

ஒரு நாள் காலைநேரம் ஒருவரது சகோதரர் மரணித்துவிட்டார். செய்தித்தாளில் அனுதாபங்கள் தெரிவித்து பல அறிவிப்புகள் வெளியாகின. அவற்றில் சில “உலகின் மரண வியாபாரி மரணித்தார்” என்று செய்தி வெளியிட்டன. அதனை அவர் வாசிக்கிறார். உண்மையில் மரணித்தது சகோதரராயிருப்பினும் ‘மரண வியாபாரி’ என்று விளிக்கும் அளவுக்கு பெயரோடு இருந்தவர் தாமே என்பது அவருக்குத் தெரியும். மிகவும் வருத்தப்பட்ட அவர் தமது மரணத்திற்குப் பின்னும் தாம் நல்லவிதமாக நினைவு கூரப்பட வேண்டும் என நினைத்தார். அதன்படியே தமது வருவாயில் 94 சதவீத நிதியை ஒதுக்கி அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். இந்த தொகையில் வரும் வட்டியை கொண்டு ஆண்டுதோறும் இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கு பரிசளிக்கும் ஏற்பாட்டினை செய்தார். ஆம் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் (1833-1896) பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அன்று மரணித்திருந்தது அவரது சகோதரர் லுட்விக். இந்த சம்பவம் மட்டுமல்லாமல் நோபலுக்கு உதவியாளராக வந்த பெர்த்தா வான் சட்னர் (Bertha von Suttner) என்பவர் உலக அமைதியை வலியுறுத்தி எழுதிய Lay down you arms என்ற புத்தகமும் அவருடைய உந்துதலுக்கு காரணம் என்பர். ஆல்ஃப்ரெட் நோபல் 1833-ல் ஸ்வீடன் தலைநகரம் ஸ்டாக் ஹோமில் பிறந்தவர். பின்னர் அவரது குடும்பம் ரஷ்யாவுக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். இதன் மூலம் பெரும்செல்வந்தரானார். பாரிஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்ற நோபல் வேதியியல் வல்லுநரானார். திடீரென்று ரஷ்யாவில் மூண்ட போரால் அவரது தந்தையாரின் தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் மீண்டும் இவரது குடும்பம் ஸ்வீடனுக்கே குடிபெயர்ந்தது.
வேதியியலில் ஆர்வம் கொண்டு பயின்ற நோபல் வெடிமருந்து கூடத்தை அமைத்தார். அவரது காலகட்டத்தில் தொழில் வளர்ச்சி பல்கிப்பெருகியது. இதனால் மலைகளைக் குடைந்து பாதைகளை உருவாக்குதல், இதற்குத் தடையாக உள்ள பாறைகளை வெடிக்கச் செய்தல் போன்ற காரணங்களுக்காக வெடிபொருட்கள் தேவைப்பட்டன. அந்நாட்களில் இதற்கு நைட்ரோ கிளிசரின் என்ற பொருளைப் பயன்படுத்தி வந்தனர். இது காற்று பட்டவுடன் வெடித்தது. இதனைச் சரிவரக் கையாளத் தெரியாததால் ஏற்பட்ட விபத்துகளால் பலரும் மடிந்தனர். இப்படி உயிரிழப்போர் பெரும்பாலும் கைதிகளாகவே இருந்தனர். இதனைக் கண்டு நோபல் மனம் வருந்தினார்.
1862-ல் ஸ்டாக்ஹோம் நகரில் அவர் தொடங்கிய தொழிற்சாலை மூலம் நைட்ரோ கிளிசரின் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்பட்டது. இது ஓரளவுக்குப் பாதுகாப்பானதாக இருந்தபோதும் ஒருநாள் அவரது தொழிற்சாலை வெடித்துச் சிதறியது. இதில் அவரது சகோதரர் உள்ளிட்ட பலரும் இறந்தனர். அன்று வழக்கத்தைவிட தாமதாமாக நோபல் தொழிற்சாலைக்குப் புறப்பட்டதனால் உயிர்தப்பினார். இதனிடையே அரசும் இவரது தொழிலுக்குத் தடைவிதித்தது.
இருப்பினும் தனது வீட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு நைட்ரோ கிளிசரினுடன் ஒரு வேதிப்பொருளைக் கலந்தால் அது பாதுகாப்பானதாகவும் வீரியம் மிக்கதாகவும் இருந்ததைக் கண்டறிந்தார். கிரேக்க மொழியில் சக்தி எனப் பொருள்படும் டைனைமைட் என பெயரிட்டார். இவரது கண்டுபிடிப்பு நாடுகளிடையே மூண்ட போர்களுக்கும் பயன்படுத்தப்படவே வாழ்நாள் முழுவதும் மன உளைச்சல்களுடனேயே இருந்தார்.
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com