

தன்னுடன் பயின்ற மாணவனுடன் ஒருவருக்கு கணித போட்டி. யார் கணிதத்தில் வல்லவர் என்பதை நிரூபிக்கக் காகிதம் கொண்டோ கரும்பலகையிலோ போட்டி நடைபெறவில்லை. மாறாக ஒண்டிக்கொண்டி குஸ்தி இட்டனர். இப்படிப்பட்ட போட்டியால் யார் வல்லவர் என்று எப்படி கண்டறிய முடியும்? ஆம் அதுதான் நடந்தது. ஒருவரின் மூக்கு கிழிந்து உடைந்தது. அப்போது அவருக்கு சுமார் 20 வயதிருந்திருக்கலாம். மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவர் உலோகத்திலான மூக்கு போன்ற அமைப்பை வைத்துக்கொண்டே படாதபாடுபட்டு வாழ்ந்தார். மூக்கு உடைபட்டால் என்ன அவருக்கு மூளை சரியாகவே செயல்பட்டது. யார் இவர்? வானியல் ஆய்வாளர் டைகோ பிராஹே (Tycho Brahe 1546-1601).
சொந்த தீவு கிடைத்தது: பிராஹேவின் குழந்தை பருவத்திலேயே அவரது தந்தைக்கும் மாமாவுக்கும் இடையே ஒரு விசித்திரமான ஒப்பந்தம் ஏற்பட்டது. மாமாவிற்கு குழந்தையில்லாததால் டைகோ அப்பாவிற்கு குழந்தையை மாமாவிற்குத் தந்துவிட வேண்டும் என்பதுதான் அது. ஆனால், பிராஹே பிறந்ததும் பெற்றோர் மறுத்துவிட்டனர். எனவே பிராஹேவை அவரது மாமா கடத்தினார் என்று சொல்லப்படுகிறது. பிராஹேவின் வளர்ப்புத் தந்தையான ஜொர்சஸ் பிராஹே கடலோடி. இவர் டென்மார்க்கின் இரண்டாம் பிரெட்ரிக் அரசரைக் காப்பாற்ற தனது உயிரை ஈன்றார். இதனால் அரசர் இவர்களது குடும்பத்துக்கு நன்றிக்கடன் பட்டவரானார். தனது ஆட்சிக்கு உட்பட்ட பல கோட்டைகளை காட்டி அவற்றை எதை வேண்டுமானாலும் தனதாக்கிக் கொள்ள சொன்னார். பிராஹேவுக்கு எதுவும் பிடித்தமானதாக இல்லை. இறுதியாக ஹ்வன் (Hvan) தீவை தேர்வு செய்து அதனை பெற்றுக்கொண்டார். பின் அந்த தீவை தனது சொந்த நாடாக மாற்றினார். இதில் ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையம், உலைக்களம், காகித ஆலை அச்சகம், நிலவறை உள்ளிட்டவற்றை அமைத்தார். இங்கேயே பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசின் ஆதரவை இழைக்க நேரிட்டதால் ஜெர்மனியில் உள்ள பிராக் பகுதிக்குக் குடியேறினார். அங்கும் பலவிதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
சிஷ்யனாகக் கிடைத்த கெப்ளர்: அந்நாளில் புவி மையக்கோட்பாடுதான் நம்பப்பட்டது. பிறகு கோபர் நிக்கஸ் சொன்ன சூரிய மையக்கோட்பாட்டிற்கான ஆதாரங்களை பிராஹே திரட்டினர். காம்பஸ் மற்றும் மூலைவிட்டத்தினை மட்டும் வைத்துக்கொண்டு கண்ணால்வானை உற்றுநோக்கியே பிராஹே பலவற்றைக் கண்டறிந்தார். சுமார் 1000 நட்சத்திரங்களை அட்டவணைப்படுத்தினார். வால் நட்சத்திரங்கள் வானில் தொடர்ந்து சுழன்று வருபவை என்பதையும் இவர் கணக்கீடுகளின் மூலம் கண்டறிந்தார். காசியோபியா நட்சத்திரக் கூட்டத்தில் புதிய விண்மீன் ஒன்றையும், நிலவின் பாதையில் ஏற்படும் சில மாறுபாடுகளையும் கண்டறிந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஞ்ஞானி கெப்ளரை பணியில் அமர்த்தினார். இவரதுஆய்வுகளை அடிப்படையாக வைத்து பின்னாளில் கெப்ளர் பல கோட்பாடுகளைக் கண்டறிந்தார். இறப்பின் விளிம்பில் Ne frusta vixisse videar என்று சொன்னதாக கெப்ளர் பதிவு செய்துள்ளார். இதன் பொருள் நான் எனது வாழ்க்கையை வீணாக செலவிடவில்லை என்றே நினைக்கிறேன் என்பதாகும். பிராஹேவின் மரணத்துக்கு பின்னர் ஹ்வன் தீவில் அரும்பாடுபட்டு அவர் உருவாக்கிய அனைத்தையும் அன்று இருந்தவர்கள் தரைமட்டமாக்கினர். கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com