

இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்றதுடன் நாடு திரும்பிய டாக்டர் சாம்புநாத் டேயை இந்தியாவில் பரவிவந்த காலராதான் வரவேற்றது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் ப்ளேக் நோய் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களை (black death) ஒருபக்கம் பலியெடுத்துக் கொண்டிருந்தபோது, சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலம் பரவிய காலரா நோய் (blue plague) மறுபக்கம் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிலும் அதீத வயிற்றுப்போக்கின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை வேட்டையாடத் தொடங்கியது காலரா.
காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை ஏதுமின்றி கொத்து கொத்தாக மடிவதைக் கண்ட டாக்டர் சாம்புநாத் டே, தனது கவனம் முழுவதையும் காலரா நோக்கி திருப்பினார். தான் பணிபுரிந்த நீல்ரத்தன் சர்கார் மருத்துவக் கல்லூரியின் சிறியதொரு ஆய்வகத்தில் இரவும் பகலும் அயராது உழைத்து, ‘rabbit intestinal loop model' கோட்பாட்டை இயற்றினார். காலரா கிருமிகள் ரத்தத்தில் விஷம் போலப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று அதுவரை நம்பப்பட்ட, நுண்ணுயிரியல் துறையின் தந்தையான ராபர்ட் காக்கின் முடிவுகளை மறுத்தார் சாம்புநாத். விப்ரியோ காலரே பாக்டீரியாவின் எண்ட்ரோ-டாக்சின் வகை நஞ்சுகள் ரத்தத்தில் பரவாமல், குடலிலிருந்து மட்டுமே செயல்படுகிறது என்ற தனது ஆராய்ச்சி முடிவை 1953-ல் தீர்க்கமாக முன்வைத்தார்.
பல ஆராய்ச்சிகளுக்கு வித்து: இது குறித்து பிரசித்தி பெற்ற 'Nature' இதழில் 1959-ல் அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை பிரசுரமானது. அதில் காலரா டாக்சின்களுக்கு எதிரான டாக்சாயிடுகளை (toxoid) செயற்கையாக உருவாக்கி, அவற்றை தடுப்பூசியாக வழங்கினால் காலரா நோயைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று எழுதினார். இந்த ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில்தான், காலரா சிகிச்சைக்கான மருந்துகளும் தடுப்பூசிகளும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அது மட்டுமின்றி செல் உடற்கூறியல் (cellular physiology), உயிர்வேதியியல் (biochemistry), தடுப்பு மருத்துவயியல் (immunology) ஆகிய துறைகளில் பெரும் தாக்கத்தை இவரது ஆராய்ச்சிஏற்படுத்தியது. அவதியுற்ற பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களுக்கு ஓஆர்எஸ் (oral rehydration salt) எனும் உப்புக்கரைசல் வழங்கப்பட்டதும், அதன்மூலம் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டதும் கூட அதற்குப் பிறகு தான்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட பிறகுதான், தான் பயின்ற கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்று டாக்டர் சாம்புநாத் பணியாற்றத் தொடங்கினார். காலரா நோய் மட்டுமன்றி வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அனைத்து நோய்த்தொற்றுகளிலும் அதன் பிறகு கவனம் செலுத்திய அவர், தனது விடுமுறை, பசி, தூக்கம், குடும்பம் ஆகிய அனைத்தையும் பின்தள்ளி, தனது அறிவியல் பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ‘போஸ் ஆய்வகத்தில்' நள்ளிரவு தாண்டியும் டாக்டர் சாம்புநாத் ஆய்வுகள் மேற்கொண்டதை இன்றும் நினைவுகூருகின்றனர் அக்கல்லூரியின் உதவி ஆய்வாளர்கள்.
எத்தனை பட்டங்கள் வந்தபோதும்! - அத்தகைய ஆய்வுகளில் ஈ.கோலி, சிகல்லா ஆகிய சீதபேதி பாக்டீரியாக்களின் செயல்பாடுகளையும், எல்டார் வகை வேறுபட்ட காலரா பாக்டீரியாவையும் எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கிப்பாய்ந்த டாக்டர் சாம்புநாத், நூற்றுக்கணக்கான நுண்ணுயிரியல் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தார். தொடர்ந்து, இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர்ஆஃப் சயின்ஸ் (D.Sc) எனும் உயரிய பட்டத்தையும் 1962-ல் அவருக்கு வழங்கியது.
பட்டங்கள் பல பெற்றபோதும், டாக்டர் சாம்புநாத்தின் முக்கிய நோக்கமே காலரா நோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதும் காலரா இல்லாத உலகை உருவாக்குவதுமாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்த சர் ராய் கேமரூன் மற்றும் மாமனார் எம்.என்.டேயின் மரணங்களும், அரசாங்கத்தின் அங்கீகாரமின்மையும் அவரை கையறுநிலைக்குத் தள்ள, ஒருகட்டத்தில் மன அழுத்தத்துடன் ஆராய்ச்சிகள் அனைத்தையும் நிறுத்தினார். மருத்துவம் பயிற்றுவிப்பதை மட்டுமே மேற்கொண்டவர் 1973 -ல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வும் பெற்றார்.
டாக்டர் சாம்புநாத் டே 1959-ல் எடுத்துரைத்த காலரா டாக்சின்களைக் கொண்டு பின்னாளில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டதும், நோய் அதிகம் காணப்படும் இடங்களில் எல்லாம் தக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, காலரா நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் வரலாறு. ஆனால் இவையனைத்திற்கும் மூல காரணமாக விளங்கிய சாம்புநாத் டே எந்தவொரு அங்கீகாரமும் இன்றி, தனது பணி ஓய்வுக்குப் பிறகு, தனது இல்லத்திலேயே சிறிய ஆய்வகம் ஒன்றை வைத்து நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சையளித்து வந்தார்..
உலகப்புகழ் நோபல் நிறுவனம் டாக்டர் சாம்புநாத்தை காலரா நோய் குறித்து சிறப்புரை ஆற்ற 1978-ல் அழைத்தபோது, "ஏற்கெனவே புதைக்கப்பட்ட என்னை குழியிலிருந்து வெளியே எடுத்துள்ளது நோபல் நிறுவனம்" என்று வேதனையுடன் கூறியுள்ளார். என்றாலும் 46வது நோபல் கருத்தரங்கில் டாக்டர் சாம்புநாத் டேயின் உரை பெரிதளவு கொண்டாடப்பட்டது. பிரதிபலன்கள் எதையும் எதிர்பாராமல் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிகளுக்கென தன்னையே ஒப்படைத்த டாக்டர் சாம்புநாத் டே, 1985-ல் 70 வயதில் இயற்கை எய்தினார். இப்போதும் கூட காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட காலரா நோய்ப் பரவலின் போதும்தடுப்பூசிகளும், ஓஆர்எஸ்ஸும், மருந்துகளும் வழங்கப்பட்டு உடனடியாக நோய்கட்டுக்குள் வைக்கப்பட்டது. உலகெங்கும் இதேபோல பல இடங்களிலும், டாக்டர் சாம்புநாத் டேயின் கனவு மெய்ப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.(மகத்துவம் தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com