நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 14: பள்ளியில் தவறவிட்ட வெற்றியை யூபிஎஸ்சியில் பிடித்து ஐபிஎஸ் ஆனவர்

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 14: பள்ளியில் தவறவிட்ட வெற்றியை யூபிஎஸ்சியில் பிடித்து ஐபிஎஸ் ஆனவர்
Updated on
2 min read

தனது பள்ளிக் காலத்தில் ரேங்க் பெறாத கடைசி பெஞ்ச் மாணவர் ஜி.இளமாறன். பிறகு யூபிஎஸ்சிக்கு குறி வைத்து படித்தவர் 2016-ல் ஐபிஎஸ் பெற்று உத்தரப்பிரதேசம் அமேதியில் மாவட்ட எஸ்பியாகி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவின் கருவாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளமாறன். இவரது தந்தை கோவிந்தராஜு, கிராமக் கூட்டுறவு வேளாண் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் கலாவதி, உடன் பிறந்த மூத்தவர்களில் மணமான சகோதரன் மணிமாறன் மற்றும் சகோதரி ஆகியோர் குடும்பத்தினர். இக்குடும்பத்தின் முதல் பட்டதாரியான டாக்டர்.ஜி.இளமாறன், கால்நடை மருத்துவத்தில் முதுநிலை முடித்தவர்.

கருவாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு மட்டும் படித்து, அருகிலுள்ள மன்னார்குடியின் பின்லே மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துள்ளார். படிப்பில் கவனமின்றி கடைசி பெஞ்ச் மாணவராக இருந்த இளமாறனால், ஒருமுறை கூட ரேங்க் பெற முடியவில்லை.

படிப்பும் பிடித்துப்போனது! - எப்படியோ தட்டுத்தடுமாறி பிளஸ் 2வில் முதல் குரூப்பில் சேர்ந்து படித்தார். அதன் பிறகு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. மருத்துவக் கல்விக்கான அரசு நுழைவுத் தேர்வை எழுதி 2003-ல் சென்னையின் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. 2008-ல் இளநிலை கால்நடை மருத்துவம் பட்டம் பெற்றார். அடுத்து 2011-ல் அதே பிரிவில் முதுநிலை கல்வியை ஹரியானா மாநிலத்தின் கர்னாலின் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்டிஆர்ஐ) பெற்றார். இதனிடையே, டாக்டர்.இளமாறனுக்கு தன் கல்லூரி காலத்தில் யூபிஎஸ்சி தேர்வு அறிமுகமானது. தம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கல்லூரி மாணவர் எம்.செம்மாறன் இதை அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது உபியின் பரேலி இந்திய கால்நடை ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) முதுநிலை கல்வி பயின்று வந்த எம்.செம்மாறனும் யூபிஎஸ்சிக்கு முயன்று கொண்டிருந்தார். 2011-ல் செம்மாறனுக்கு இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) கிடைக்கவே யூபிஎஸ்சி மீதான இளமாறனின் ஆர்வம் தானாக அதிகரித்தது. தமது முதுநிலைப் பட்டத்திற்கு பின் டெல்லியில் பயிற்சி நிறுவனத்தில் யூபிஎஸ்சிக்காக இளமாறன் இணைந்தார்.

ஐபிஎஸ் ஆனார் டாக்டர்: முதல் முயற்சியை 2012-ல் எடுத்தவரால் யூபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வை கூட வெல்ல முடியவில்லை. இதற்கு அப்போது இருந்த சி-சாட் பிரிவின் தேர்வு காரணமானது. இதை சமாளிக்க இளமாறன், சென்னையில் பயிற்சி பெற்றார். சென்னையிலேயே தங்கி தம் முயற்சியை தொடர்ந்தார். இரண்டாவது முயற்சியில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவருக்கு எந்த பணியும் கிடைக்கவில்லை. மூன்றாம் முயற்சியில் இளமாறனுக்கு இந்திய ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸ்(ஐஆர்ஏஎஸ்) 2015-ல் கிடைத்தது. தனது குறியான ஐஏஎஸ் கிடைக்காததால், ஐஆர்ஏஎஸ் அடிப்படை பயிற்சியை குஜராத்தின் வதோதராவில் எடுத்தபடி, மீண்டும் யூபிஎஸ்சி எழுதினார். நான்காவது முயற்சியில் இளமாறனுக்கு, ஐபிஎஸ் மற்றும் இந்திய வனப் பணி(ஐஎப்எஸ்) என இரண்டும் 2016-ல் கிடைத்தன. இதில், டாக்டர்.இளமாறன் தேர்ந்தெடுத்தது ஐபிஎஸ்.

