கதை கேளு கதை கேளு 15: அன்பின் உருவம்

கதை கேளு கதை கேளு 15: அன்பின் உருவம்
Updated on
2 min read

கீர்த்தி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி. தன் ஊரை, தெருவை, அங்குள்ள வீடுகளை, அதில் வாழும் மனிதர்களை அங்குலம் அங்குலமாக நேசிக்கிறாள். அனைவருடனும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ அன்பு ஒன்றே போதும் என்பதை கீர்த்திக்கு சொல்லித் தந்தது செல்வி அத்தை. அவர் அண்ணல் தெருவின் முனையில், குடிசைப் போட்டுக் கொண்டு பள்ளிமாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை செய்துகொண்டு, பகல் பொழுதுகளில் அந்தத்தெருவில் உள்ளவர்களின் அவசர தேவைகளை நிறைவேற்றி வைத்துக்கொண்டிருக்கும் சமூக ஆர்வமுள்ளவர்.

தெருவின் முனையில் உள்ள கோவிலில் அமர்ந்துகொண்டு முந்தைய நாள் பள்ளி செல்லாததால், பள்ளியில் தவறவிட்ட பாடத்தை, பள்ளி நண்பன் அருணுடைய நோட்டை வாங்கிவந்து குறிப்பெழுதிக் கொண்டிருக்கிறாள் கீர்த்தியும் அவள் தோழி சுஜிதாவும். கீர்த்தி தன் வீடு நோக்கி வரும்போது, திடீரென ஒரு டெம்போ நிறைய மனிதர்கள் இறங்கி வந்து ஒவ்வொரு வீட்டையும் அடித்து சேதப்படுத்துவதோடு, பொருட்களையும் தீயிட்டுக் கொளுத்திவிடு கிறார்கள்.

கீர்த்தி வீட்டுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் டெம்போவும் வீட்டு வாசலில் வைத்து கொளுத்தப்படுகிறது. ஊர்மக்கள் அனைவரும் ஓடிச்சென்று வயலின் சோளப்பயிரின் மறைவில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பிக்கின்றனர்.

என்ன காரணம்? - வன்முறை கும்பல் ஊரைவிட்டுச் சென்றபிறகு, ஊரின் களத்தில் அனைவரும் கூடி,வன்முறை ஏன் நிகழ்ந்தது? வந்தவர் யார்என்று பேசுகிறார்கள். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பொதுஉணவு சமைத்து சாப்பிட வைத்து, ஆறுதல் தருகிறார் செல்விஅத்தை. அவரிடம் கீர்த்தி நடந்த வன்முறைக்கான காரணங்களைக் கேட்கிறாள். நம் தெருவில் உள்ள பாரதி அண்ணன் பக்கத்து ஊரில் உள்ள வேற்றுச்சாதி பெண்ணை சென்ற மாதம் திருமணம் முடித்தானே? அதுதான் காரணம். இதுபற்றி மேலும் வயது ஆகும்போது புரியும் என்று கூறுகிறார் செல்வி அத்தை. நடந்து முடிந்த சம்பவத்தால், போலீஸ் பாதுகாப்பு அண்ணல் தெருவில் அதிகரிக்கிறது. சிறிது நாட்களுக்கு பள்ளி செல்லகாவல்துறையால் தடையும் விதிக்கப்படுகிறது. ஆனால் கீர்த்தி தன் நண்பன்அருணிடம் பெற்று வந்த நோட்டுப்புத்த கத்தை திரும்பத் தர வேண்டும்.ஆதலால் பள்ளி செல்ல வேண்டும் என்கிறாள். செல்வி அத்தை காவலரின் ஆணை பற்றி கூறும்போது, நம் ஊரை சேதப்படுத்தியவர்கள் பக்கத்து ஊர்காரர்கள். அப்படியிருக்க நம்மை ஏன் காவல் துறையினர் கட்டுப்படுத்துகின்றனர்? என்கிறாள் கீர்த்தி.

