

நைஜீரியா நாட்டு தந்தைக்கும் மொரீசி யஸ் நாட்டு தாய்க்கும் மகளாக 2002-ல் அமெரிக்காவில் பிறந்தவர் சூரியல் ஒடுவோல். பள்ளியில் படித்தபோது குறும்பட போட்டி பற்றி அறிந்தார். “உலகில் நடந்த புரட்சிகள்” என்பது போட்டியின் மையக் கரு. 1979-ல் கானா நாட்டில் நடந்த புரட்சியை குறும்படமாக தயாரிக்க சூரியல் முடிவெடுத்தார். அப்போது, வயது 10.
ஒளிப்படக் கருவியை எப்படி கையாள்வது, காணொளிகளை எப்படி எடிட் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் யூடியூப் வழியாக கற்றார். கானாவுக்கு சென்று, அந்நாட்டு அதிபரை பேட்டி கண்டார். பயணத்தின்போது, எண்ணற்ற சிறுமிகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதைக் கவனித்தார். சில சிறுமிகளிடம் பேசினார். அந்த நேரடி அனுபவம், பெண் கல்விக்காக பேசவும், உழைக்கவும் உத்வேகம் கொடுத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் 12 வயதிலேயேகூட சிறுமிகளுக்கு திருமணம்நடப்பதுண்டு. குறைந்தபட்சம் 18 வயது வரையாவது கல்வி கொடுத்தால், முன்னேறுவதற்கான நிறைய வாய்ப்புகளை பெண்களால் யோசிக்க முடியுமே என சூரியல் சிந்தித்தார்.
2013-ல், ‘உயரிய கனவு, உரக்கப் பேசு, உறுதியுடன் எழு’ (DUSUSU: Dream Up, Speak Up, Stand Up) எனும் பரப்புரையை தொடங்கினார். சிறுமிகள் பள்ளியில் தொடரவும், கல்வி வழியாக தங்கள் கனவுகளைநனவாக்க ஊக்கப்படுத்தவும் கலந்துரையாடி னார். எபோலா பெருந்தொற்று கினியா நாட்டில் பரவியபோது, அந்நாட்டுக்குச் சென்று குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட எதிர்மறை தாக்கங்களை குறும்படமாக வெளிக்கொணர்ந்தார்.
2013-ல், தான்சானியா நாட்டின் மதிப்புரு தூதர் விருது சூரியலுக்கு கிடைத்தது. அதே ஆண்டு, ஆப்பிரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக நியூ ஆப்ரிகன் இதழ் சூரியலைத் தேர்வு செய்தது. நியூயார்க் பிசினஸ் இன்சைடர், ஒவ்வொரு வயதிலும் உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களை 2014-ல் தேர்வு செய்தபோது, 11 வயதுக்கான பிரிவில் சூரியலுக்கு விருது வழங்கியது. இந்த விருதுகள் சூரியலை முன்னகர்த்தின.
பிரகாசமான எதிர்காலத்தை வழங்குதல்: சூரியல், 13 வயதில் DUSUSU நிறுவனம் தொடங்கினார். குழந்தைகளின் கற்கும் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்கான முன்னெடுப்பில், தனிநபரும், பெரு நிறு வனங்களும் இணைந்து செயல்படுவத்றகான ஒரு தளமாக இதை உருவாக்கினார். “பெண்குழந்தைகளுக்கு கற்பித்தல் குழந்தைத் திருமணத்தை நிறுத்துதல் = பிரகாசமான எதிர்காலத்தை வழங்குதல்” எனும் தத்துவம் சமைத்தார். “இரண்டு கண்களால் நீங்கள் தெளிவாகப் பார்க்கிறீர்கள்; இரண்டு கைகளால் நீங்கள் மேலே தூக்குகிறீர்கள்; இரண்டு கால்களால் நீங்கள் விரைவாக ஓடுகிறீர்கள்; அதேபோல, சிறுவர் சிறுமிகளுக்கு கல்வி கொடுப்பதன் வழியாக உலகின் சமூக சிக்கல்களை எளிதில் அடையாளம் காணலாம், எளிதாக சிக்கல்களைத் தீர்க்கலாம்” என்றார்.
இதுவரை, 19 நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களிடம் சூரியல் உரையாற்றியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களுடன் பெண் கல்வியின் சிக்கல் பற்றி உரையாடியுள்ளார். குறும்படம் எடுப்பது குறித்து செயல்வழி கருத்தமர்வு வழியாக மாணவிகளுக்கு கற்பிக்கும் சூரியல், “உங்கள் வாழ்வை, சூழலை காணொளியாக எடுத்து வெளியிடுங்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்கள்தான் பேச வேண்டும்” என்கிறார்.
கட்டுரையாளர்:எழுத்தாளர்,மொழி பெயர்ப்பாளர்.
தொடர்பு: sumajeyaseelan@gmail.com