்டும் ஒப்பிட்டுக் கொள்ளலாம், உங்களுடன் உங்களையே. உங்களின் இரண்டு மாதத்திற்கு முந்தைய உங்களையும் இன்றைய உங்களையும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நகர்தலே வெற்றி.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
தொடர்புக்கு: umanaths@gmail.com