

உறவுக்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பு என்று வினவினாள் தங்கம். உறவு என்பதே ஆட்களுக்கு இடையே நிலவும் தொடர்புதானே என்றான் காதர். ஆம். தகவல் தொடர்புதான் எல்லா உறவுக்கும் அடிப்படை. தகவல்தொடர்பு சீராக இருந்தால், உறவு சிறப்பாக இருக்கும் என்றார் ஆசிரியர் எழில். தகவல்தொடர்பு என்றால் என்ன என்று வினவினான் தேவநேயன். ஒருவர் தனது எண்ணத்தை ஒலி, பேச்சு, எழுத்து, ஓவியம், உடலசைவு, அமைதி ஆகியவற்றின் வழியாகப் பிறருக்குத் தெரிவிக்கிறார். அவர் தெரிவிப்பதைக் கேட்கும், பார்க்கும், படிக்கும் பிறர் அவரது எண்ணத்தைப் புரிந்து கொள்கின்றனர். அதைத்தான் தகவல்தொடர்பு என்கிறோம் என்று விளக்கினார் எழில். ஒருவேளை அவர் தெரிவிக்க நினைத்ததைப் பிறர் தவறாகப் புரிந்து கொண்டால் என்று வினவினான் சாமுவேல். அது மோசமான தகவல் தொடர்பு என்றாள் பாத்திமா. சரியாகப் புரிந்து கொண்டால் என்று வினவினாள் கயல்விழி. சீர்மிகு தகவல்தொடர்பு என்றார் எழில்.
தனது தவறை மாறன் உணர்ந்தானா? - அமைதியாக இருப்பதுகூடத் தகவல்தொடர்பா என்று வினவினான் சுடர். இனியனும் மாறனும் நெருங்கிய நண்பர்கள். அவர்களில் ஒருவர் சிறப்பை மற்றவர் பாராட்டுவதும் தவறைச் சுட்டிக்காட்டுவதும் அவர்களுக்குள் வழக்கம். ஒருமுறை மாறன் பள்ளி நூலகத்தில் எடுத்த புத்தகத்தில், “இந்தக் கதை அருமை… இப்படிக்கு மாறன்” என்று எழுதி, அதனை இனியனிடம் பெருமையாகக் காட்டினான். இனியன் அவனைக் கண்டித்தான். மாறன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இனியன் கூறுவதை அமைதியாகக் கேட்டான். அந்த அமைதியை நீ இனியனாக இருந்தால் எப்படிப் புரிந்து கொள்வாய் என்று சுடரிடம் கேட்டார் எழில். மாறன் தனது தவறை உணர்ந்து விட்டான் என்று புரிந்து கொள்வேன் என்ற சுடர், அமைதியும் தகவல்தொடர்பில் ஒரு கூறு என்பதையும் புரிந்து கொண்டேன் என்று புன்னகைத்தான்.
சரியாக புரிந்ததா? - ஏன் ஒருவர் கூறும் தகவல் பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்று கேட்டாள் நன்மொழி. அவர் தரும் தகவலை ஒழுங்காகக் கவனிக்காததால் என்றான் அழகன். கணக்குப் பாட வேளையில் நீ இருப்பாயே அப்படியா என்று அழகனை கிண்டல் செய்தான் கண்மணி. சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.
தகவலைக் கூறுவதும் அதனைக் கூர்ந்து கேட்பதும் தகவல் தொடர்பில் உள்ள இரண்டு கூறுகள். ஒருவர் கூறுவதைக் கவனித்துக் கூர்ந்து கேட்காவிட்டால் அந்த தகவல் அறைகுறையாகப் புரியும் அல்லது முழுமையாகப் புரியாது என்று எழில் விளக்கிக் கூறும்போதே குறுக்கிட்ட கண்மணி, புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று வினவினான். எனக்குப்புரியவில்லை மீண்டும் கூறுங்கள் எனக் கேட்க வேண்டும் என்றாள் இளவேனில். சரி. நாம் கூறுவது கேட்பவருக்குப் புரிந்துவிட்டதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று வினவினான் முகில். கேட்டதைத் திரும்பச் சொல்லச் சொல்ல வேண்டும். அவர் சரியாகச் சொன்னால் அவருக்குப் புரிந்திருக்கிறது; இல்லையென்றால் மீண்டும் புரியும்படி கூற வேண்டும். எங்கள் அம்மா அப்படித்தான் செய்வார் என்று கூறிய மணிமேகலை, நான் சொல்வது சரிதானே என்று கேட்பதைப்போல ஆசிரியரைப் பார்த்தாள். ‘சரியே’ என்பதைப்போல தலையாட்டிய எழில், கேட்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன என்றார். என்னென்ன வகைகள் என்று வினவினாள் மதி. அவற்றை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்றார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன்
கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும்
பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com