வெற்றி நூலகம்: பூதத்திற்கு லூசி வரைந்த படுக்கை!

வெற்றி நூலகம்: பூதத்திற்கு லூசி வரைந்த படுக்கை!
Updated on
2 min read

உலகப் புகழ்பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வரும் சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம், “நூலகத்தில் ஓர் எலி”. இது உலக நாடோடிக் கதைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் மொத்தம் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலினை வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு நூல் என்கிற உணர்வை, எந்த இடத்திலும் ஏற்படுத்தவில்லை. மிக எளிமையான எழுத்துநடை. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும், “லூசி வரைந்த பூதம்”, “புத்தகங்களை நேசிக்கும் நாய்”, “நூலகத்தில் ஓர் எலி”, “வாசிக்கக் கற்றுக் கொண்ட நாய்” உள்ளிட்டவை மிகவும் என்னை ஈர்த்தன.

இரண்டே பக்கங்கள் கொண்ட “லூசி வரைந்த பூதம்” கதையைப் படிப்பவர்கள் சிறு குழந்தைகளைக் கூடுதலாகக் கவனிக்கத் தொடங்குவார்கள். இந்தக் கதையில் இரண்டு உண்மைகளை உணர முடியும். ஒன்று குழந்தைகளின் கற்பனை உலகை அறிந்து கொள்ளலாம், மற்றொன்று அவர்களுக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வழியையும் காணலாம்.

திருப்புமுனை ஓவியம்: குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அவர்களின் உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா, இந்நூலினை வாசியுங்கள். குழந்தைகள் எது வரைந்தாலும் அதைக் கிறுக்கல்கள் என்று வசைபாடாமல் அவர்களின் திறமையை வளர்க்க வேண்டும். கிறுக்கல்கள் ஓவியங்களாக ஓரு நாள் மாறும். இந்தக் கதையில், லூசி வரைந்து கொண்டே இருக்கிறாள். பூதத்திற்கு என்னென்ன தேவை என்று அவளுக்குத் தெரிகின்றது. இறுதியாக அவள் என்ன வரைகிறாள் தெரியுமா? அதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அந்த ஓவியம்தான் கதையை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது.

லூசிக்கு தூக்கம் வரவில்லை. நான் வரையப் போகிறேன் என்று ஒரு பூதம் வரைகிறாள். பூதமும் லூசியும் விளையாடுகின்றனர். இருவரும் தாவிக் குதித்து விளையாடியதும் லூசிக்கு களைப்பாக இருக்கிறது. “பூதம் நீ தூங்கப் போ” என்கிறாள். பூதத்திற்காக ஒரு படுக்கையை வரைந்து கொடுக்கிறாள். ஆனால், பூதம் படுக்கைக்குப் போக மாட்டேன் என்கிறது. “எனக்குப் பசிக்கிறது” என்று உறுமுகிறது. ஒரு மாமிச மலையை வரைகிறாள். மாமிச உருண்டைகளை அள்ளி வாயில் போட்டதும் தாகம் என்கிறது பூதம். ஒரு வாளியில் தண்ணீர் இருக்கும் படத்தை வரைந்தாள். தண்ணீர் குடிக்கிறது. பாத்ரூம் படத்தை வரைகிறாள். பாத்ரூம் போய்விட்டு வந்தது பூதம். இருவரும் மீண்டும் விளையாடுவோமா என்றது பூதம். இல்லை படுக்கைக்குப் போ என்றாள் லூசி. ஆனால், போக மறுத்தது. குளிர் என்றது. பைஜாமா வரைந்தாள். பயம் என்றது. கரடி பொம்மை வரைந்தாள். இருட்டு என்றது நிலா வரைந்தாள். அதற்குப் பிறகும் பூதத்திற்குத் தூக்கம் வரவில்லை. இறுதியாக உனக்கு தூக்கம் வர இது உதவும் என்று புத்தகத்தை வரைந்தாள்.

புத்தகத்தைப் பார்த்ததும் பூதம் மகிழ்ந்தது. லூசி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தாள். கதையைக் கேட்டுக் கொண்டே பூதமும் தூங்கியது. கதைமுடிந்தது. இந்தக் கதையைக் குழந்தைகளிடம் கொடுத்து வாசிக்க வைக்கலாம். மேலும் லூசியைப் போல் வரையவும் சொல்லலாம். குழந்தைகளின் கற்பனைத் திறனை விரிவுபடுத்த இயலும். இந்நூலின் மற்ற கதைகளையும் வாசிக்க, வேறொரு அனுபவத்தைப் பெற முடியும்.

கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, மாதிரிப் பள்ளி, திருப்பத்தூா், திருப்பத்தூா் மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in