இது குறித்து உபியின் பரேலி எஸ்பியான இளமாறன் கூறுகையில், “சென்னையில் கல்லூரியில் பயின்ற போது சகமாணவர்கள் பலர் யூபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகை போட்டி தேர்வுகளை எழுதினர். இந்த சூழலில் முன்னாள் மாணவர் செம்மாறன் சார் அறிமுகம் யூபிஎஸ்சிக்கான வழிகாட்டியது. தொடர்ந்து என் குடும்பத்தார் அளித்த உற்சாகத்தால் சோர்வின்றி முயன்று ஐபிஎஸ் பெற உதவியது. முதுநிலைக்கல்வி இறுதியாண்டில் தமிழக அரசின் ஜுனியர் வெட்னரி சர்ஜன் பணி கிடைத்தது. முதுநிலையை முடிக்க இப்பணியில் விடுமுறை பெற்றேன். மீண்டும் அதில் சேர விருப்பம் இன்றி, நான் விரும்பிய யூபிஎஸ்சியில் வெற்றியும் பெற்றேன்” எனப் பெருமிதம் கொண்டார்.

உபி மாநில பணி சேர்ந்து ஆக்ரா மற்றும் ஆஸம்கர் மாவட்டங்களில் ஏஎஸ்பியாகவும், நொய்டா மாநகரக் காவல்துறையில் ஏடிசிபியாகவும் இருந்த இளமாறன் தற்போது அமேதி மாவட்ட எஸ்பியாக உள்ளார். இவருக்கு மனைவி டாக்டர்.பிரகதி, இளவேனில் எனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். உபி பணிக்காலத்தில் பல கொலை, கொள்ளை வழக்குகளை உடனடியாக தீர்த்து தம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளார் இளமாறன் ஐபிஎஸ். நொய்டாவில் விலை உயர்ந்த ரூ.70 லட்சம் மதிப்புள்ள கைபேசிகளை திருடிச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை ஹரியானாவின் நூ கிராமத்தில் 65 போலீஸாருடன் புகுந்து திரைப்பட பாணியில் கைது செய்தார். அதற்கு முன்புவரை இவர்களது தாக்குதலுக்கு அஞ்சி போலீஸார் எவரும் கிராமத்தில் புகுந்து கைது செய்ததில்லை. கடைசியாக அமேதியில் ஒரே கிராமத்திலிருந்து 4 டீன்ஏஜ் சிறுமிகள், தலைமறைவான 6 மணி நேரத்தில் கண்டுபிடித்து மீட்டு சாதித்துள்ளார். இதற்காக அவர் 7 கி.மீ. தொலைவிலான அனைத்து சிசிடிவி கேமிராக்களை விரைந்து ஆராய்ந்தார். இதில், 4 பேரும் மும்பைக்கான ரயிலில் ஏறியிருப்பது அறிந்து, வழியிலேயே பரேலி ரயில் நிலையத்தில் கண்டுபிடித்து மீட்டுள்ளார். பள்ளிக்கல்வியில் ரேங்க் எடுக்க முடியாதவர்களும் தன்னம்பிக்கையும், உறுதியும் கொண்டால் எதையும் பெறலாம் என்பதற்கு, அமேதியின் எஸ்பியான இளமாறன் ஐபிஎஸ் ஒரு சிறந்த உதாரணமாகி விட்டார். - கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in