

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முதல் பரிசு எது தெரியுமா? உண்டியல். இளம்வயதிலே சேமிப்பு பழக்கத்தை கற்றுத்தர பயன்படும் சிறந்த முறை உண்டியல்தான். இதன் உன்னதத்தை உணர்ந்ததினால்தான் வங்கிகளும் குழந்தைகளுக்கு பன்றிக்குட்டி உண்டியலை பரிசளிக்கின்றன.
குழந்தைகளுக்கு இந்த உண்டியல் முறையை அறிமுகப்படுத்த ஒரு எளிய வழி இருக்கிறது. பெரியவர்கள் குழந்தைகளின் கண் முன்னால் உண்டியலில் காசு போட வேண்டும். 2 முதல் 5 வயது குழந்தைகளின் கண் முன்னால் பெரியவர்கள் இதை செய்தால், குழந்தைகளும் தங்களுக்கு தனியாக உண்டியல் வேண்டும் என கேட்பார்கள்.
அப்போது அவர்களுக்கு பொன் நிறத்தால் ஆன குட்டி பொக்கிஷம் என சொல்லி உண்டியலை பரிசளிக்க வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு காசு கிடைத்தால் உடனடியாக ஓடிப்போய் உண்டியலில் போட்டு சேமிப்பார்கள். அந்த உண்டியலை பிறரிடம் இருந்து பொக்கிஷம் போல பத்திரமாக பாதுகாப்பார்கள். பெரியவர்களின் உண்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து, தங்கள் உண்டியலில் அதிக காசு சேர்க்க ஆசைப்படுவார்கள். இதன் மூலம் அவர்களிடம் பணத்தை செலவழிக்கும் குணம் குறைந்து, சேமிக்கும் எண்ணம் வளரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
லட்சாதிபதி ஆக்கும் பாக்கெட் மணி: குழந்தைகளிடம் குறைந்தபட்சம் 3 உண்டியல்கள் இருக்க வேண்டும். முதல் உண்டியல் சில்லறை நாணயங்களை போடுவதற்கு பயன்படுத்த வேண்டும். நாள்தோறும் பள்ளிக்கு செல்வதற்காக பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை இதில் சேமிக்கலாம். கையில் இருக்கும் சில்லறை காசை சேமித்தால் தாங்கள் விரும்பிய உடை, பொம்மை, சைக்கிள், கீ போர்ட், வாட்ச் ஆகியவற்றை வாங்குவதற்கு பயன்படுத்தலாம். இவ்வாறு கஷ்டப்பட்டு சேமித்து வாங்கிய பொருட்களின் மதிப்பை குழந்தைகள் இயல்பாக உணர்ந்து கொள்வதால், அதனை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.
2-வது உண்டியலில் 50 ரூபாய் வரையிலான ரூபாய் நோட்டுகளை போடுவதற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சேர்க்கும் பணத்தை தங்களுக்கு பிடித்தமான நடனம், சங்கீதம், கராத்தே போன்ற வகுப்புகளில் சேர்வதற்கு, விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு, பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்கு பயன்படுத்தலாம். இதில் முழுமையான தொகையை குழந்தைகளால் சேமிக்க முடியாவிடில், பெற்றோர் மீதமுள்ள தொகையை அவர்களுக்கு கடனாக கொடுக்க வேண்டும். இல்லாவிடில் செடிக்கு தண்ணீர் ஊற்றியதற்கு, செல்ல பிராணிகளை கவனிப்பதற்கு, வீட்டில் தேவையில்லாமல் எரியும் விளக்கை அணைப்பதற்கு என ஏதாவது பொறுப்பான வேலைகளை கொடுத்து அதற்கு ஊதியமாக வழங்க வேண்டும்.
3-வது உண்டியலில் குழந்தைகள் 100 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையை சேமிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சேமிக்கும் பெரிய தொகையை 6 மாதத்துக்கு ஒருமுறையோ, வருடத்துக்கு ஒருமுறையோ தங்களது வங்கி கணக்கில் செலுத்தி சேமிக்க வேண்டும். இந்த பணத்தை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆக மாற்றினால் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பன்மடங்கு அதிக தொகை கிடைக்கும். அதனை தங்களின் தேவைக்கு ஏற்ப தங்க மற்றும் வெள்ளி நகைகள், கணினி, செல்போன், இரு சக்கர வாகனம், கல்லூரி படிப்புக்குக் கூட பயன்படுத்தலாம். இவ்வாறு சிறுவயது முதலே குழந்தைகள் உண்டியலை தேவைக்கேற்ப பிரித்து, கால அளவை நிர்ணயித்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் பணத்தை சேமித்து வந்தால் குழந்தைகள் 10 வயதுக்குள் லட்சாதிபதி ஆகிவிடலாம்.
முதலில் சேமி...பின் வாங்கு: குழந்தைகளை கடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் சேமித்த தொகையில் இருந்தே பொருட்களை வாங்க வேண்டும். ஒருவேளை அந்த பொருளை வாங்க குழந்தைகளிடம் காசு இல்லை என்றால், அந்தப் பொருளின் விலை அளவுக்கு காசை சேமிக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பணத்தின் மதிப்பை உணர்வதுடன், செலவை குறைக்க திட்டமிடுவார்கள். குழந்தைகள் கேட்ட உடனே எதையும் வாங்கி கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட காலத்தை இலக்காக நிர்ணயித்து அதற்குள் நீயே சேமித்து அதை வாங்க முடியுமா? என ஒரு சவாலை உருவாக்குங்கள். குழந்தைகளுக்கு சவாலை எதிர்கொள்வது பிடிக்கும் என்பதால், அவர்களே சேமித்த தொகையில் இருந்து தேவையானதை வாங்குவார்கள். இலக்கை வெற்றிகரமாக அடைந்த போது, அவர்களின் கை நிறைய இருக்கும் பணத்தை காட்டி, “பணம் முக்கியமா? பொருள் முக்கியமா?” என்ற கேள்வியை எழுப்புங்கள். அப்போது பணம் முக்கியம் என்றால், அவர்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
சேமிக்க தூண்டும் செயலி: குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஆன்லைனில் நிறைய செயலிகள் (ஆப்) இருக்கின்றன. உதாரணமாக, மை பிக்கி பேங்க் சேவிங்ஸ் டிராக்கர் (My Piggy Bank Savings Tracker) என்ற செயலி குழந்தைகள் நிதி இலக்கை எந்த அளவுக்கு எட்டி இருக்கிறார்கள் என்பதை அவர்களே தெரிந்துகொள்ள உதவுகிறது. இந்த செயலி குழந்தை அடைய விரும்பும் இலக்கு, அதற்கு தேவையான நிதி, தற்போது எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டுள்ளது ஆகியவற்றை ஆராய்ந்து, அவர்களின் இலக்கை எப்போது எட்ட முடியும் என்பதை காட்டுகிறது. இந்த செயலி குழந்தையின் சேமிப்பு எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை காட்டுவதுடன், இலக்கை நெருங்கும் நாளுக்கு முன்பு அலெர்ட்களும் தந்து கொண்டே இருக்கும். அது சேமிக்கும் வேகத்தை அதிகரிக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in