ஊடக உலா - 15: டாப் 100 யூடியூபர்களுடன் ஒரு சந்திப்பு!

ஊடக உலா - 15: டாப் 100 யூடியூபர்களுடன் ஒரு சந்திப்பு!
Updated on
1 min read

சமீபத்தில் தமிழகத்தின் டாப் நூறு யூடியுப்பர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்திருந்த ஒவ்வொரு யூடியுப் சேனல்களும் தனித்துவமானவை. ஒரு சேனல் போல் இன்னொரு சேனல் இல்லை. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், ஒவ்வொரு சேனலையும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்திருந்தனர். அதில் பல சேனல்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வந்திருந்த நூறு சேனல்களில் ஒன்று எப்படி பவுண்டைன் பேனாவை சர்வீஸ் செய்வது என்பதாகும். இந்த சேனல் முழுக்க பேனாக்களின் வீடியோக்கள்தான் கொட்டிக் கிடக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் யார் சார் இங்க் பேனாவைப் பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கும் காலத்தில்தான் இந்த சேனலும் டாப் நூறு சேனல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பேனாக்கள் என்பவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்தவை. பேனாக்களின் நினைவுகளோடு நாம் பயணிக்கிறோம். அந்த நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த சேனல் அமைந்துள்ளது. வெறுமனே பேனாக்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல், பேனாக்களோடு மனிதர்களுக்கு இடையேயான உறவினையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லிச் செல்கிறது இந்த சேனல்.

எதிர்பாராமல் கல்லாகட்டிய சேனல்: அன்றைய நிகழ்வில் என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கட்டிடங்கள் கட்டுவது குறித்து ஒரு சேனல் நடத்தி வருவதாகக் சொன்னார். சொந்தமாகக் கட்டிட காண்டிராக்ட்கள் எடுத்து வேலை செய்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் எந்த வேலையும் இல்லாமல் போய்விட்டதாம். அப்பொழுது பொழுதுபோக்காகக் கட்டடம் கட்டும் போது கவனிக்க வேண்டியவை, சிமென்ட் கலவையை எப்படி மிக்ஸ் செய்தால் வெடிப்புவராது என்பன போன்ற அடிப்படைத் தகவல்களைக் கூறி சேனலை தொடங்கியுள்ளார். முதலில் ஒரு சிலர் மட்டுமே பார்த்த சேனல், ஒரு கட்டத்தில் நிறைய பேர் பார்க்கத் தொடங்கியதோடு, இதைப் பற்றி சொல்லுங்கள், அதைப்பற்றிச் சொல்லுங்கள் என ஒரே கேள்விகளால் நிறைந்துவிட்டதாம்.

அதன் பின் நடந்த சம்பவங்கள் தான் சுவாரஸ்யம் நிறைந்தவை. அது நாள்வரை வேலை கிடைக்காமல் தவித்த அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கினவாம். அழைத்தவர்கள் அனைவரும், தங்களுக்கு ஒரு தரமான வீட்டினை வந்து கட்டிக்கொடுக்க வேண்டும் என அன்புக்கட்டளை இட்டனராம். வேலை வாய்ப்புக்காகத் திண்டாடிய ஒருவர் ஒரு பக்கம், யாருமே யோசிக்காத தலைப்பில் சேனல் தொடங்கியவர் இன்னொரு பக்கம், இப்படியான சேனல்கள் இன்றைய ஊடகப் படிப்பினில் ஆர்வம் கொண்டு படிக்கவரும் மாணவர்களுக்கு சொல்வது ஒன்று மட்டுமே, நீங்கள் செய்யும் பணி செம்மையானதாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் என்பதே அது.

(உலா வருவோம்)

கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in