நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 13: அன்னை தெரஸா, அப்துல் கலாமால் கவரப்பட்டு ஐபிஎஸ் ஆனவர்

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 13: அன்னை தெரஸா, அப்துல் கலாமால் கவரப்பட்டு ஐபிஎஸ் ஆனவர்
Updated on
2 min read

அன்னை தெரஸா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரால் கவரப்பட்டு 2012-ல் ஐபிஎஸ் பெற்றுள்ளார் ஆர்.ராஜா. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா பைத்தூர் கிராமவாசியான இவர், மகராஷ்டிரா மாநிலம் புனே மாநகரக் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இராமசாமி, பாப்பாத்தி தம்பதியின் மூத்த மகன் ராஜா. பைத்தூர் கிராமத்துக்கு அருகில்அம்மன்நகரின் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை ராஜா பயின்றார். பிளஸ்2-வை ராசிபுரம் எஸ்ஆர்வி பயிற்சி பள்ளியில் தங்கி முடித்துள்ளார். மகன் மருத்துவராக வேண்டுமென்பது ராஜாவின் பெற்றோர் கனவாக இருந்தது. ஆனால், கிடைத்த பல் மருத்துவத்தை தவிர்த்து, கோயம்புத்தூரில் பொறியியல் பட்டப்படிப்பில் இணைந்தார்.

ஆறாம் வகுப்பு வரை சராசரி மாணவராக இருந்தவர் அதன் பிறகு வேகமெடுத்தார். அதற்கு முக்கிய காரணமாக விநாடி வினா போட்டி மாறியது. அதன் பிறகே வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அதன் பிறகு 10-ம் வகுப்பில் ராஜா பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றார்.

நாயகனாக உருவெடுத்த கலாம்: கல்லூரி இறுதியாண்டின்போது அப்போது இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாம், சிஐடிக்கு வருகை தந்தார். அன்றைய நாள் ராஜாவுக்கு உடல்நலம் குன்றி கல்லூரி செல்ல முடியாமல் போனது. இருந்தாலும் கலாமின் உரையை தம் கல்லூரி இதழில் படித்து உத்வேகம் பெற்றார். பிறகு வளாகத் தேர்வில் பெங்களூரூ விப்ரோ நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்றாண்டுகள்வரை பெங்களூரில் பணிபுரிந்தவர் பிறகு இரண்டு வருடங்கள் அமெரிக்கா சென்று பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவராகிவிட்ட காலம், ராஜாவின் நாயகனாகிவிட்டார். இதனால், கலாமை போல் தாமும் பொதுவாழ்க்கைக்கு வர முடிவு செய்து 2008-ல் பணியை ராஜினாமா செய்தார்.

யூபிஎஸ்சி தேர்வில் விருப்பப் பாடமான புவியியலை தேர்வு செய்து பயிற்சிக்காக சென்னை வந்தவர் சங்கர் அகாடமியில் சேர்ந்தார். மூன்றாவது முயற்சியில் 2010-ல்ஐஏஏஎஸ் (இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ்) பெற்றார். உத்தராகண்ட் முசோரியின் அடிப்படை பயிற்சியை ஒத்திவைத்து, நான்காவது முறையாகவும் யூபிஎஸ்சி தேர்வெழுதினார். இதில் ஐபிஎஸ் கிடைத்தது. 2008 முதல் 2011 வரையிலான தன் நான்கு முயற்சியில் 3 முறை பிரிலிம்ஸ், 2 முறை மெயின்ஸும் வென்றிருந்தார் ராஜா. இதில் 2 முறை எதிர்கொண்ட நேர்முகத்தேர்விலும் தவறாமல், ஐஏஎஸ், ஐபிஎஸ் இரண்டுக்குமே தேர்வானார்.

