தயங்காமல் கேளுங்கள் - 14: இடது கைப்பழக்கம் தவறா? 

தயங்காமல் கேளுங்கள் - 14: இடது கைப்பழக்கம் தவறா? 
Updated on
1 min read

“மத்தவங்கல்லாம் வலது கையை பயன்படுத்துற மாதிரி, நான் இடது கையை பயன்படுத்துறேன். அம்மா, அப்பா, டீச்சர்ஸ் எல்லாருமே இதை மாத்திக்க அட்வைஸ் பண்றாங்க. ட்ரை பண்ணப் பண்ண டென்ஷன்தான் ஆகுது... ஆனா, மாத்திக்க முடியலையே. இடது கையை உபயோகிக்கிறது தவறா டாக்டர்?" - எட்டாம் வகுப்பு வருணின் வேதனை மிகுந்த கேள்வி இது. ஆனால், கேள்வி கேட்ட வருணுக்கு இல்லை இந்த பதில்.

வருணின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஏன் நம் அனைவருக்குமான பதில் இதோ: பொதுவாக, மனிதர்கள் அவர்களது கைகளை நான்கு விதமாக பயன் படுத்துவதுண்டு. அவை நமக்குப் பழக்கமான வலது கை பழக்கமுடையவர்கள் (Right handedness), இடது கை பழக்கமுடையவர்கள் (Left handedness), இரண்டு கையையும் பயன்படுத்தும் பழக்கமுடையவர்கள் (Ambidexterity) மற்றும் கலப்பு கை பழக்கமுடையவர்கள் (Mixed handedness) என்பவை ஆகும். இவற்றுள் இடது மற்றும் வலது கையை பயன்படுத்துவது பற்றி இயல்பாகவே நமக்குத் தெரியும். எந்த வித்தியாசமும் இல்லாமல் இரண்டு கையையும் சமமாக பயன்படுத்துபவர்களை இருகை பழக்கம் உள்ளவர்கள் என்று குறிப்பிடுவது போல், சில வேலைகளுக்கு வலது கையையும், சில வேலைகளுக்கு இடது கையையும் தேவைக்குத் தகுந்தாற்போல கைகளை மாற்றி மாற்றி பயன்படுத்துபவர்களை ‘கலப்பு கைப்பழக்கம்' (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance) உள்ளவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதில் நம்மில் பெரும்பான்மையினர் வலது கைப்பழக்கம் உடையவர்கள்தான்.

அதேநேரம் நம்மிடையே பத்தில் ஒருவர், அதாவது, 10-12 சதவீதத்தினர் இடது கைப்பழக்கம் உள்ளவர்களாகவும், மிகக் குறைவானவர்கள் மட்டுமே மற்ற இரு வகைகளுடனும் காணப்படுகின்றனர். ஆனால், எல்லோரும் வலதுகையை உபயோகிக்கும்போது ஏன் சிலர் மட்டும் இடது கைக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தெரியுமா? அதற்கு மூளைதான் காரணம் என்கிறார்கள். அதாவது பார்க்க ஒரே உருவமாகத் தோன்றும் நமது மூளை, உண்மையில் தனக்குள்ளே இடது-வலது என இருபிரிவுகளாகத்தான் (hemispheres) இயங்குகிறது.

இதில் மூளையின் இடதுபகுதி, உடலின் வலது பக்க இயக்கங்களையும், வலது பகுதி, உடலின் இடதுபக்க இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக 90 சதவீதத்தினருக்கு, இடதுபக்க மூளை, அதிக திறன் வாய்ந்ததாக (dominant hemisphere) உள்ளதால் இவர்கள் பயன்படுத்துவது வலது கை என்றால் மீதி 10 சதவீதத்தினருக்கு மூளையின் வலது பாகம் அதிக திறன் வாய்ந்ததாக இருப்பதால், இவர்கள் இடது கைக்காரர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களிடம் அதிகமாக இடது கைப்பழக்கம் காணப்
படுகிறது.

(இடது கைப்பழக்கம் குறித்து தொடரும்)

கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in