ஊடக உலா - 14: டிரென்டிங் செய்திதான் நல்ல செய்தியா?

ஊடக உலா - 14: டிரென்டிங் செய்திதான் நல்ல செய்தியா?
Updated on
2 min read

செய்திகளைப் பார்ப்பவர்களும், படிப்பவர்களும் இன்றைய சமூக ஊடக காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதால், அதை மக்களுக்கு கொண்டு செல்கிறவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உற்றுநோக்குதல் நலம். ஊடகத்துறையில் சேர விரும்பும் இளையோர் இப்போதிலிருந்தே இந்த கண்ணோட்டத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும். முதன்மையான ஊடகங்கள் எல்லா செய்திகளையும் வெளியிடுவதில்லை. செய்திகளின் முக்கியத்துவத்தினைப் பொறுத்து அவை பதிப்பிக்கப்படுகின்றன.

ஆனால், இன்று இணையத்தின் அசுர வளர்ச்சியும், கைப்பேசிகளின் ஊடகப் பயன்பாடும் அதிகரித்து விட்டதால், அனைவராலும் ஒரு ஊடகமாகச் செயல்பட முடிகிறது. இவர்கள் உள்ளடக்க தயாரிப்பாளர் (Content Generator) எனப்படுகிறார்கள். ஒருகாலத்தில் நீங்கள் காணொளி வடிவில் ஒரு செய்தியை உருவாக்க வேண்டும் எனில், அதற்கு ஒரு நல்ல கேமரா, மைக், வெளியில் ஒலிக்கும் சப்தங்களை உள்வாங்காத ஸ்டுடியோ, விளக்குகள் என பலவும் தேவை. அந்த காணொளியை எடுத்து முடித்த பிறகு, அவற்றை எடிட் செய்ய ஒரு தரமான எடிட்டிங் மென்பொருள் தேவை, அதுவும் உயர் ரக மென்பொருள் கொண்ட கணினி மிக அவசியம்.

ஆனால், இன்றைய நிலை என்ன? இவை எதுவும் தேவையில்லை. ஒரு நல்ல கைப்பேசி உங்களிடம் இருந்தால் போதும், ஒரு அருமையான காணொளி செய்தியைத் தயாரித்துவிடலாம். இந்த சூழலைத்தான் உள்ளடக்க தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் எத்தகைய செய்திகளைக் கொடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அவர்களின் காணொலி பலராலும் பார்க்கப்படுகிறது. அது உண்மை செய்தியாகவும் இருக்கலாம், போலி செய்தியாகவும் இருக்கலாம்.

எவரும் வெற்றி பெறலாம்! - உள்ளடக்க உருவாக்கம் என்பது உங்கள் பார்வையாளரைப் பொறுத்தது. யார், எந்த காணொளியை அதிகம் பார்க்கிறார்கள், எந்த காணொளிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, போன்றவற்றைப் பொறுத்து அந்த காணொலி தயாரிக்கப்படுகிறது.‘டிரென்டிங்’ என்ற வார்த்தை இன்று பிரபலமாகிவிட்ட்து. ஊடகப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவருமே, இந்த டிரென்டிங்கை நோக்கி ஓட வேண்டியதாகிவிட்டது. காரணம், அதிகம் பேரால் பார்க்கப்படும் செய்தியால் மட்டுமே நாம் ‘லைம் லைட்டில்’ இருக்க முடியும் என்ற தவறான புரிதல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. கடந்த வாரம் ஒரு மாணவர் கேட்டார், எங்கோ உடன்குடியில் இருந்த ஜி.பி.முத்து இன்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

இது எப்படிச் சாத்தியமானது? இதற்கான பதில் அவருக்கேத் தெரியும். இருந்தாலும் என்னிடம் கேட்டார். இது ஏதோ, ஜி.பி.முத்துவைக் குறைத்து மதிப்பிடுவதான கேள்வி அல்ல. இந்த கேள்வியில் உள் அர்த்தம் மிக முக்கியமானது. இன்றைய சமூக ஊடகங்கள், இவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒரு காலத்தில் நகர்ப்புறத்தில் இருந்தால் மட்டுமே ஊடகத்தில் மிளிர முடிந்தது போய், இன்று நாட்டின் எந்த ஒரு மூலைமுடுக்கில் இருந்தாலும், வெற்றியாளர் ஆகலாம், என்பதற்கு இவரை போன்றவர்கள் சாட்சி.

உள்ளடக்கத்தை சந்தைப்படுத்துதல் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். நாம் நினைத்ததை எல்லாம் உள்ளடக்கமாக மாற்றுவது என்பது சரியான ஒன்றல்ல. காரணம் காலம் மற்றும் பணம் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே, உள்ளடக்கத்தை தயாரிக்கும் முன் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது அவசியம். அதற்காகவே பிபிசி உள்ளடக்கக் கையேட்டினை இலவசமாக வெளியிட்டுள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கையேடு துணை கொண்டு உங்களுடைய உள்ளடக்கத்தை மேம்படுத்தலாம். இதனை bbcstudios.com/media/3654/contentdeliverybook.pdf என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

(உலா வருவோம்)

கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in