

நாம் அன்றாடம் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறோம் என்பதை நமது வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் எனர்ஜி மீட்டர் எனும் ஆற்றல் கணக்கிடும் கருவி கூட்டிக்கொண்டே செல்லும். மின்வாரிய பணியாளர் நமது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வந்து நமது எனர்ஜி மீட்டரில் உள்ள அளவைக் குறித்துக் கொண்டு கடந்த மாத அளவை கழித்து நம்மிடம் பணம் பெறுவார். இப்படித்தான் நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பது கணக்கிடப்படுகிறது. நமது மின்சார வாரியம் ஒரு யூனிட் என்ற அளவை உபயோகிக்கிறது. இந்த ஒரு யூனிட் அளவு என்றால் என்ன என்று இப்பொழுது பார்க்கலாம். ஒரு யூனிட் என்பது 1000 wh என்பதன் சுருக்கமாகும். அதாவது 1000w x 3600 (1 மணி/1hr) = 360000w. இந்த 360000w மின் சக்தியைதான் சுருக்கமாக ஒரு யூனிட் என்று அழைக்கிறோம்.
எளிமையாக புரிந்து கொள்ள, உங்கள் வீட்டில் ஒரு 10w மின்விளக்கு, ஒரு 20w மின்விளக்கு மற்றும் ஒரு 80w மின்விசிறி இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் 10w மின் விளக்கை 20 மணி நேரம் உபயோகித்தால் 200wh (10w x 20h) மின் ஆற்றலை உபயோகிக்கிறீர்கள். 20w மின் விளக்கை 20 மணி நேரம் உபயோகித்தால் 400wh (20w x 20h) மின்னாற்றலை செலவழிக்கிறீர்கள். 80w மின்விசிறியை 5 மணி நேரம் உபயோகித்தால் 400wh (80w x 5h) மின்னாற்றலை செலவழிக்கிறீர்கள். ஆக மொத்தம் 200wh(10w மின்விளக்கு ) 400wh (20w மின்விளக்கு 400wh (80w மின்விசிறி) = 1000wh மின் சக்தியை உபயோகிக்கிறீர்கள். 1000 என்பதை பொதுவாக கிலோ (kilo) என்று அழைக்கிறோம். ஆகவே 1000wh ஐ 1kilo watt hour என்றும் அதை சுருக்கி 1kwh என்றும் அழைக்கலாம். ஆகவே ஒரு யூனிட் என்பது சாதாரண மக்களுக்கும் 1kwh என்பது பொறியாளர்களுக்குமான அளவீடாகும். இதனை உபயோகித்து நாம் எவ்வளவு மின்சக்தியை உபயோகிக்கிறோம், நமக்கு எவ்வளவு மின்கட்டணம் வருகிறது, மின்கட்டணத்தை எவ்வாறு குறைக்கலாம் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.
முதலில் நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு மின் சாதனமும் எவ்வளவு சக்தி செலவழிக்கிறது என்று குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் எவ்வளவு நேரம் உபயோகிக்கிறோம் என்பதை குறித்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிட வேண்டும். நாம் கணக்கிடுவதும் நமக்கு வரும் மின் கட்டணமும் சரியாக இருக்கிறதா என்று ஆராய வேண்டும். இப்பொழுது ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதுவரைப் படித்ததை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வோம். நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் நமது செலவழிக்கும் ஆற்றல் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதனை ஒரே நாளில் செலவழித்துவிடலாம் அல்லது தினமும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 நாட்களில் செலவழிக்கலாம் அல்லது தினமும் 1,000 ரூபாய் வீதம் 100 நாட்களில் செலவழிக்கலாம். நாம் தினமும் செலவழிப்பதற்கு செலவழிக்கும் சக்தி (Spending power) என்று பெயர். ஆகவே மொத்தப் பணத்திற்கு ஆற்றல் என்றும் தினமும் செலவழிப்பதற்கு சக்தி என்றும் பெயர். இதற்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். - கட்டுரையாளர்: தொழில்நுட்பப் பயிற்றுநர், தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com