இது குறித்து புனே மாநகரக் காவல்துறை துணை ஆணையராக தற்போது பணியாற்றிவரும் ராஜா கூறுகையில், “அப்போது எங்கள் வீட்டில் ரேடியோ மட்டுமே இருந்தது. இதில் செய்திகள், தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியையும் தவறாமல் கேட்பேன். இதன் மூலம் விநாடி வினா போட்டிகளில் பங்கேற்கத் தேவையான அறிவாற்றல் வளர்ந்தது. அந்த சமயத்தில் அன்னை தெரஸாவின் வரலாறை படித்தேன். அவரது வாழ்க்கை என் மீது மிகுந்த தாக்கம் செலுத்தியது. விநாடி வினா போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெறவே முதன்முறையாக கலெக்டராவது என்கிற ஆசை துளிர்த்தது. அதன் பிறகுகல்லூரிக் காலத்தில் அது சகமாணவர்களால் கனவாக மாறியது. அதன்பிறகு அமெரிக்காவில் வேலை பார்த்தபோதுகுடியரசுத்தலைவராக கலாமை கண்டதும், விப்ரோவை ராஜினாமா செய்து களம் இறங்கி வெற்றி கண்டேன். இதன்மூலம், எனது விவசாயப் பெற்றோரின் விருப்பத்தையும் நிறைவேற்ற முடிந்தது” என்றார்.

சமூக விரோதிகளை கண்காணிக்க ஈ.ரோந்து: ஐபிஎஸ் அதிகாரியான ராஜாவின் முதல் பணி மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி மாவட்ட உதவி எஸ்.பி. அடுத்து நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள கட்சிரோலியில் கூடுதல் எஸ்பியானார். பிறகு மாவட்ட எஸ்பியாக உஸ்மானாபாத்தில் நியமிக்கப்பட்டார். மூன்றாவது பணியாக மகாராஷ்டிரா மாநில உளவுத்துறை துணை ஆணையரானார். இங்கிருந்து மீண்டும் எஸ்பியாக பீட் மாவட்டத்தில் அமர்த்தப்பட்டார். பீட்டிலிருந்து மாற்றலாகி தற்போது புனேவின் டிசிபியாக உள்ளார்.

தனது பணி அனுபவம் குறித்து அதிகாரி ராஜா கூறுகையில், “ரெட் காரிடர் எனப்படும் கட்சிரவுலி, தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில எல்லையாக அமைந்தது. இங்கு நான் சிஆர்பிஎப், கமாண்டோ 60 படைகளின் உதவியுடன் நேரடியாக களம் இறங்கி, 2 தேடுதல் வேட்டையில், 5 நக்ஸலைட்டுகளை வீழ்த்தினேன். உஸ்மானாபாத்தில் பல வருடங்களாக நின்றுபோன வார குறை தீர்க்கும் நாளை மீண்டும் தொடங்கி வைத்து மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தேன். பீட் மாவட்டத்தில் காவல்துறை ரோந்தை கிராமப்பகுதிகளில் தீவிரமாக்கினேன். இதை ஈ-ரோந்து முறையில் கண்காணிக்க உருவாக்கப்பட்ட கைப்பேசிக்கான ஒரு செயலி தற்போது மேலும் சில மாவட்டங்களில் அமலாக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் பெண் போலீஸார் மட்டும் இடம்பெறும் ரோந்து முறையை அமலாக்கினேன். காவல்நிலையங்களில் காவலர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உற்சாகப்படுத்தினேன்” என்றார். நக்ஸல் வேட்டைக்காக, மத்திய அரசின் வீரதீர செயலுக்கான போலீஸ் பதக்கம் 2021-ல் ராஜாவிற்கு கிடைத்தது. பீட் மாவட்டத்தின் பல சிறப்புப் பணிக்காக, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு வழங்கும் சிறந்த நிர்வாகிக்கான விருதும் இவருக்குஅறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து ஐபிஎஸ் அதிகாரியான ராஜா நிச்சயம் வியப்புக்குரியவர்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in