

மின் உற்பத்தி, மின் பயன்பாடு மற்றும் மின் அனுப்புதல் பற்றி இதுவரை பார்த்தோம். இவற்றை பொறியாளர்கள் வோல்டேஜ் (Voltage), ரெசிஸ்டன்ஸ் (Resistance) மற்றும் கரண்ட் (Current) என்று ஆங்கிலத்திலும், மின் அழுத்தம், மின் தடை மற்றும் மின் ஓட்டம் என்று தமிழிலும் அழைக்கிறார்கள்.
மின்னழுத்தம் இல்லையெனில் மின் ஓட்டம் கிடையாது. மின்தடை இரண்டு வேலைகளை செய்கிறது. ஒன்று மின்னோட்டத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டாவது, மின் ஓட்டத்துடன் இணைந்து மின்சக்தியை பிற சக்தியாக மாற்றுகிறது. மின்சக்தி என்பது மின்னழுத்தம் மின் ஓட்டம் மற்றும் மின் தடையை பொறுத்தது. மின்ஓட்டம் இல்லையெனில் மின்சக்தி இல்லை. இப்பொழுது மின்ஆற்றலுக்கும் (energy), மின்சக்திக்கும் (power) உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்.
மின்னாற்றல் என்பது மொத்த மின்சக்தி ஆகும். அதாவது பொதுவாக மின் சக்தியை ஒரு வினாடியில் செலவிடப்படும் அல்லது உருவாக்கப்படும் மின் ஆற்றல் என்று அழைக்கலாம். உதாரணமாக 10 வினாடிகள் மின்சக்தியை செலவழித்தால் மின் ஆற்றல் =10 x மின்சக்தி ஆகும். அதாவது மின்ஆற்றலானது மின்சக்தியை போன்று பத்து மடங்கு என்று பொருள்.
ஆற்றல் கணக்கிடும் கருவி: மின்சக்தியை ‘வாட்’ (watt) என்ற அலகால் குறிப்பிடுகிறோம். உதாரணமாக நமது வீட்டில் உள்ள மின்விளக்கு 10w என்றால் அது ஒரு வினாடிக்கு 10 வாட் மின்சக்தியை செலவழித்து 10w மின் சக்திக்கு ஈடான ஒளியை தருகிறது. நாம் அந்த மின்விளக்கை ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ உபயோகித்தால் 10w x 60 (1 நிமிடம்) அல்லது 10w x 3600 (1 மணி) மின்சக்தியை செலவழிக்கிறோம் என்று பொருள். அதாவது ஒரு நிமிடம் நாம் 10w மின் விளக்கை உபயோகித்தால் 600w மின்சக்தியையும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் 36000w மின்சக்தியையும் செலவழிக்கிறோம். நாம் அதிக நேரம் உபயோகித்தால் இந்த எண்கள் பெரிதாகிக் கொண்டே போகும். இதனை பொறியாளர்கள் எளிய குறியீட்டில் குறிப்பிடுகிறார்கள். 10w மின்சக்தி ஒரு நிமிடம் என்பதை 10wm என்று எளிதாக குறிப்பிடுகிறார்கள். 10 watt minute என்பதன் சுருக்கம்தான் 10wm. அதே போல் 10w மின்சக்தி ஒரு மணிநேரம் என்பதை 10wh என்று எளிதாக குறிப்பிடுகிறார்கள். 10 watt hour என்பதன் சுருக்கம்தான் 10wh.
ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்தால் உபயோகிப்பவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பொருளைத் தருவார். அதேபோல் தமிழக மின்சார வாரியம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நாம் மின்சாரத்தை உபயோகப்படுத்துகிறோம். மின்சார வாரியம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மின் ஆற்றல் கணக்கிடும் கருவியை (energy meter) நிறுவியுள்ளது. அதன் வழியாகத்தான் வீட்டில் உபயோகிக்கும் அனைத்து மின் ஓட்டமும் செல்லும். நாம் எவ்வளவு சக்தியை பயன்படுத்துகிறோம் என்று இந்த எனர்ஜி மீட்டர் கூட்டிக்கொண்டே செல்லும். மின்வாரிய பணியாளர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நமது வீட்டிற்கு வந்து எனர்ஜி மீட்டரில் உள்ள அளவைக் குறித்துக் கொண்டு கடந்த மாத அளவை கழித்து நம்மிடம் பணம் பெறுவார்.
கட்டுரையாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com