ஓவியப் போட்டி: ஆனாலும் அருணிடம் நோட்டை சேர்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். காரணம் நோட்டைத் திருப்பிதரவேண்டும் என்பது மட்டுமல்ல., அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஓவியப்போட்டியில் கலந்துகொள்ள அருண் வரைந்து வைத்திருக்கும் ஓவியமும் அவளுடைய நோட்டில்தான் உள்ளது. ‘‘ஓவியத்தை ஒப்படைக்க திங்கட்கிழமை கடைசிநாள். அதனால்தான் அத்தை’’ என்று கெஞ்சுகிறாள் கீர்த்தி. அடம்பிடிக்கும் கீர்த்தியிடம் அந்த ஓவியத்தை நாமே போட்டிக்கான முக வரிக்கு அனுப்பிவிடலாமே என்கிறார் அத்தை. ஓவியம் முழுமையாக வரையப் படவில்லை அத்தை. அருண்தானே மீதத்தை வரைந்து அனுப்ப வேண்டும் என்கிறாள். காவலருக்கு தெரியாமல் கீர்த்தியை அழைத்துக்கொண்டு பக்கத்து ஊருக்கு செல்வி அத்தை செல்கிறார். வழியில் செல்வி அத்தையும், கீர்த்தியும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் சிறுவர்சிறார்களுக்கு, சமுதாயத்தில் நிலவும்மதம், சாதி பற்றிய தவறான அபிப்ராயங் களையும், புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளையும் சொல்கின்றன.

அருண் ஊரில் இல்லாத காரணத்தால் நோட்டையும், ஓவியத்தையும் திரும்பத் தராமலே அத்தையும், கீர்த்தியும் திரும்புகின்றனர். கீர்த்தியே ஓவியத்தை நிறைவு செய்து, போட்டிக்கான முகவரிக்கு அனுப்பிவைக்கிறாள். வன்முறை செய்த ஊரைச் சேர்ந்த அருணிடம் கீர்த்தி எந்தப் பகை உணர்வையும் கொள்ளவில்லை. இருபது நாட்கள் கழித்து சகஜநிலைக்கு ஊர் திரும்பிய பின்னே, அண்ணல் தெரு குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். அங்கே அருண் ஓவியப் போட்டியில் முதல்பரிசு கிடைத்த செய்தியை கீர்த்தியிடம் சொல்லி, தன் ஊரினர் செய்த வன்முறைச் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறான்.

கதையின் ஆரம்பம் முதலே செல்வி அத்தை நம்மை அதிசயிக்க வைக்கிறார். கீர்த்தியை அழைத்துக்கொண்டு காவலர் அறியாமல், செல்லும் வழியெங்கும் சந்திக்கும் இடர்களை சமாளிக்கும் இடத்தில் அவரின் நுண்ணறிவை மெச்சத் தோன்றுகிறது. கீர்த்தி வன்முறைக்கும் அன்பையே பரிசாகத் தருவேன் என்று அடம்பிடிக்கிறாள். ஊரில் காயம்பட்ட குடும்பத்தினருக்கு கீர்த்தி ஓடி ஓடி உதவி செய்கிறாள். செல்வி அத்தையும், கீர்த்தியும் அன்பின் உருவமாக தெரிகின்றனர். நீலப்பூ புத்தகத்துக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் நின்று கவனிக்கச் செய்கின்றன.

வாசிக்கும் சிறார்களுக்கு ஆர்வமூட்டுவ தாகவும், படத்தைப் பார்த்து கதையைச் சொல்லும் விதமாகவும் ஓவியங்கள் அழகாகப் பொருந்தியுள்ளன. நூலின் மொழி எளிமையாக சிறுவர் வாசிக்க ஏற்றதாக உள்ளது. நூலின் ஒவ்வொரு வரியும் கதையைக் காட்சிப்படுத்திக் கொண்டே செல்கின்றன. நூல் வாசகரிடம் திரைமொழியில் பேசுகின்றது. நீலப்பூஅன்பு எனும் உயிர்ப்பூவாய் மலர்ந்திருக்கின்றது. நீலப்பூ நூலின் ஆசிரியர் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன். இந்நூலை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கட்டுரையாளர்: குழந்தை நேய

செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு

மேல்நிலைப்பள்ளி, திருப்புட்குழி,

காஞ்சிபுரம்.

தொடர்பு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in