

தலைமை ஆசிரியர் சத்தியநாதன் ஒருமுறை வகுப்பு தலைவர்களின் கூட்டத்தில், பூக்களில் சிறந்த பூ எது என்று கேட்டார். ஒருவர் ரோஜாப்பூ என்றும், மற்றொருவர் மல்லிப்பூ என்றும் சொன்னார்கள். அதற்கு தலைமை ஆசிரியர், நீங்கள் சொன்ன பூக்கள் எல்லாம் இன்றைக்கு அழகாக இருக்கும். மாலையே வாடி, நாளைக்கே காய்ந்து, பயனற்று போய்விடும். நான் கேட்பது என்றென்றும் பயன் தரும் பூ என க்ளு கொடுத்தார். உடனே ஒரு மாணவி எழுந்து, சிரிப்பூ என சொல்லிவிட்டு சிரித்தார். சிரிப்பு உடலுக்கு நல்லதுதான். ஆனால், அதனை விடவும் சிறந்த பூ ஒன்று இருக்கிறது. அது இருந்தால் தான் சிரிப்பே வரும். அது என்ன பூ என்றார் தலைமை ஆசிரியர்.
எல்லோரும் தலையை சொறிந்து கொண்டிருக்க அவரே பதிலை சொன்னார். பூவில் சிறந்த பூ சேமிப்'பூ’. ஒவ்வொருவரும் மனதில் கட்டாயம் சூட வேண்டிய பூ சேமிப்பூ. இந்த பூ என்றுமே வாடாது. நாளாக நாளாக மலர்ந்து கொண்டே இருக்கும். என்றுமே அதன் அழகு நீங்காது. நீங்கள் தூங்கினாலும், அது தூங்காமல் உங்களுக்காக வேலை செய்யும். நீங்கள் மறந்துவிட்டாலும், அது உங்களை மறக்காமல் மாதாமாதம் உங்களுக்கு சம்பளம் தரும். இவ்வாறு சேமிப்பின் மூலம் கிடைக்கும் பலன்தான் வட்டி. இந்த வட்டியை மீண்டும் சேமித்து கொண்டே போனால் உங்களின் அசலைவிட பன்மடங்கு பலன் கிடைக்கும். எனவே பூவில் சிறந்த பூ சேமிப்பூ' என விளக்கினார்.
ரஜினி செய்த தவறு: 'அருணாச்சலம்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் 30 நாளில் ரூ.30 கோடியை மிகவும் கஷ்டப்பட்டு செலவழிப்பார். அதற்கு பலனாக அவருக்கு ரூ.300 கோடி கிடைக்கும். சினிமாவில் மட்டுமே செலவழிப்பதற்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும். நிஜத்தில் பணத்தை காரணமில்லாமல் செலவழித்தால், வாழ்க்கை பெரிய தண்டனையே கொடுக்கும். ஏனென்றால் செலவழிப்பது மிகவும் எளிதானது. சேமிப்பதுதான் கடினம். ரஜினிகாந்த் 30 நாளில் எப்படி ரூ.30 கோடி சேர்த்தார் என காட்டி இருக்க வேண்டும். 30 நாளில் ரூ.30 கோடியை சேர்ப்பதுதானே ஹீரோயிஸம். அவ்வாறு காட்டி இருந்தால், பின்னாளில் ரஜினிக்கு ரூ.30 கோடிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும். ஏனெனில் சேமிப்பின் மகத்துவமே ஒன்றை நூறாக மாற்றுவதுதான். ஒன்றுமே இல்லாத ஜீரோவாக மாற்றுவது அல்ல. மாறாக ஜீரோவை ஹீரோவாக மாற்றுவது!
கதை வழியே நிதி: குழந்தைகளுக்கு 3 வயதில் இருந்தே கதை வழியாக நிதியைக் கற்றுத் தரலாம். கதைகளையும் பாடல்களையும் கேட்பதில் ஆர்வம் மிகுந்த அவர்களுக்கு நிதி சார்ந்த கதைகளை பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். காகம் தாகத்தில் தவித்த போது என்ன செய்தது? எறும்பு எவ்வாறு சேமித்தது? தேனீக்கள் எப்படி தேனை சேமிக்கும், மழைக் காலத்துக்காக எலிகள் எப்படி சேமிக்கும் போன்ற கதைகளை சொல்ல வேண்டும். இந்தக் கதைகளின் நீதியை விவரிக்கும்போது சேமிப்பின் நன்மைகளை விளக்குங்கள். எதிர்கால வெற்றிக்கு இன்றிலிருந்தே சேமிக்க வேண்டும் என நிதியை சேர்த்து புரிய வையுங்கள். உங்களுக்கு கதை தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள். செல்போனில் கூகிளையோ, யூ டியூபையோ தட்டினால் ஏராளமான கதைகள் வந்து விழுகின்றன. நிறைய செயலிகளும் வந்துவிட்டன.
பாடல்கள் வழியாகவும் நிதிசார் அறிவை வளர்க்கும் பாடல்களும் இருக்கின்றன. நிதி கல்வியை புகட்டும் வகையில் ரிசர்வ் வங்கி இணையதளம் 13 மொழிகளில் கதை, படம், பாடல், வீடியோ வாயிலாக வழங்குகிறது. ராஜூவும் மந்திர ஆடும், ராஜூவும் பணம் காய்ச்சி மரமும், ராஜூவும் கடன் அட்டையும், மணி குமாரும் நிதிக் கொள்கையும், மணி குமார் உங்கள் நிதி பாதுகாவலன் போன்ற கதைகள் சுவாரசியமாக இருக்கின்றன. இவை நிதி மேலாண்மையை சிறுவர்களுக்கு எளிதில் புரிய வைக்கின்றன. இது தவிர வங்கி சேவையை எவ்வாறு பயன்படுத்துவது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை எவ்வாறு மேற்கொள்வது, கடன் அட்டையை எப்படி சரியாக கையாள்வது போன்ற வீடியோக்களும் இளம் தலைமுறையினருக்கு நிதிசார் கல்வியை போதிக்கின்றன. இவ்வாறு செய்தால் 3 முதல் 5 வயதிலே குழந்தைகளுக்கு உணவு வீணாவது, தண்ணீர் வீணாவது, மின்சாரம் வீணாவது போன்றவை எல்லாம் புரிந்துவிடும். வளங்களை சேமிப்பதன் மூலம் வாழ்க்கையில் பணம் விரயம் ஆவதை தடுத்து, அதை எவ்வாறு சேமிக்கலாம் என தெரிந்து கொள்வார்கள். சிக்கனம் வீட்டைக்காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
vinoth.r@hindutamil.co.in