

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ மாணவியரில் கணிசமானோர் பேராசிரியர் ராகவனை சூழ்ந்திருந்தனர். அவர்களிடம் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்த பேராசிரியர் ராகவன், அரங்கில் மாணவ மாணவியர் நிறைந்ததும் அவர்கள் பக்கம் பேச்சை திருப்பினார்.
நமது பள்ளியின் முன்னாள் மாணவ மாணவியரான இவர்களை நன்கு அறிவீர்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள். 4 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இவர்கள் நான்காம் சுற்றில் பங்கு பெற இருக்கிறார்கள். அது தொடர்பான சில ஆலோசனைகளை பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். இதையொட்டி தற்போதைய பள்ளி மாணவர்களுக்கும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் இன்று பார்க்க இருக்கிறோம் என்றபடி பேராசிரியர் இடைவெளி விட்டார். இன்று பீடிகை பலமாக இருக்கிறதே என்றபடி மாணவர்களும் நிமிர்ந்து அமர்ந்தனர்.
அரசு பள்ளிக்கு முன்னுரிமை: பிளஸ் 2 முடித்த மாணவ மாணவியரில் உயர்கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் அவ்வப்போது தாங்கள் படித்த பள்ளிக்கு வருவதும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றுச் செல்வதும் வழக்கமாக நடப்பதுதான். இவ்வாறு ஆலோசனை வழங்க இந்த வருடம் பேராசிரியர் ராகவனும் இணைந்திருக்கிறார். அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பத்தவர்களில் முதல் 3 சுற்றுகளில் பலருக்கும் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவு கிடைத்திருக்கிறது. அடுத்த சில தினங்களில் நான்காவது சுற்று கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க உள்ள மாணவர்களில் பலரும் பேராசிரியரை சந்திக்க அன்றைய தினம் வந்திருந்தனர். அவர்களின் முகத்தில் சற்றே கவலை அப்பியிருந்ததும் வெளிப்படையாக தெரிந்தது. பேராசிரியரும் அதை தொட்டே பேச்சை தொடர்ந்தார்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், அவர்கள் சமூகப் பிரிவு சார்ந்தும் பொறியியல் கலந்தாய்வில் முன்னுரிமை பெறுகிறார்கள். இதில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு என 7.5 சதவீதம் முன்னுரிமை உள் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பெருவாரியான கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்களுடன் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் சமூக அடிப்படையில் தகுதி பெற்றோருக்கு கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே அரசு பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உத்வேகத்துடன் படித்தால் உங்கள் பொறியியல் கனவும் எளிதில் கைகூடும்.
பிளஸ் 2 தரவரிசை பட்டியலின் அடிப்படையிலான இந்த கலந்தாய்வில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இன்னொரு உண்மையும் இருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் நீங்கள் இழக்க நேரிடும் ஒரு மதிப்பெண் அல்லது அரை மதிப்பெண் கூட தரவரிசைப் பட்டியலில் சுமார் ஆயிரம் பேர் உங்களை முந்திச் செல்ல வாய்ப்பளித்து விடும். எந்த வகையிலும் சோர்வு, சோம்பல், அலட்சியம் இன்றி படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன் என்றபடி நிறைவாக விஷயத்துக்கு வந்தார் பேராசிரியர்.
முந்தும்3 சுற்றுகள்: இங்கே வந்திருப்பவர்கள் கலந்தாய்வின் நான்காம் சுற்றில் பங்கேற்க காத்திருப்பவர்கள். முதல் 3 சுற்றுகளிலும் முதன்மையான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் பூர்த்தியாகி இருக்கும் என்பதால் தங்களுக்கான கல்லூரி தெரிவுதொடர்பான கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்வதையே படிப்பினையாக தற்போதைய பள்ளி மாணவர்களும் எடுத்துக் கொள்ளலாம். முதல் 3 சுற்றுகளிலும் முக்கியமான கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் நிரம்பியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நன்றாக அலசி ஆராய்ந்தால் நல்ல கல்லூரிகளை முத்துக்கள் போல அடையாளம் காணலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனையொட்டிய பாடப்பிரிவுகளுக்கே நடப்பாண்டு மாணவர்கள் முன்னுரிமை தந்ததில், தரமான கல்லூரிகளின் இதர முக்கிய பாடப்பிரிவுகள் காலியாக இருப்பதை காணலாம்.
குறிப்பிட்ட கல்லூரியை நேரில் பார்வையிடுவதும் அதன் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட உள்கட்டுமானங்களை தெரிந்து கொள்வதும், முன்னாள் மாணவர்கள் மற்றும் வளாகத் தேர்வு விபரங்களின் மூலமாகவும் தேவையான தெளிவைப் பெறலாம். முக்கியமாக விருப்ப பட்டியலில் இந்த காலியிடங்களை உரிய வரிசையில் அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும். மேலும் ‘உறுதிபடுத்துவதற்கான பல்வேறு தேர்வுகள்’ என்பதில் ‘ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மேல் நோக்கிய நகர்தலுக்காக காத்திருத்தல்’(Accept and Upward) என்பதை தேர்வு செய்வதன் மூலம், தற்போதைய கல்லூரி ஒதுக்கீட்டை விட சிறப்பான வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே கலந்தாய்வின் முதல் 2 சுற்றுகளில் பங்கேற்கும் வகையில் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற மாணவர்கள் உறுதி கொள்ள வேண்டும். அப்படியும் வாய்ப்பை தவறவிட்டோர் மனம் தளராது மேற்கண்டவாறு தங்களுக்கான கல்லூரியை அடையாளம் காணலாம் என்று முடித்தார் பேராசிரியர்.கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com