

ரீல்ஸ், யூடியூப் போன்ற இன்றைய சமூகவலைத்தளங்களின் காலத்தில் சிறுவர்கள்கூட பணம் சம்பாதிக்கும் செய்திகளை கேள்விப்படுகிறோம். ஒரு பக்கம் ‘கண்டண்ட்’ உருவாக்குபவராகப் பணம், மறுபக்கம் வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போன், வாட்ஸப் பயன்படுத்தி சிறிய அளவு பணத்தை ‘பாக்கெட் மணியாக’ சம்பாதிக்கலாம் என ஆசை விளம்பரங்கள் மாணவர்களை நோக்கி வருகின்றன. இதில் சில உண்மை என்றாலும் பெரும்பாலானவை போலியாகப் பணத்தைப் பறிப்பதாக உள்ளது. அதிலும் கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு நிறைய ஆன்லைன் வேலைகள், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தி போலிகளும் வந்துவிட்டனர்.
ஆன்லைனில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முன் பணம் கொடுக்க யோசிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் ஐந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும், ஓரிரு மாதங்களில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் என வருவார்கள். இது ஒரு வகை. இதன் அடிப்படை பலபேரிடம் மிகக் குறைந்த பணத்தை வசூல் செய்து அதில் முதல் மாதம் அல்லது இரண்டு மாதங்கள் சில ஆயிரம் ரூபாயை உங்களுக்குச் சம்பளமாகக் கொடுப்பது போல் கொடுத்து உங்கள் நண்பர்கள் பலரைச் சேர வைத்தபின் ஓடிவிடுவார்கள்.
அடுத்து மாதம் பத்தாயிரம் ரூபாய் என வலைவிரித்து மாதம் 500 அல்லது 1000 ரூபாய் கொடுத்து உங்களிடம் வேலை மட்டும் வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுவார்கள். நீங்கள் அவர்களுக்கு அந்த இரண்டு மாதத்திற்குச் செய்து கொடுத்த வேலையே அவர்களுக்கு சில ஆயிரங்களைச் சம்பாதிக்க உதவி இருக்கும்.
அடுத்து உங்கள் கைப்பேசியில் ஏதாவது‘ஆப்’களை இன்ஸ்டால் செய்யச் சொல்லுவார்கள். பணம் எதுவும் கேட்டிருக்கமாட்டார்கள். அல்லது 500 ரூபாய்க்கும் குறைவான பணத்தையே கேட்டிருப்பார்கள். ஆனால், உங்கள் தகவல்களைத் திருடுவதன் மூலம் அவர்களுக்கு லாபம் உள்ளது.
தகவல் தரகு கேள்விபட்டதுண்டா? - என் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்று நீங்கள் உங்களைக் குறைவாக மதிப்பிடலாம். நூறு தொலைபேசி எண்களேனும் உங்களுடைய அலைபேசியில் சேமித்து வைத்திருப்பீர்களா? அது போதும். அந்த தொலைபேசி எண்கள் மூலம், சில ஆயிரம் எண்களை எடுத்துவிட்டால் போதும். சந்தையில் அந்த தகவலை விற்கலாம். இதைத்தான் தகவல் தரகு (Data Brokerage) என்பார்கள்.
அடுத்து அந்த ஆப், உங்கள் செல்போன் தகவல்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். அதனால்தான் இலவச படம் பார்க்க, இந்த மாதிரியான பார்ட் டைம் வேலைகள் என உங்களை எந்த ஆப்பை இலவசமாகத் தரவிறக்கம் செய்யச் சொன்னாலும் செய்யாதீர்கள். அடுத்து நாம் இதில் உள்ள சரியான வேலைகளைப் பற்றி பார்ப்போம். இதுநாள்வரை ஆபத்தான பகுதிகளைப் பற்றிப் பார்த்தோம். இனி நேர்மறையான பக்கங்களை புரட்டுவோம்.(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com